நாளிதழ்களில் இன்று: மாநகராட்சி பள்ளி 30 கோடி ரூபாய் வாடகை பாக்கி
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பட மூலாதாரம், Newspaper
தி இந்து (தமிழ்) - `30 கோடி ரூபாய் வாடகை பாக்கி`
புது வண்ணாரப்பேட்டையில் துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் மாநகராட்சி பள்ளிக்கு ரூ.30 கோடி வாடகை பாக்கியை செலுத்துமாறு துறைமுக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் அப்பள்ளி மூடப்படுமோ என்று பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து (தமிழ்) நாளிதழ்.

பட மூலாதாரம், தி இந்து
"சென்னை புது வண்ணாரப்பேட்டை சிபிடி காலனி பகுதியில் துறைமுகத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு காமராஜர் ஆட்சிக் காலத்தில் வாடகை அடிப்படையில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி கடந்த 1963-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்பகுதியில் துறைமுகப் பணியாளர்களின் குடியிருப்புகள் ஏராளமாக இருந்ததால், அந்தப் பள்ளியில் 3 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தனர். அந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்தது. அங்கு தற்போது செயல்படும் மழலையர் வகுப்பு, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி அனைத்திலும் 589 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இதற்கிடையில், நில மேலாண்மை கொள்கையை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2014-ல் திருத்தி அமைத்தது. அதில், துறைமுகத்துக்கு சொந்தமான இடங்களில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளைக் குத்தகை அடிப் படையில் நடத்த, சந்தை விலையில் வாடகை நிர்ணயித்து, அதில் 75 சதவீதம் வரை சலுகை அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆண்டுக்கு ரூ.1.83 லட்சமாக இருந்த இந்தப் பள்ளியின் வாடகை ரூ.66 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதை குறைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது." என்று விவரிக்கிறது அந்த செய்தி.

’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ - `நியூட்ரினோவுக்கு அனுமதி`

பட மூலாதாரம், facebook
மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வழங்கிய செய்தி ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குழு இத்திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ளது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி - `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்த முடிவு`
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்த முடிவு செய்து தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம் மேற்கொண்டு இருப்பதாக முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images
காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற் கான திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இதை பாராளுமன்றத்திலும், தமிழகத்திலும் பல்வேறு வகைகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள இந்த 6 வாரக் காலக்கெடு, 29-ந் தேதியன்று முடிகிறது.இந்தநிலையில் கடந்த 9-ந் தேதியன்று காவிரி நதிநீர் பங்கீட்டைப் பெறும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை, மத்திய நீர் வளத்துறை அமைச்சக அதிகாரிகள் அழைத்துப் பேசினர்.அப்போது, ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. அதைத் தொடர்ந்து கர்நாடகா அரசு தனது எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தை அந்த மாநில தலைமைச் செயலாளர் மூலமாக பதிவு செய்தது.இந்தநிலையில் காவிரி நீர்ப் பங்கீட்டை மேற்பார்வை செய்யும் ஒரு மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கிடையே தமிழக அரசு தனது பங்காக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் தனது தரப்பு கோரிக்கை மனுவை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் சில அதிகாரிகள் இன்று டெல்லிக்கு செல்கிறார்கள் என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி - `இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நகை, பணம் கொள்ளை`
சென்னை விருகம்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இரும்புக் கதவில் துளையிட்டு நகை, பணம் கெள்ளையடிக்கப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. `விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் தரை மற்றும் முதல் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்படுகிறது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஊழியர்கள் திங்கள்கிழமை காலை வங்கியைத் திறந்தனர். அப்போது வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறையின் இரும்பு கதவு ஒரு ஆள் செல்லக் கூடிய அளவில் துளையிடப்பட்டிருப்பதும், தனி நபர் பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது என்று விவரிக்கிறது அந்த செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - 'ஸ்டெர்லைட் எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்`

பட மூலாதாரம், TWITTER/TN YOUNGSTERS TEAM
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தில் எ.குமாரெட்டியார்புரத்தை சேர்ந்த கிராம மக்கள் திங்கட்கிழமை போராட்டம் நடத்தியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி. கிராமமக்கள், ஸ்டெர்லைட் நிறுவனத்தால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












