நானும் ஸ்டீஃபனும் - ஸ்டீஃபன் ஹாக்கிங் குறித்து ஓர் இந்திய விஞ்ஞானியின் நினைவலைகள்

தனது 76வது வயதில் காலமாகியுள்ள இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மற்றும் இந்திய அறிவியலாளர் ஜெயந்த் நராலிகர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரே சமயத்தில் படித்தவர்கள்.

ஸ்டீஃபன் ஹாக்கிங் (இடது) மற்றும் ஜெயந்த் நாராலிகர்

பட மூலாதாரம், Getty Images / Marathi Science Council

படக்குறிப்பு, ஸ்டீஃபன் ஹாக்கிங் (இடது) மற்றும் ஜெயந்த் நாராலிகர்

அங்கு நடைபெற்ற அறிவியல் கருத்தரங்குகளில் ஹாக்கிங் மற்றும் ஜெயந்த் ஆகியோர் ஒன்றாக கலந்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இருவரும் சேர்ந்து டேபிள் டென்னிஸ் விளையாடும் அளவுக்கு நட்புடன் இருந்தனர்.

ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிய தனது நினைவலைகளை பிபிசியின் ஆர்த்தி குல்கர்னி இடம் பகிர்ந்துகொண்டார் ஜெயந்த் நராலிகர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நானும் ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் ஒரே சமயத்தில் படித்தோம். அவர் என்னைவிட ஓரிரு ஆண்டுகள் இளைய மாணவர். ஸ்டீஃபன் மிகவும் எளிய மாணவர். அப்போது அவரைப் பற்றி முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, மலைக்க வைக்கும் அளவுக்கு அறிவியல் சிந்தனைகளை அவரது மூளை மற்றும் மனதில் இருந்து வெளிப்படுத்தினார்.

ராயல் கிரீன்விச் அப்சர்வேட்டரி 1961ஆம் ஆண்டில் ஓர் அறிவியல் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அங்குதான் நாங்கள் முதன்முதலில் சந்தித்துக்கொண்டோம். அப்போது அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். நானும் அப்போது ஒரு மாணவனாக இருந்தாலும், அங்கு உரையாற்ற எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

நான் பேசியபோது என்னிடம் ஒரே மாணவர் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்தான் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்

பட மூலாதாரம், Rex Features

அண்டவியல், பெரு வெடிப்புக் கோட்பாடு உள்ளிட்டவை குறித்து என்னிடம் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றபோதுதான் அவருக்கு இந்த பிரபஞ்சம் குறித்த அளவற்ற ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன். அவருடைய கேள்விகள், அவற்றின் மையப்பொருள் ஆகியவை குறித்து நான் சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.

அந்த கருத்தரங்கு நடந்த சமயத்தில் நாங்கள் இருவரும் டேபிள் டென்னிஸ் விளையாடினோம். அதில் நான் வெற்றிபெற்றேன்.

அப்போது அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை. அதனால், அவர் கேள்விகள் கேட்பதை யாராலும் தடுக்க முடியவில்லை. மோட்டார் நியூரான் நோய் அவருக்கு பிறப்பிலேயே வந்ததல்ல. அவரது 21ஆம் வயதில்தான் அது கண்டறியப்பட்டது. அவர் தனது உடலியல் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொண்டு, தனது தடைகளைக் கடந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த மாநாட்டுக்கு பிறகு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக ஸ்டீஃபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

அவர் மனதில் என்ன உள்ளது என்பதை அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். அவர் கேள்விகளை மட்டுமே கேட்பவர் என்று நான் முன்னர் நினைத்திருந்தேன். ஆனால், அவர் பதில்களையும் தனது முனைவர் பட்ட ஆய்வின்போது கண்டறிந்தார். 'விரிவடையும் பிரபஞ்சத்தின் பண்புகள்' (Properties of expanding universe) எனும் தலைப்பில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். கருந்துளைகள் பற்றிய ஆய்வில் அவர் பெரும் பங்காற்றினார். கருந்துளைகள் பற்றிய அறிவியல் விதிகளை உருவாக்கினார்.

அதற்கு முன்பு வரை கருந்துளைகள் அனைத்தையும் தங்கள் ஈர்ப்பு விசையால் ஈர்த்துக்கொள்ளும் என்று கருதப்பட்டது. ஆனால், அவை கதிர்வீச்சை வெளியிடும் என்பதை அவர் கண்டறிந்தார். அது பிரபஞ்சம் குறித்த பல உண்மைகளை கண்டறிய உதவியது.

நானும் ஸ்டீஃபனும் - ஸ்டீஃபன் ஹாக்கிங் குறித்து ஓர் இந்திய விஞ்ஞானியின் நினைவலைகள்

பட மூலாதாரம், Getty Images

நாங்கள் கேம்பிரிட்ஜில் அறிவியல் குறித்து நிறைய பேசியுள்ளோம். அது எப்போதுமே விவாதமாக இருந்ததில்லை. கருத்துப் பகிர்வாக மட்டுமே இருந்தது.

ஸ்டீஃபன் ஹாக்கிங் நிறைய கூறுவார். 'கடவுள் என்ற ஒன்று இல்லை. கடவுள் இந்த பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை,' என்று ஒரு முறை அவர் கூறினார்.

'நாம் வாழும் உலகுக்கு வேறு ஒரு உலகம் இருக்கலாம், ' என்று அவர் கணித்தார். அதை ஒரு கணிப்பாகவோ அனுமானமாகவோ நாம் பார்க்க வேண்டும்.

ஸ்டீஃபன் ஹாக்கிங் இடமோ நம்மிடமோ அதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் அவரது ஆர்வத்தையும் அவர் எழுப்பிய கேள்விகளையும் நாம் மதிக்க வேண்டும்.

உடல் நலக் குறைபாட்டால், ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது இறுதி ஆண்டுகளில் அறிவியல் சொற்பொழிவாற்ற முடியவில்லை. ஆனால், பிற வழிகளில் உலகெங்கும் உள்ள பிற மக்களை அவர் அடைந்தார்.

அவரால் பேச முடியாவிட்டாலும், புகழ்பெற்ற அவரது சிந்தனைகளை பேச்சாக வெளிப்படுத்தும் கருவியால் அவர் பல கருத்துகளை வெளியிட்டார்.

இன்று அவரது அறிவியல் அணுகுமுறைகள் குறித்து நாம் விவாதிக்கிறோம். கடந்த 15-20 ஆண்டுகளில் அறிவியல் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தியுள்ளதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனினும், நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.

ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு எனது அஞ்சலிகளை உரித்தாக்குகிறேன். தடுக்க முடியாத அவரது கேள்விகளையும், அவருக்கு உண்டான அரிய நோயை அவர் வெற்றிகொண்டதையும் நான் என்றும் நினைவுகூர்வேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: