அடுத்து எது குறித்து எழுத போகிறார்? - மனம் திறக்கும் பெருமாள் முருகன்

- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
''இப்போது எனக்கு நானே தணிக்கை செய்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன். அதனால்தான் என் கதையின் கருப்பொருளாக வெள்ளாட்டை தேர்ந்தெடுத்தேன்'' என்கிறார் எழுத்தாளர் பெருமாள்முருகன்.
கடந்த ஆண்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய `பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை` நாவல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டிற்கு வெள்ளிக்கிழமை டெல்லி வந்தவரை சந்தித்து உரையாடினோம்.
மனிதர்கள் குறித்து எழுத அச்சம்
பூனாச்சி நாவலின் நாயகன் ஒரு வெள்ளாடு. அந்த வெள்ளாட்டை சுற்றித்தான் கதை நகர்கிறது. கதையும் இங்கு நிகழ்வது அல்ல. அசுரர்கள் உலகில் நகர்வது. தொடர்ந்து அவரது படைப்புகளில் ஆடு முக்கியப் பாத்திரமாக இடம் பிடிக்கிறது. இது குறித்து அவரிடம் கேட்டோம், அதற்கு அவர் பூனாச்சி நாவலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதையே விவரிக்கிறார், "கடவுள் குறித்து எழுத முடியாது. மனிதர்கள் குறித்து எழுத அச்சம். எனக்கு ஐந்து விலங்குகளை நன்கு தெரியும். அதில் பூனையும், நாயும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சனை தராத அப்பிராணி ஆடு. அதனால்தான் அதனை தேர்ந்தெடுத்தேன். எனக்கு நானே தணிக்கை செய்துகொள்ளத் தொடங்கிவிட்டேன்" என்கிறார்.
இது மாதொருபாகன் சர்ச்சைகளுக்குப் பின் எடுத்த முடிவா...? இனி சாமான்ய மனிதர்கள் உங்கள் கதைகளில் இடம்பிடிக்க மாட்டார்களா என்ற நம் கேள்விக்கு, அவர், "அப்படியெல்லாம் இல்லை. கதை தமக்கான கதாபாத்திரங்களை அதுவாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. 2015 ஆம் ஆண்டு, கதைகளுக்கான 15 கரு என்னிடம் இருந்தது. ஆனால், 2017 ஆம் ஆண்டில் அதில் எந்தக் கருவும் எனக்கு உத்வேகம் தரவில்லை. நான் எனது படைப்புகளை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டேன். காலம்தான் என் கதைகளையும், கதாபாத்திரங்களையும் தீர்மானிக்கிறது" என்றார் அவர்.

மாதொருபாகன் வெளிச்சம்
"எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்." - இது மாதொருபாகன் சர்ச்சைக்குப் பின் பெருமாள் முருகன் கூறியது. இப்போது எது உங்களை எழுத தூண்டியது? எது பெருமாள் முருகன் என்ற எழுத்தாளனை உயிர்த்தெழ வைத்தது? என்ற கேள்விக்கு, "நீதிமன்றத் தீர்ப்புதான்" என்கிறார் அவர்.
இது குறித்து மேலும் அவர், "தீர்ப்பின் இறுதி வரி - 'எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்' என்று இருந்தது. அதை எனக்கான கட்டளையாகதான் கருதினேன். அந்தக் கட்டளையை புறந்தள்ளுவது, இனியும் பேசாமல் இருப்பது, அனைவருக்கும் அவநம்பிக்கையை அளிக்கும் என்று நினைத்தேன். அதனால்தான், மீண்டும் எழுத முடிவு செய்தேன்". என்று தான் மீண்டும் எழுத முடிவு செய்ததன் பின்னணியை விளக்குகிறார் பெருமாள் முருகன்.
"மாதொருபாகன் சர்ச்சையால் என் மீது வெளிச்சம் பாய்ந்தது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை, என் படைப்பின் மூலமாக அடையாளப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

யார் இந்த பூனாச்சி?
"தன் மக்களை எந்தக் கணத்திலும் எதிரியாகவும் விரோதியாகவும் துரோகியாகவும் ஆக்கிவிடும் வல்லமை படைத்தது ராசாங்கம்" என்ற வரி பூனாச்சி நாவலில் வருகிறது. அதுமட்டுமல்லாமல், அரசு என்ற நிறுவனம், அதில் மக்களின் நிலை போன்ற விஷயங்கள் இதில் உட்பொருளாக இருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பூனாச்சி யார்? பெருமாள் முருகன்தானா அது? என்ற கேள்வியை முன் வைத்தபோது, "பூனாச்சி நான் அல்ல. நீங்கள் அரசு, அரசியலுடன் புரிந்துக் கொண்டால், அது உங்கள் புரிதல். எழுத்தாளன் தனது படைப்பை இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. நீங்கள் இவ்வாறாகப் பொருள் விளக்கம் கொள்வது உங்கள் சுதந்திரம்." என்கிறார்.
மேலும், பூனாச்சி குறித்து பெருமாள் முருகன் தனக்கும் தனது நண்பருக்கும் நடந்த உரையாடலை நினைவு கூர்கிறார், "நான் பூனாச்சியை எழுதி முடித்தவுடன், அதன் கையெழுத்துப் பிரதியை முதலில் என் நண்பருக்குதான் கொடுத்தேன். அதை படித்துபார்த்தவர், இதே கேள்வியைதான் கேட்டார். பூனாச்சி நீங்களா? இதில் ஏழு குட்டிகளை சுமந்த பூனாச்சி கல்லாகிவிடுவதாக விவரிக்கிறீர்கள். நீங்கள் மாதொருபாகன் வரை ஏழு நாவல்களை எழுதி இருக்கிறீர்கள். இது குறியீடா என்று கேட்டார். உண்மையில் அப்படியெல்லாம் இல்லை."
"நானும் கூச்ச சுபாவம் உடையவன். 15 வயது வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்து திரிந்தவன் போன்ற பூனாச்சியின் தன்மைகள் என்னிடம் இருக்கலாம். ஆனால், பூனாச்சி நானில்லை," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், facebook/பெருமாள்முருகன்
"எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்"
தொடர்ந்து எழுத்தாளர்கள் இப்போது தாக்கப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். யோசித்துப் பார்த்தால் இது உங்களிடமிருந்துதான் தொடங்கி இருக்கிறது இதனை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, "ஜனநாயக சமூகத்தில் எழுத்தாளர்களுக்கான சுதந்திரவெளி எவ்வளவு விரிவாகிறதோ, அந்த அளவிற்கு ஜனநாயகம் வலுவடையும். எழுத்தாளர்களுக்கான வெளி குறைவது, எழுத்தாளர்களைவிட ஜனநாயகத்திற்குத்தான் ஆபத்து," என்கிறார்.
"சாதாரணம் இங்கு அசாதாரணம் ஆகிறது"
ஒரு பேராசிரியராக உங்களுக்கும், மாணவர்களுக்குமான உறவு குறித்து உங்கள் மாணவர்கள் புத்தகம் தொகுத்து இருக்கிறார்கள். அதில் நெகிழ்ச்சியான சில சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆசிரிய - மாணவ உறவு எப்படி சாத்தியமானது? என்ற கேள்விக்கு, "சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது. எல்லா இடத்திலும் சாதியப் பாகுபாடு உள்ளது போல, கல்வி நிலையங்களிலும் உள்ளது. அப்படியான சூழலில், இயல்பான விஷயங்கள் இங்கு அசாதாரண உறவாகக் கருதப்படுகிறது. "முன் இருக்கையில் அமர வைப்பது போன்ற சாதாரண விஷயத்தைதான் நான் செய்தேன். அதைத்தான் அவர்கள் பெரிதாகக் குறிப்பிட்டு இருப்பார்கள்," என்கிறார்
"அடுத்த நாவல் என்ன?"
"அடுத்த நாவல் கழிமுகம். நகர வாழ்க்கையில் ஒரு மத்தியதர வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் என் அடுத்த நாவலின் பொருள். இன்னும் அது முழு வடிவம் பெறவில்லை. அதற்கு, இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம்," என்று தம் அடுத்த நாவல் குறித்துப் பகிர்ந்து கொண்டார் பெருமாள்முருகன்.
பிற செய்திகள்:
- பாஜக உறவு முறிவு: சந்திரபாபு நாயுடுவின் அரசியல் கணக்கு என்ன?
- இலங்கை: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது பற்றி நாடாளுமன்ற விவாதம்
- செளதிக்கு பிரிட்டன் போர் விமானங்கள் விற்பனை: ஒப்பந்தம் தயார்
- இந்தியாவுக்கு 6 அணு உலைகள் விற்க முயலும் பிரான்ஸ் அதிபர்
- இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












