ஷொராபுதீன் ஷேக் வழக்கில் மூன்று முறைகேடுகள்: குற்றம் சாட்டும் ஓய்வுபெற்ற நீதிபதி
ஷொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டதாக பதியப்பட்டுள்ள வழக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அலகாபாத் மற்றும் பாம்பே உயர் நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி அபய் திப்சே கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Jaltson AC
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவை திருத்த வேண்டும் அன்று அவர் கூறியுள்ளார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எச்.லோயா கடந்த 2014இல் மரணம் அடைந்தார். அவரது இறப்பு தொடர்பாகப் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
நீதிபதி லோயாவின் செல்பேசி அழைப்புகளின் பதிவையும் ஆராய வேண்டும் என்று கூறுகிறார் அபய் திப்சே.
பிபிசி மராத்தி சேவையின் அபிஜித் காம்ளேவிடம் பேசிய அவர் அதில் மூன்று முறைகேடுகள் இருப்பதாகக் கூறுகிறார்.
"விசாரணை நீதிமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவது முறையல்ல. அவருக்குப் பல ஆண்டுகள் பிணை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லையென்றால் அவர்களால் எளிதாகப் பிணை வாங்கியிருக்க முடியும். அவர்களின் பிணை வேண்டுகோள் பல முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லையென்று சிறப்பு நீதிமன்றம் கூறியது உள்ளது," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், CARAVAN MAGAZINE
அந்த வழக்கு குறித்து செய்தி வெளியிட ஊடகங்களை தடை செய்தது இரண்டாவது முறைகேடு என்கிறார் அந்த ஓய்வு பெற்ற நீதிபதி. "எந்த வழக்கும் நியாயமாக விசாரணை செய்யப்பட அதை வெளிப்படையாக நடத்த வேண்டும். ஊடகங்கள் செய்தி வெளியிடத் தடை வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்களே வேண்டுகோள் விடுத்ததும், அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும் வியப்பளிக்கிறது, " என்கிறார் அபய் திப்சே.
குஜராத் மாநிலத்தில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கடைசிவரை அதே நீதிபதி தொடர்ந்திருக்க வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டது. இந்த வழக்கில் முதல் நீதிபதியின் பதவிக்காலம் முடியும் முன்பே லோயா நியமிக்கப்பட்டார். முதல் நீதிபதி ஏன் மாற்றப்பட்டார் என்று தெளிவுபடுத்த வேண்டும்," என்று மூன்றாவது முறைகேடு பற்றி அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Jaltson AC
நீதிபதி லோயாவின் மரணம் பற்றி பேசும் அவர், "அந்த மரணம் இயற்கையானதா இல்லையா என்று எதுவும் சொல்ல மாட்டேன். எனினும் , அதில் சில சந்தேகங்கள் உள்ளன. பல சட்ட வல்லுநர்கள் இதில் விசாரணை கோருகின்றனர். எனவே அதை தெளிவுபடுத்த ஒரு விசாரணை வேண்டும்," என்கிறார் அவர்.
ஷொராபுதீன் ஷேக் வழக்கு என்றால் என்ன?
ஷொராபுதீன் ஷேக் குஜராத்தில் 2005இல் என்கவுண்டரில் கொல்லப்பற்றதாக குஜராத் காவல் துறை கூறுகிறது. எனினும், அது போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2010இல் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஷொராபுதீன் ஷேக்கின் சகோதரர் ரபாபுதீன் ஷேக்கின் வழக்கறிஞர் விடுதலை செய்ததற்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளனர். சுமார் 30 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












