இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர்
- எழுதியவர், சாகர் கஸர்
- பதவி, பிபிசிக்காக
இதுவரை கேள்விப்பட்டிராத புதுமையான நிகழ்வாக, புனேவை சேர்ந்த 48 வயது ஆசிரியை தனது மகன் இறந்தபிறகும் மனம் தளராமல் அவரது உயிரணுக்களை கொண்டு இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெறச் செய்திருக்கிறார்.

பட மூலாதாரம், Sagar Kasar
ராஜஸ்ரீ படேல் என்ற அந்த பெண்மணி திருமணமாகாத தனது மகனின் விந்தணுக்களை, 35 வயது கொண்ட ஒரு வாடகைத் தாயின் உதவியுடன் பேத்தி, பேரன் என இரு குழந்தைகளை பெற்றெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ராஜஸ்ரீயின் மகன் பிரத்மேஷ் புனேயில் சின்ஹாட் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார். படிப்பில் சூட்டிப்பான பிரத்மேஷ் முதுகலை பட்டப் படிப்புக்காக 2010ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றார்.
பிரத்மேஷுக்கு மூளையில் கட்டி இருப்பது 2013ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. நோய் முற்றிய நிலைய்ல் இருந்ததால் சிகிச்சைகள் பலனளிக்காமல் 2016இல் பிரத்மேஷ் இறந்தார். அவரது விந்தணுக்கள் பாதுகாப்பாக பதப்படுத்தப்பட்டிருந்தது.
தனது மகனின் அன்பை விரும்பிய தாய், அவருடைய உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களில் இருந்து அவரின் மறைவுக்கு பிறகு மகனை தந்தையாக்கினார். அதுவும் ஒன்றல்ல இரண்டு குழந்தைகள்.
ராஜஸ்ரீ படீலுடன் பிபிசி நிருபர் உரையாடினார். அப்போது பேரிய ராஜஸ்ரீ, 'இழந்த என் மகன் பிரத்மேஷ் திரும்பிவிட்டான், ஒன்றுக்கு இரண்டாக. என் மகனின் மீது உயிராக இருந்தேன். அவன் மிகவும் புத்திசாலி. அவனுக்கு மூளையில் கட்டி இருப்பதாக தெரிந்தபோது ஜெர்மனியில் பொறியியல் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான்' என்று சொல்கிறார்.

பட மூலாதாரம், Sagar Kasar
'நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டதால் பிழைக்க வைப்பது கடினம் என்று கூறிய மருத்துவர்கள், அவனுக்கு கீமோதெரபி மற்றும் பிற சிகிச்சைகளை தொடங்குவதற்கு முன்பே விந்தணுக்களை பாதுகாத்து வைக்குமாறு அறிவுறுத்தினார்கள்' என்று அவர் மேலும் சொன்னார்.
தனது மரணத்திற்கு பிறகு விந்தணுக்களை பயன்படுத்தும் உரிமையை தாய்க்கும், சகோதரி த்யானஸ்ரீக்கும் கொடுத்தார் திருமணமாகாத பிரத்மேஷ். மகனை பற்றிய கவலையில் இருந்த ராஜஸ்ரீக்கு அப்போது இதன் முக்கியத்துவம் தெரியவில்லை.
தனது மகனை மீட்டுக் கொடுக்கும் வழி இது என்று தெரிந்துக் கொண்ட அவர், தனது மகனின் வாரிசை பெற விரும்பினார்.

பட மூலாதாரம், Sagar Kasar
குடும்பத்தை சேராத பெயரறியா நன்கொடையாளரிடம் இருந்து கருமுட்டை பெறப்பட்டு, உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட பிரத்மேஷின் விந்தணு சேர்த்து செயற்கை கருத்தரித்தல் முறையில் கரு உருவாக்கப்பட்டது. பிறகு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் கருவில் வைக்கப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது 27 வயது மகன் பிரத்மேஷ் இறந்தபோது துக்கம் அனுஷ்டிக்க மறுத்த ராஜஸ்ரீ, வாடகைத் தாய் மூலம் தனது மகனை உயிர்பிக்கமுடியும் என்று உறுதியுடன் நம்பினார்.
தனது விடமுயற்சியினால், பிப்ரவரி 12ஆம் தேதியன்று தனது மகனின் இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியானார் 48 வயது ராஜஸ்ரீ. ஆண் குழந்தைக்கு ப்ரத்மேஷ் என்ற தனது மகனின் பெயரையும், கடவுளின் கொடை என்ற பொருள் கொண்ட 'ப்ரீஷா' என்ற பெயரை பெண் குழந்தைக்கும் வைத்திருக்கிறார் ராஜஸ்ரீ.
தொழில்நுட்பத்தின் மூலம் தனது மகனின் வாரிசுகளை தன்னிடம் கொண்டுவந்திருக்கிறார் ராஜஸ்ரீ. விந்தணுக்களை ஜெர்மனியின் விந்து வங்கியில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்தார் அவர். அதே நேரத்தில் செயற்கை கருத்தரித்தல் (IVF) நடைமுறைகளுக்காக புனேயில் இருக்கும் சஹ்யாத்ரி மருத்துவமனையை அணுகினார் ராஜஸ்ரீ.

பட மூலாதாரம், Sagar Kasar
சஹ்யாத்ரி மருத்துவமனையின் IVF வல்லுநர் மருத்துவர் சுப்ரியா புரானிக் இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்று கூறுகிறார். IVF நடைமுறைகள் வழக்கமானதாகவே இருந்தாலும், ஒரு தாய் தனது மகனை எப்படியாவது திரும்ப பெற விரும்பி, அதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டது ஆச்சரியமானது என்று அவர் சொன்னார்.
"கர்ப்ப காலம் முழுமையிலும் அவர் அது பற்றி மிகவும் நேர்மறையான எண்ணங்களையே கொண்டிருந்தார்" என்று சுப்ரியா புரானிக் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












