ரஜினியின் பாதை ஆன்மிக அரசியலா? காவி அரசியலா?: கேள்வி எழுப்பும் கமல் ஹாசன்

ஆன்மிக அரசியலா? காவி அரசியலா?

பட மூலாதாரம், Getty Images

தனக்கும், ரஜினிக்கும் இடையே தேர்தல் கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தால் தேர்தல் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 04.20 மணிக்கு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கமல் ஹாசன் தனது உரையை ஆற்றினார்.

எதுவும் சீராக இல்லை

பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் தமிழகத்தில் தற்போது எதுவும் சீராக இல்லை என்றும், இன்னும் காலம் கடக்கக்கூடாது என்ற தொலைநோக்கோடு தான் அரசியல் பயணம் புறப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிராமங்களை தத்தெடுக்கும் கமல் - ஹார்வர்டில் எடப்பாடி அரசு மீது கடும் விமர்சனம்

தனது உண்மையான நோக்கம் தமிழகத்தின் சாதாரண நிலையை மாற்றிக் காட்டுவதே என பேசிய கமல், தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் சீரற்ற கொள்கைகளை திருத்துவதே முக்கியம் என்றும், மக்கள் நலனில் அக்கறையற்றவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்.

மக்கள்நலத் திட்டங்களில் அலட்சியப்போக்கு

தமிழகத்தின் மொத்த வருவாய் நிலை பற்றாக்குறையாக உள்ளது என்று தனது உரையில் சுட்டிக்காட்டிய கமல் ஹாசன், 2016 - 17 ஆம் ஆண்டில் அகில இந்தியளவில் தமிழகம் நிதிநிலைப் பற்றாக்குறையில் மூன்றாம் இடத்தை வகித்தது என்றும், இதற்கு அரசின் வீண் செலவுகள், திட்டமிடாத நிதிச்சுமைகள், மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தாத அலட்சியப்போக்கு ஆகியவை காரணம் என்றும் பட்டியலிட்டுள்ளார் கமல்.

அரசின் பொறுப்பற்ற தன்மை

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு பொறுப்பற்ற தன்மையுடன் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய கமல் ஹாசன், பல்லாண்டுகளாக நீர்நிலைகளை சீரமைக்காமல் ஒதுக்கியதால் தமிழக மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள்நலன் காத்தல் உள்ளிட்ட அம்சங்களில் தமிழக அரசு தனது கடமையைச் சரியாக செய்ததா என்பது கேள்விக்குறியே என்றும் கூறியுள்ளார்.

கிராமங்களை தத்தெடுக்கும் கமல் - ஹார்வர்டில் எடப்பாடி அரசு மீது கடும் விமர்சனம்

கிராமம் தத்தெடுப்பு

கிராமங்கள் புதுவடிவமெடுத்தால் அது நாட்டையே மாற்றும் என்ற காந்தியடிகளின் வரியை சுட்டிக்காட்டிய கமல் ஹாசன், பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் 'நாளை நமதே' என்ற தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருப்பதாகவும், முன்னோடித் திட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்.

நிதி கேட்கவில்லை

தமிழகத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவது இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக அமைய வாய்ப்புள்ளதாகவும், உலகத்தமிழர்கள் தங்கள் ஆதரவை, வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

கிராமங்களை தத்தெடுக்கும் கமல் - ஹார்வர்டில் எடப்பாடி அரசு மீது கடும் விமர்சனம்

மேலும், தான் நிதி கேட்பதாக நினைத்துவிட வேண்டாம் என்று கூறிய கமல், தனது அரசியல் பயணம் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவ - மாணவியர் வாழ்த்துகளோடு தொடங்கவிருப்பதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

கமல் - பர்க்கா தத் உரையாடல்

தனது உரையை முடித்து கொண்டு மூத்த பத்திரிகையாளர் பர்க்கா தத்தின் கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல் ஹாசன். அப்போது, ஓட்டுக்கு பணம் வாங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், ஓட்டுக்கு பணம் வாங்கும்போதே, நாம் அழுக்கான அரசியலையும், அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்கும் உரிமையை இழந்துவிடுகிறோம் என்று தெரிவித்தார்.

தனக்கும், ரஜினிக்கும் இடையே தேர்தல் கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தால் தேர்தல் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

கருத்துகள் உடைய சமூக மனிதன்... வாக்கு வங்கி அரசியலுக்கு நுழைய முடிவு செய்த தருணம் என்ன என்று பர்க்கா தத்தின் கேள்விக்கு பதிலளித்த கமல், தான் மிகவும் மெதுவாக தன் முடிவுகளை எடுத்திருப்பதாகவும், இந்த அரசியலுக்கு நுழைய தனக்கு 37 ஆண்டுகளாகி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், தான் நற்பணி இயக்கம் தொடங்கியது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில்தான் என்றும், தான் இந்த சமூகத்தை மாற்ற விரும்பி தன் நற்பணி இயக்கத்தின் பத்து லட்சம் பேர் இத்தனை ஆண்டுகால சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இலக்குகள்

தன்னுடைய அரசியல் இலக்குகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல், தான் இயலாத இலக்குகளை முன்வைத்துக் கொள்ளவில்லை என்றும், தன்னால் இயன்றவையைதான் இலக்குகளாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆன்மிக அரசியலா? காவி அரசியலா?

ரஜினியுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல் , தனக்கும், ரஜினிக்கும் இடையே தேர்தல் கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தால், தேர்தல் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்றும், ஆனால் அவரோ தனது பாதை ஆன்மிக அரசியல் என்கிறார். அது ஆன்மிக அரசியலா? காவி அரசியலா என்று தெரியவில்லை என்றும் அவர் காவி அரசியலை முன்னெடுக்கமாட்டார் என்றே தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :