ரஷ்ய விமான விபத்து - இதுவரை தெரியவந்துள்ள விஷயங்கள் என்னென்ன?

ரஷ்ய விமான விபத்து - இதுவரை தெரியவந்துள்ள விடயங்கள்

பட மூலாதாரம், Air Team Images

ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கு அருகே பனிப்படர்ந்துள்ள இடத்தில் நேற்று பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை கண்டறிவதற்காக ரஷ்ய துப்பறிவாளர்கள் அந்த இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நேற்று மதியம் டோமோடெடோவோ என்ற இடத்திலிருந்து சாரடோவ் ஏர்லைன்ஸ் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் தரையை நோக்கி விழத் தொடங்கியதில் விமானத்தில் பயணம் செய்த 65 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்கள் உள்பட 71 பேரும் உயிரிழந்தனர்.

விபத்திற்கான காரணமாக வானிலை, மனித தவறுகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றை சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய விமான விபத்து - இதுவரை தெரியவந்துள்ள விடயங்கள்

பட மூலாதாரம், Reuters

தீவிரவாத தாக்குதல்

ஏ.என்148 என்ற இந்த விமானம், கஜகஸ்தான் உடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்தபோது நடந்த இந்த விபத்திற்கு தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இருக்குமா என்பதை பற்றி அதிகாரிகள் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

மாஸ்கோவின் தென்கிழக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்குனோவோ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், விமானம் எரிந்துக்கொண்டு கீழே விழுவதை மக்கள் பார்த்துள்ளனர். மேலும், தரையில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் பரந்த பரப்பளவில் சிதறி காணப்படுகிறது.

ரஷ்ய விமான விபத்து - இதுவரை தெரியவந்துள்ள விடயங்கள்

பட மூலாதாரம், Reuters

மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தங்களது வாகனங்களை தொலைதூரத்தில் விட்டுவிட்டு விபத்து நடந்த பகுதிக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது.

விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள இடத்தை கண்டறிவதற்கு குறைந்தபட்சம் ஒரு நாளாவது ஆகுமென்று விபத்து குறித்த விசாரணை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக காசேட்டா.ஆர்யூ என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவசர அழைப்பு

விபத்திற்குள்ளான விமானத்திலிருந்து எவ்வித அவசர அழைப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. விமானத்தின் பதிவு கருவிகளில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தின் காரணமாக தாங்கள் "பெரிதும் வருத்தமடைந்துள்ளதாக" அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு விமானப் பயணத்திற்கான பாதுகாப்பான வருடமாக அமைந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு நடந்துள்ளன முதல் வணிகம் சார்ந்த பயணிகள் விமான விபத்தாக இது கருதப்படுகிறது.

இதுவரை தெரிந்த விடயமென்ன?

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 14:27 மணியளவில் பறக்கத் தொடங்கிய விமானத்தின் தொடர்பு சில நிமிடங்களில் துண்டிக்கப்பட்டது.

ரஷ்ய விமான விபத்து - இதுவரை தெரியவந்துள்ள விடயங்கள்

பட மூலாதாரம், Flighradar24

பறந்துக் கொண்டிருந்த விமானம் நிமிடத்திற்கு 1000 மீட்டர்கள் வீதம் உயரம் குறைந்துக்கொண்டே தரையை நோக்கி விழுந்ததாக விமான-கண்காணிப்பு இணையதளமான பிளைட்ரேடார்24 தெரிவித்துள்ளது.

விமானம் எரித்துக்கொண்டே விழுந்ததை அப்பகுதியிலிருந்த மக்கள் பார்த்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"விமான போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு மரணம் விளைவிக்கும்" விபத்தை ஏற்படுத்தியதற்காக ஒரு குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணம் செய்தவர்கள் யார்?

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் குறித்த விவரங்கள் ரஷ்ய அரசின் அவசரகால அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

விமானத்தில் குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என அனைத்து வயதினரும் பயணம் செய்ததாக தெரிகிறது.

ரஷ்ய விமான விபத்து - இதுவரை தெரியவந்துள்ள விடயங்கள்

அவர்கள் பெரும்பாலும் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மற்றும் ஒரேன்பெர்க் பிராந்தியத்தை சேர்ந்தவர்களாவர்.

5,000 மணிநேரங்களுக்கு மேல் விமானம் ஓட்டிய அனுபவமுள்ள விமானியால் விமானம் இயக்கப்பட்டதாக ரியா-நோவோஸ்டி செய்தி முகமையிடம் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாரடோவ் விமான நிறுவனத்தை பற்றி தெரிந்த தகவல்கள்

மாஸ்கோவுக்கு தென்-கிழக்கே 840 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள சாரடோவ் என்ற நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது இந்த விமான நிறுவனம்.

விமானத்தில் விமானிகள் இருக்கும் பகுதியில், விமானி அல்லாத ஒருவர் இருந்தது திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதால், சாரடோவ் ஏர்லைன்ஸின் சர்வதேச விமான சேவைக்கு 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இந்த விமான நிறுவனம், 2016-ம் ஆண்டு மீண்டும் தனது சர்வதேச சேவையை தொடங்குவதற்கு முன்பு தனது கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.

இது ரஷ்ய நகரங்களுக்கு இடையே சேவையாற்றுகிறது. அத்துடன், ஆர்மீனியா மற்றும் ஜோர்ஜியாவிற்கும் சேவை வழங்கி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :