மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மீது குற்றம் சுமத்தும் `சக்திமான்`
- எழுதியவர், பூமிகா ராய்
- பதவி, பிபிசி
இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்தில் தலைவராக பதவி வகித்து வந்த இந்தியாவின் முதல் சூப்பர்ஹீரோவாக அறியப்படும் முகேஷ் கன்னா தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தின் மீதான தமது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இந்த ராஜிநாமா இப்போது வரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்கிறார் கன்னா.
அவருடைய பதவிகாலம் வரும் ஏப்ரல் மாதம் முடியும் தருணத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளார் முகேஷ் கன்னா.
ஆர்வம் செலுத்தவில்லை
போதுமான பொருளாதார வசதிகளை அமைச்சகம் ஏற்படுத்தி தரவில்லை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மீதாம் குற்றஞ்சுமத்துகிறார் முகேஷ்.
அவர்,"குழந்தைகள் திரைப்படத்தை உருவாக்குவதில் இந்த அமைச்சகம் போதுமான ஆர்வம் செலுத்தவில்லை" என்கிறார்.

தான் முன்பே இது தொடர்பாக புகார் கூறியதாகவும், ஆனால் யாரும் இந்த புகாரில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறுகிறார் கன்னா.
முகேஷ் கன்னா `சக்திமான்` தொடரில் நாயகனாகவும் மற்றும் மஹாபாரதம் தொடரிலும் நடித்தவர்.
இந்த பதவியில் முன்பு இருந்தவர்கள் யாரும் குழந்தைகளுக்காக திரைப்படம் தயாரிப்பதில் பிரத்யேக கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கிறேன். வயது வந்தவர்களுக்காக உருவாக்கப்படும் திரைப்படங்கள் குழந்தைகள் பார்க்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் முகேஷ்.
தனது பதவிகாலத்தில் குழந்தைகளுக்காக எட்டு திரைப்படங்களை உருவாக்கியதாகவும், அமைச்சகத்திடம் அதிக நிதி ஒதுக்க கோரியதாகவும். ஆனால், அமைச்சகம் தமது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகிறார் `சக்திமான்` முகேஷ் கன்னா.

பட மூலாதாரம், Getty Images
நான் திரைப்படங்களை நேரடியாக விநியோகம் செய்ய விரும்பினேன். ஆனால், அவர்கள் அதில் அவர்கள் `ஒப்பந்தம்` முறையை பின்பற்றலாம் என்று கூறினார்கள். குழந்தைகளுக்கான திரைபடங்களே குறைவாக இருக்கும் நாட்டில், அதை எடுத்து செல்வதில் அதிக இடர்கள் இருக்கும் நாட்டில், ஒப்பந்த முறையினால் என்ன நிகழும்? என்று கேள்வி எழுப்புகிறார் தொண்ணூறுகளில் பிறந்த குழந்தைகளின் மானசீக நாயகனாக இருந்த இந்த சக்திமான நாயகன்.
"நான் திரைப்பட சங்கத்தின் தலைவராக இருந்த போதும், என்னால் அங்கு சுயமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அங்கு பெரிய பிரச்சனை நிதி ஒதுக்கீடுதான். 25 திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், நான்கு திரைப்படங்கள் தயாரிப்பதற்குதான் நிதி வசதி இருந்தது." என்கிறார் அவர்.
அனுபம் கேர், ராஜ்குமார் சந்தோஷி மற்றும் நீரஜ் பாண்டே என அனைவரும் இணைந்து குழந்தைகளுக்கான திரைப்படத்தை உருவாக்க விரும்பினார்கள். ஆனால், சங்கத்தில் போதுமான நிதி வசதி இல்லை என்கிறார் முகேஷ்.
முகேஷ், "குழந்தைகளுக்கு என்று பிரத்யேக திரைப்படங்கள் நம் சமூகத்தில் இல்லை. இதன் காரணமாகதான், அவர்கள் சில மோசமான தொடர்கள், அருவருப்பான திரைப்படங்களையும் பார்க்க நேரிடுகிறது" என்கிறார்.
ஏன் இந்த தாமதம்?
அமைச்சகம் உங்கள் ஒத்துழைக்கவில்லை என்று நினைத்தால், அதற்கு எதிர்வினை ஆற்றுவதில் ஏன் இந்த தாமதம்? ஏப்ரல் மாதம் பதவிகாலம் முடிய இருக்கும் தருணத்தில் இப்போது ராஜிநாமா செய்ய காரணமென்ன என்ற கேள்வியை முன் வைத்தோம்.

பட மூலாதாரம், Getty Images
அதற்கு பதில் அளித்த முகேஷ், "என்னிடம் 12 திரைப்படங்கள் இருக்கின்றன. அதற்கான, உரிய நிதியை ஒதுக்க வேண்டியது என் கடமை. கடந்த ஒரு வருடமாகதான் இந்த சிக்கல் அதிகரித்தது." என்றார்.
இங்கு திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க எந்த வழிமுறைகளும் அவர்களிடம் இல்லை. திரைப்படம் தயாரித்து கிடங்கில்தான் போட வேண்டும் என்று அங்கு நிலவும் பிரச்சனைகளை விவரிக்கிறார் முகேஷ்.
வேறு வழி
குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேறு வழி இல்லையா என்ற கேள்விக்கு, முகேஷ், "ஆன்லைன் உள்ளிட்ட வழிகள் உள்ளது. ஆனால், இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கத்திற்கு அது பயன்படாது. திரைப்படங்கள் வெற்றி அடைய வேண்டும். அப்போதுதான், குழந்தைகளுக்கான திரைப்படங்களும் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் புரிந்துக் கொள்வார்கள்."
மேலும் அவர், "வயது வந்தோருக்காக எடுக்கப்படும் திரைப்படங்களை குழந்தைகள் பார்பதைவிட கேடானது வேறொன்றுமில்லை. இந்த திரைப்படங்களினால், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன், எட்டாம் வகுப்பு மாணவன் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை அறிகிறான். இந்த போக்கு கேடு விளைவிப்பது" என்கிறார்.

பட மூலாதாரம், cfsindia.org
பிபிசி திரைப்பட சங்கத்தின் முன்னாள் தலைவர் அமொல் குப்தேவை தொடர்புக் கொள்ள முயற்சித்தது. ஆனால், இதில் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
குழந்தைகள் திரைப்பட சங்கத்தின் நிர்வாகி ராஜேஷ் கோலியை தொடர்பு கொண்டோம். இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க முடியாது என்று அவர் கூறிவிட்டார்.
அவர், "நாங்கள் அரசு ஊழியர்கள். இந்த விவகாரம் முகேஷ் கன்னா மற்றும் அமைச்சகத்திற்கு இடையிலான விவகாரம். இந்த சூழ்நிலையில், இதில் எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது. அவருடைய ராஜிநாமா இந்த நிமிடம் வரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில், அடுத்து என்ன என்று எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது" என்றார்.
மூத்த திரை விமர்சகரும், எழுத்தாளருமான கெளதம் கவுல், இது போன்ற குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னால் கேள்விபட்டதில்லை. அதே நேரம், முகேஷ் கன்னாவின் குற்றச்சாட்டுகளை புறந்தள்ள முடியாது.
மேலும் அவர், "திரைப்பட உலகில் நன்கு அறியப்பட்டவர் முகேஷ். அவர் தூர்தர்ஷனிடமோ அல்லது வேறு சேனல்களிடமோ பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். இது போன்ற ஆவணப்படங்களை ஒளிபரப்பும் எத்தனையோ தொலைக்காட்சிகள் இங்கு உள்ளன. ஆனால், ராயல்டி சிக்கல்கள் இங்கு தடையாக இருந்திருக்கலாம்."
வர்த்தக ரீதியாக திரைப்படங்களை விநியோகிப்பவர்கள் குழந்தைகளுக்கான திரைப்படங்களை விநியோகம் செய்ய அவர்கள் விரும்ப மாட்டார்கள். குழந்தைகள் பிரிவு என்று இல்லாமல் ஜங்கிள் புக் போல அனைவருக்குமான சினிமா தயாரிக்கலாம் என்கிறார் கவுல்.
குழந்தைகள் திரைப்பட சங்கம்
சுதந்திரத்திற்கு பின்னால் நேருவால் தொடங்கப்பட்டதுதான் இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம். 1955 ஆம் ஆண்டிலிருந்து, அது தன்னாட்சி மிக்க அமைப்பாகதான் செயல்பட்டு வருகிறது. 1957 ஆம் ஆண்டு நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில், இச்சங்கம் தயாரித்த ஜலாதீப் முதல் பரிசினை வென்றது.

பட மூலாதாரம், Getty Images
குழந்தைகள் மேம்பாட்டிற்கு உதவி செய்யும் வகையில் திரைப்படங்களை தயாரிப்பதுதான் இந்த சங்கத்தின் பணி. திரைப்பட சங்கத்தின் இணையதளம் தரும் தகவலின்படி, இது வரை 10 மொழிகளில் 250 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












