பாரதியார் பல்கலை. துணைவேந்தர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்பேரில், துணைவேந்தர் கணபதி மற்றும் வேதியியல் துறைத்தலைவர் தலைவர் தர்மராஜ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

துணைவேந்தர்

பட மூலாதாரம், www.b-u.ac.in

படக்குறிப்பு, துணைவேந்தர் கணபதி

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதியியல் துறையில், பயிற்சிக் காலத்தில் வேலை செய்துவரும் சுரேஷை, உதவி பேராசிரியராக பணி நியமனம் செய்வதற்கு, துணைவேந்தர் கணபதி லஞ்சம் கேட்டதாகவும், அவருக்கு வேதியியல் துறை பேராசியர் தர்மராஜ் தரகராக செயல்பட்டதாகவும், சுரேஷ் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரி ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விசாரணை நடந்துவருவதால், வழக்கு தொடர்பாக வேறுதகவல்களை தற்போது வெளியிடமுடியாது என்று லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுரேஷ் கொடுத்த தொகை எவ்வளவு, பணி நியமனம் செய்ய கேட்கப்பட்ட தொகை எவ்வளவு போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் இன்று(பிப் 03) இரவு கைது செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்தார்.

பாரதியார் பல்கலை

பட மூலாதாரம், www.b-u.ac.in

புகார் அளித்த உதவி பேராசிரியர் சுரேஷை தொடர்பு கொள்ள முடியவில்லை. துணைவேந்தர் கணபதி மற்றும் தர்மராஜ் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருவதால், அவர்களின் கருத்துகளைப் பெறமுடியவில்லை.

மார்ச்2016ல் துணைவேந்தராக பணியில் சேர்ந்த கணபதி முன்னதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத் துறையின் தலைவராக பணிபுரிந்தார்.

கடந்த இரண்டு வருட காலமாக பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றும் காலத்தில், கணபதி மீது எழுந்த புகார்களின் தொடர்ச்சியாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :