U19 கிரிக்கெட்: நான்காவது முறையாக உலகக் கோப்பை வென்றது இந்தியா - ஆஸ்திரேலியா படுதோல்வி

பட மூலாதாரம், AFP
நியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது.
நியூஸிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர்கள் கைக்கொடுக்காத நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ 75 ரன்களை சேர்ந்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியை சேர்ந்த மெர்லோ 76 ரன்களை எடுத்திருந்தார்.
பின்னர் 217 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் பிரித்வி ஷாவும், மஞ்சோட் கல்ராவும் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.

பட மூலாதாரம், AFP
கேப்டன் பிரித்வி 29 ரன்களில் அவுட்டானவுடன், களமிறங்கிய சுப்மன் கில் 31 ரன்களில் வெளியேற, தொடக்க வீரரான மஞ்சோட் கல்ராவும், ஹர்விக் தேசாயும் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய வீரர் மஞ்சோட் கல்ரா கடைசி வரை அவுட்டாகாமல் அடித்த சதமும், தேசாய் அடித்த 47 ரன்களும் இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழந்திருந்த நிலையில் 220 ரன்களை அடித்து உலகக்கோப்பையை வெல்ல வித்திட்டது.
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி ஏற்கனவே கடந்த 2000, 2008 மற்றும் 2012 ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைகளையும் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டுக்கு 50 லட்ச ரூபாயும், அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களுக்கும் தலா 30 லட்ச ரூபாயும், அணியை சேர்ந்த மற்ற ஊழியர்களுக்கு தலா 20 லட்ச ரூபாயும் ஊக்கப் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- 'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட் வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்!
- சமூக ஊடகத்தில் பல ஆண்களுடன் நட்பு கொண்ட ஒரு பெண் #HerChoice
- அமெரிக்கப் பெண்களுக்கு டாக்ஸி ஓட்டிய பிரபல பத்திரிகையாளர்
- அமெரிக்கா: சிறப்பு விசாரணை குழு மீதான மெமோ பற்றி டிரம்புக்கு எச்சரிக்கை
- 50 ஆண்டு முன்பு காணாமல் போன குழந்தைகளைத் தேடி தொழிற்சாலையில் தோண்டும் பணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












