கட்டணம் செலுத்தாததால் சாதிய அவதூறு, தலித் மாணவி தற்கொலை
ஐதராபாத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதுடன், பிற மாணவர்கள் முன்னிலையில் சாதி ரீதியாக இழிவாகப் பேசப்பட்டதால், 14 வயது தலித் மாணவி ஒருவர், வியாழக்கிழமை, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த புகாரில் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், iStock
ஐதராபாத்தில் உள்ள மல்காஜ்கிரியில் உள்ள ஜோதி மாடல் ஸ்கூல் எனும் பள்ளியில் உயிரிழந்த சாய் பிரீத்தி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்திலும், தாய் ஒரு பல்பொருள் அங்காடியிலும் பணியாற்றி வருகின்றனர்.
தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதியுள்ள அந்த மாணவி, "என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் தேர்வெழுத பள்ளி என்னை அனுமதிக்கவில்லை," என்று எழுதியுள்ளார்.
"நேற்று காலை பள்ளிக்குச் சென்ற சாய் பிரீத்தி சற்று நேரத்தில் திரும்பி வந்துவிட்டார். கட்டணம் செலுத்தாததால் தன்னைத் தேர்வு எழுத ஆசிரியர் அனுமதிக்கவில்லை என்றும் சாதி ரீதியாக பிற மாணவர்கள் முன்னிலையில் அவதூறாகப் பேசினார் என்றும் கூறி அழுதார்," என்று கல்லூரியில் படிக்கும் அவரது அக்கா சாய் லதா பிபிசியிடம் கூறியுள்ளார்.
செல்பேசியில் காணொளி பார்த்துக்கொண்டிருந்த பிரீத்தி, லதா வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது தூக்கில் சடலாமாகக் தொங்கியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பிபிசியிடம் பேசிய மல்காஜ்கிரி காவல் ஆய்வாளர் கொமரய்யா, மாணவி தற்கொலை தொடர்பாக சந்தேக மரணம் மற்றும், பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை செய்து வருவதாகக் கூறினார்.
இது பள்ளிகளின் கட்டணத்தை வரைமுறைப்படுத்தாத அரசின் தோல்வி என்றும், 'பெண் குழந்தைகளை காப்போம்' என்று அரசு கூறுவது நடைமுறையில் இல்லை என்றும் ஐதராபாத் பள்ளிகள் பெற்றோர் கூட்டமைப்பின் இணைச் செயலர் வெங்கட் சாய்நாத் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












