சினிமா விமர்சனம்: ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது, இது என்ன மாதிரியான, வகையிலான படம் என்று புரியாததால் படம் குறித்து ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், படம் பார்த்த பிறகும் அதே மாதிரி தோன்றினால் எப்படி?

oru nalla naal paathu solren

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள மலைகிராமம் எமசிங்கபுரம். அங்கு வசிப்பவர்கள் திருடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள். அந்த கிராமத்தின் முக்கியப் பிரமுகரான எமன் (விஜய் சேதுபதி), அங்கிருந்து சென்னைக்கு வந்து கல்லூரியில் படிக்கும் சௌம்யாவைக் (நிஹரிகா) கடத்திச் செல்கிறார்.

சௌம்யா பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் ஹரீஷும் சதீஷும் (கவுதம் கார்த்திக், டேனியல் ஆப்) அவளைக் காப்பாற்றுவதற்காக எமசிங்கபுரத்திற்கேச் செல்கிறார்கள். அங்கு எமனுக்கும் சௌமியாவுக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. நாகரீகமான இளம் பெண்ணனான சௌம்யாவுக்கும் எமசிங்கபுரத்திற்கும் என்ன தொடர்பு, எமன் சௌம்யாவைத் திருமணம் செய்தானா என்பது மீதிக் கதை.

இயக்குனர் ஆறுமுகசாமிக்கு இது முதல் படம். அதில் இப்படி ஒரு வித்தியாசமான பின்னணியில் கதையை சொல்ல முயன்றது ரொம்பவுமே துணிச்சலான முயற்சி. ஆனால், அந்த முயற்சி முழுமையாகப் பலனளிக்கவில்லை.

oru nalla naal paathu solren

சௌம்யாவைத் திருமணம் செய்வதற்காக எமன் நகரத்திற்கு வருவது, சௌம்யா - ஹரீஷ் இடையிலான கல்லூரிக் காட்சிகள், எமன் - ஹரீஷ் இடையிலான காட்சிகள் என எல்லாமே மனதை எவ்விதத்திலும் கவராமல் மேலோட்டமாகவே நகர்கின்றன.

குறிப்பாக கல்லூரிக்குள் நடக்கும் கலைவிழா, அதில் நடக்கும்கூத்துகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது ஏதோ விளையாட்டுத்தனமாக எடுக்கப்பட்ட, அமெச்சூர் முயற்சி ஒன்றைப் பார்ப்பதுபோல தோன்றுகிறது.

இடைவேளைக்குப் பிறகு, படம் எமசிங்கபுரத்திற்கு படம் நகர்ந்த பிறகு சற்றுப் பரவாயில்லை. குறிப்பாக க்ளைமாக்ஸிற்கு முந்தைய அரை மணி நேரம் கலகலப்பாக நகர்கிறது. இருந்தாலும் படத்தின் பல இடங்களில் புதிதாக ஏதுமில்லாமல், நடந்த சம்பவங்களையே திரும்பத் திரும்ப பார்ப்பதைப்போல இருக்கிறது.

விஜய் சேதுபதியுடன் வரும் ராஜ்குமாரும் கவுதம் கார்த்தியுடன் வரும் டேனியலும் படம் நெடுக சிரிப்புமூட்டுகிறார்கள். இந்தப் படம் சற்றேனும் கலகலப்பாக நகர்வதற்கு இவர்களது நகைச்சுவைக் காட்சிகளே பிரதான காரணம்.

oru nalla naal paathu solren

படத்தில் இரண்டாவது ஹீரோவாக வரும் கவுதம் கார்த்திக்கின் பாத்திரம் ரொம்பவுமே குழப்பமானது. சில வருடங்களுக்கு முன்பாக தமிழில் வந்த திரைப்படங்களில் கதாநாயகிகள் அர்த்தமில்லாமல் சிரித்துக்கொண்டேயிருப்பார்கள். கவுதம் கார்த்திக் இந்தப் படத்தில் அதைத்தான் செய்கிறார்.

படத்தில் துவக்கத்திலும் இறுதியிலும் மட்டுமே பாடல்கள் இருக்கின்றன என்பது படத்தின் மற்றொரு பலம்.

oru nalla naal paathu solren

விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை மற்றுமொரு வித்தியாசமான கதாபாத்திரம். ஆனால், அதே மாதிரியான நடிப்பு. இடைவிடாமல் வசனம் பேசும் பேசும் ஒரு காட்சிக்கு திரையரங்கில் கைதட்டல் கிடைக்கிறது. நிஹரிகா கொனிதெலாவுக்கு நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை என்றாலும் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகம்.

சாகசமும் நகைச்சுவையும் நிறைந்த ஒரு படத்தைத் தருவது இயக்குனரின் நோக்கம் என்று படுகிறது. ஆனால், படத்தில் சாகசம் பெரிதாக இல்லை. நகைச்சுவைக் காட்சிகளும் அந்தத் தருணத்தில் மட்டுமே சிரிக்கவைக்கும் அர்த்தமற்ற நகைச்சுவைக் காட்சிகள்.

ஆகவே, அந்த நகைச்சுவை, அந்தத் தருணத்தோடு மறந்துவிடுவதால் முழுமையான நகைச்சுவைப் படத்தைப் பார்த்த அனுபவம் இந்தப் படத்தில் கிடைக்கவில்லை.

வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வுசெய்த இயக்குனர், சுவாரஸ்யமான காட்சிகளையும் யோசித்திருந்தால் ஒரு நல்ல நகைச்சுவைப் படம் கிடைத்திருக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: