காவல்துறையினர் திட்டியதால் தீக்குளித்த ஓட்டுநர் மணிகண்டன் மரணம்
சென்னையில் போக்குவரத்துக் காவல்துறையினர் தன்னைத் தாக்கி, ஆபாசமாகப் பேசியதாகக் கூறி தீக்குளித்த கார் ஓட்டுநர் மரணமடைந்தார். அவரைத் தாக்கிய காவல்துறை துணை ஆய்வாளர் தாமரைச்செல்வன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், facebook
புதன்கிழமை மாலையில் சென்னை வேளச்சேரி எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியில் போக்குவரத்து சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணிகண்டன் என்பவர் ஓட்டிவந்த காரை நிறுத்திய போக்குவரத்துக் காவலர்கள், அவர் சீட் பெல்ட் அணியாமல் வந்ததற்காக 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதையடுத்து காவலர்களுக்கும் மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின், தன் செல்போனில் காவலர்களைப் படம் எடுத்தார் மணிகண்டன். இதனால், அவரது செல்போனைப் பறித்துக்கொண்ட காவலர்கள், அவரைக் கடுமையாகத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
சிறிது நேரத்தில் அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்திற்குச் சென்ற மணிகண்டன் அங்கு பெட்ரோல் வாங்கிக்கொண்டு, தான் தாக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் வந்து பெட்ரோலை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
இதைப் பார்த்த காவலர்கள் அங்கிருந்து ஓடிவிடவே வேறு சில காவலர்கள் காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மணிகண்டனைச் சேர்த்தனர். அப்போது அங்கிருந்தவர்களிடம் பேசிய மணிகண்டன், காவலர்கள் தன்னை ஜாதியை வைத்துத் திட்டியதகாலும் குடும்பப் பெண்களை ஆபாசமாகப் பேசியதாலும் தீக்குளித்ததாகத் தெரிவித்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மணிகண்டன், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள பனவடலிச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் இருக்கின்றனர். மணிகண்டன் சென்னை தாம்பரத்தில் தங்கியிருந்து கார் ஓட்டுநராகப் பணியாற்றிவந்தார்.
சென்னையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீக்காயமடைந்திருந்த மணிகண்டனை மருத்துவமனையில் வந்து பார்த்த காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், சம்பந்தப்பட்ட இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த துணை ஆய்வாளர் தாமரைச் செல்வனை முதலில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார். பிறகு அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












