நாளிதழ்களில் இன்று: தமிழகத்திற்குத்தான் இதில் முதலிடம்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத் தந்தி:

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரனை நடத்தி வருகிறது. இந்த விசாரணை குறித்த செய்தி தினத் தந்தி நாளிதழில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. "நேற்று காலை 10.30 மணிக்கு சசிகலாவின் அண்ணன் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த உடல்நிலை பாதிப்பு குறித்து தெரியுமா? அது தொடர்பாக உங்களது தாயார் (இளவரசி) ஏதேனும் தெரிவித்துள்ளாரா ? அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்ப சிகிச்சை குறித்து தெரியுமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது" என்று செய்தி வெளியிட்டுள்ளது. அது போல ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசிய செய்தியும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

தின மணி:

ஆதார் குறித்து தலையங்கம் எழுதி உள்ளது தின மணி நாளிதழ். அந்த தலையங்கம், "ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிடும், செல்லிடப்பேசி செயலிழக்கச் செய்யப்படும் என்றெல்லாம் அச்சுறுத்தல் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தீவிரவாதிகளை அடையாளம் காணவும், சமூக விரோதிகளைக் கண்டுபிடிக்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்படுகிறது என்கிறது அரசு. அதற்காக, இந்தியாவிலுள்ள அத்தனை குடிமகன்களின் தனிப்பட்ட விவரங்களை அரசு அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு, இங்கே என்ன சர்வாதிகார ஆட்சியா நடைபெறுகிறது?" என்று கேள்வி எழுப்புகிறது அந்த செய்தி.

தி இந்து (தமிழ்)

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

சீனப் படைகள் ஊடுருவல் காரணமாக அருணாசல் எல்லையில் பதற்றம் நிலவுவதாக முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். எல்லையில் உள்ள சாலையை செப்பனிடுவதற்கு வாகனங்களுடன் சீனா வந்ததாகவும், இது தொடர்பாக எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் போலீஸாரிடம் தகவல் தெரிவித்ததாகவும் அந்த செய்தி விவரிக்கிறது. சாலையை செப்பனிவதற்காக வந்த டோஸர் வாகனத்தை இந்திய படைகள் கைப்பற்றியதாகவும் அந்த செய்தி விவரிக்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

பாதாள சாக்கடையில் இறங்கி இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் மாநிலங்களவையில் அளித்த தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா. "1993 ஆண்டிலிருந்து, இந்திய அளவில் 323 பேர் பாதாள சாக்கடையில் இறங்கி இறந்துள்ளார்கள். அதில் 144 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் 59 பேரும், உத்தர பிரதேசத்தில் 52 பேரும் இறந்துள்ளனர்" என்கிறது அந்த செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :