இந்தியா அடிமையாக இருந்தது 150 ஆண்டுகளா, 1200 ஆண்டுகளா?

    • எழுதியவர், பேராசிரியர் இர்ஃபான் ஹபீப்
    • பதவி, வரலாற்றாசிரியர்

அண்மை நாட்களில் சரித்திரம் குறித்த கருத்து வேறுபாடுகளும், வாத விவாதங்களும் பரவலாகி இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இந்தப் போக்கு காலம் காலமாக தொடர்வதுதான்.

மன்னராட்சியோ மக்களாட்சியோ எதுவாக இருந்தாலும் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்பவர்களின் விருப்பத்திற்கேற்ப சரித்திரங்கள் அவதாரம் எடுக்கின்றன. சரித்திரங்கள் தற்போது வரலாறாக இல்லை, புராணங்களாக மாறிவிட்டதாகவே சொல்லலாம்.

வரலாற்றை திரித்து முன்வைப்பதற்கான அடிப்படைக் காரணத்தை பொதுவாக இரண்டு வகைகளில் அடக்கிவிடலாம். இந்திய கலாசாரமே மிகவும் தொன்மையானது என்பது முதல் காரணம். ஆரியக் கோட்பாட்டை உலகம் நிராகரித்துவிட்டாலும், ஆரியர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தார்கள் என்பதும், இந்தியர்களே அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் காரணம் என்றும் நிரூபிக்க விரும்புவது இரண்டாவது காரணம்.

உலகில் முதன் முதலில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்தியர்களே என்பதற்கு சாட்சியாக விளங்குகிறார் விநாயகர் என்ற பிரதமர் நரேந்திர மோதியின் கூற்று நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஆரியர்கள் ஜெர்மனியில் இருந்து வந்த நாஜிக்கள் என்று கூறப்படுவது உண்டு. அதேபோலதான் இந்தியாவிலும் ஆரியர்கள் என்ற கோட்பாடும். உலகம் முழுவதும் சென்று கலாசாரத்தை வளர்த்தெடுத்தார்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள் சரித்திரத்தைத் திரித்துக் கூறுபவர்கள்.

'சுதந்திர இயக்கத்தில் நமக்கென்று ஒரு காதாநாயகன் இல்லையா?'

கி.பி 700க்கு பிறகு இந்தியா அடிமைப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது 1200 ஆண்டுகள் முகலாயர்களின் கீழும், பிறகு ஆங்கிலேயர்களின் கீழும் இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தது. அதாவது வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலேயே தங்கி இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்தார்கள்.

இதன் பொருள் என்ன? நீண்டகாலமாக பரம்பரை பரம்பரையாக, இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து சந்ததிகளுடன் வாழ்ந்த அரசர்களின் ஆட்சியை அந்நிய ஆட்சி என்று சொல்ல முடியுமா?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைத் தவிர இந்தியாவின் சொத்தும் வளமையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை. இந்தியாவின் செல்வங்கள் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதை 'Drain of Wealth' என்று பல ஆங்கிலேயே பொருளாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

சரித்திரத்தை திரிப்பவர்கள் முகலாய ஆட்சியாளர்களையும், ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் ஒரே தராசுத் தட்டில் வைத்துப் பார்க்கின்றனர். இதற்கான நோக்கம் என்ன? இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இவர்களின் பங்கு இல்லை என்பதால், அடிமைத்தனத்தை ஏன் 150 ஆண்டுகளாக சுருக்கிக்கொள்ளவேண்டும் என்பதாக இருக்கலாம்.

இவ்வாறு திரிப்பதால் இவர்களுக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கலாம். ஒன்று முஸ்லிம்களுக்கு எதிரான சூழலை உருவாக்குவதில் வெற்றிபெறலாம்.

இரண்டாவது சுதந்திர போராட்ட இயக்கத்தில் தங்களது பங்களிப்பு இல்லை என்பதை மறைத்துவிடலாம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் இவர்கள் உதாரணமாக காட்டும் அளவுக்கு காதாநாயகர்களே இல்லை.

சில சமயங்களில் சர்தார் படேல், பிறகு பகத் சிங் என ஒருசில கதாநாயகர்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடிகிறது. அதுசரி? பகத் சிங்கிற்கும் இவர்களுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா?

இவர்கள் முன்வைக்கும் கட்டுக்கதைகளுக்கு சரித்திரத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை.

மதம் மற்றும் பெருநிறுவன முழக்கம்: சிறந்த ஒப்பந்தம்?

பெருநிறுவனங்கள் மற்றும் மதத்தை பற்றி முழக்கமிடுவது வாக்குகளை சேகரிப்பதற்கு நல்ல உபாயமாக இருக்கலாம். ஆனால் அது எப்போதுமே அபயமளிக்காது, அபாயத்தில் போய் முடியும்.

சாதாரண மனிதன் மதம் என்ற பொறியில் எளிதில் சிக்கிவிடுகிறான், பெருநிறுவனங்களில் இருந்து பணம் கிடைத்துவிடுகிறது. 'Electoral Bond' (அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் ஒரு நிதிக்கருவி) கொண்டு வருவதற்கான அவசியம் என்ன?

இனிமேல் நிறுவனங்கள் Electoral Bondஐ வாங்கும்போது அது பற்றிய தகவல் நிறுவனத்தின் பங்கை வைத்திருக்கு சாமானியனுக்கு தெரியாது. அதாவது தான் பங்கு வைத்திருக்கும் நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்கியிருக்கிறது என்னும் அடிப்படை தகவல் பங்குதாரருக்கு தெரியாது.

இதுபோன்ற அரசியல் நுணுக்கங்கள் அனைத்தும் கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்றன.

பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்திய தாக்கமும் பாதிப்பும் சிறிய அளவிலான தொழில் செய்பவர்களுக்கு ஏற்பட்ட அளவு பெருநிறுவனங்களுக்கு ஏற்பட்டதா?

மூடிஸ் தர மதிப்பீடு நிறுவனத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி BAA-3இல் இருந்து BAA-2க்கு முன்னேறியுள்ளது. அதாவது தனியார் மற்றும் பெருநிறுவனத் துறை ஊக்கம் பெற்றிருப்பதை இது நிரூபிக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்படும் திரைப்படங்கள்

உண்மையிலுமே 'பத்மாவதி' திரைப்படம் கற்பனையானது என்றாலும், அந்த திரைப்படத்தின் விளைவு? முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் அதிகரிக்கிறது.

'பத்மாவதி' திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜி சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் கற்பனையானதே தவிர சரித்திரத்தின் அடிப்படையில் அல்ல, வரலாற்றில் காணப்படும் கணக்கிலடங்கா போர்களை கதைக்களமாக ஏன் தேர்ந்தெடுப்பதில்லை?

ராஜபுத்திரர்கள் மற்றும் ராணிகளை கதைமாந்தர்களாகவோ எதிர்மறையாகவோ சித்தரித்துக் காட்டினால் முதலுக்கே மோசம் விளைவிக்கும், தாக்குப்பிடிக்கமுடியாது. முஸ்லிம் அரசர்கள் அந்நியர்கள் என்றே போதிக்கப்பட்டு வந்திருப்பதால் அவர்களை எப்படி காட்டினாலும் பிரச்சனை இல்லை.

சாதியவாத போக்கு இன்றும் நம்மை விட்டுவிடவில்லை என்பதையே 'பத்மாவதி' திரைப்படம் தொடர்பான சர்ச்சைகள் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 'ராஜபுத்திரங்களின் பெருமை'க்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

அதுசரி, 'ராஜபுத்திரங்களின் பெருமை' என்றால் என்ன? ஒருபுறம் சாதிகள் இல்லையடி பாப்பா என்று முழக்கமிடுவோம், மறுபுறமோ சாதியின் பெருமையை மழுங்கடிக்காதீர்கள் என்று தூண்டிவிடுவோம்.

சரித்திர பின்னணி கொண்ட படங்கள் வசூலை வாரி வழங்கும் என்பதால் பெரும் பொருட் செலவில் திரைப்படங்கள் எடுக்கும் போக்கு வணிகரீதியானது. ஆனால், அதற்காக முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்துவிடுவது சரியா?

சரித்திரத்தை புனைந்து கற்பனையாக திரைப்படம் எடுக்கலாம், ஆனால் அது சக மனிதர்கள் இயல்பான வாழ்க்கையை கற்பனையில்கூட வாழமுடியாமல் செய்துவிடக்கூடாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: