மோதி ராஜிநாமா செய்ய வேண்டும் என வாஜ்பாய் கருதியது ஏன்?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி

நாடாளுமன்ற மக்களவையில் ஆங்கிலத்தில் ஹிரன் முகர்ஜியும், இந்தி மொழியில் அடல் பிஹாரி வாஜ்பாயும் சிறந்த பேச்சாளர்கள் என்று மக்களவை முன்னாள் சபாநாயகர் அனந்தசயனம் அய்யங்கார் ஒருமுறை குறிப்பிட்டார். (இன்று வாஜ்பாயின் 97-ஆவது பிறந்த நாள்).

இந்தப் பாராட்டை வாஜ்பாயின் நண்பர் அப்பா கடாடே அவரிடம் சொன்னபோது, அதற்கு உரத்த குரலில் பதிலளித்த வாஜ்பாய், "பிறகு ஏன் என்னை பேசவிடுவதில்லை?" என்று கேட்டார்.

அப்போது வாஜ்பாய், மக்களவையில் பின் வரிசை இருக்கையில் இருந்தவர் என்றாலும், நேரு வாஜ்பாயின் பேச்சையும் அவர் எழுப்பும் கேள்விகளையும் உன்னிப்பாக கவனிப்பார் என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று.

'Atal Bihari Vajpayee: A Man for All Seasons' என்ற புத்தகத்தை எழுதிய கிங்ஷுக் நாக், பிரிட்டன் பிரதமர் இந்தியா வந்திருந்தபோது வாஜ்பாயை அறிமுகம் செய்த நேரு, "இவர் எதிர்க்கட்சியின் வளர்ந்து வரும் இளம் தலைவர், இவர் எப்பொழுதும் என்னை விமர்சிப்பவர், ஆனால் எதிர்காலத்தில் பெரிய தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

நேருவின் காணமல் போன புகைப்படம்

உண்மையில் அரசியல் ரீதியாக நேருவை விமர்சித்து வந்த வாஜ்பாய் அவர்மீது மிகுந்த மரியாதையும் வைத்திருந்தார்.

1977ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்று அலுவலகத்திற்கு முதன்முதலாக வந்த வாஜ்பாய், நேருவின் புகைப்படம் சுவரில் காணாததை கவனித்தார். உடனே தனது செயலாளரை அழைத்து நேருவின் புகைப்படத்தை உரிய இடத்தில் மாட்டும்படி உத்தரவிட்டார்.

எதிர்கட்சியை சேர்ந்த நேருவின் புகைப்படம் அங்கிருப்பது வாஜ்பாய்க்கு பிடிக்காது என்று நினைத்தே அதிகாரிகள் அங்கிருந்து அதனை அகற்றியிருந்தார்கள்.

நேரு காலத்தில் வெளியுறவுக் கொள்கை

வெளியுறவு அமைச்சரின் நாற்காலியில் அமர்ந்த வாஜ்பாய், "இந்த நாற்காலியில் அமருவேன் என்று கனவுகூட காணவில்லை" என்று கூறினார்.

நேருவின் வெளியுறவுக் கொள்கைகளில் அடல் பிஹாரி வாஜ்பாய் பெரியளவில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.

பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக வாஜ்பாய் முன்னதாகவே தயாரிப்புகள் எதையும் பெரிய அளவில் செய்ததில்லை, ஆனால் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வேண்டுமாமானால் மட்டும் மிக கவனத்துடன் உரைகளை தயாரிப்பார் என்று அவரது தனிச் செயலராக பணிபுரிந்த சக்தி சின்ஹா கூறுகிறார்.

சக்தி சின்ஹாவின் கருத்துப்படி, "நாடாளுமன்ற நூலகத்தில் இருந்து புத்தகங்கள், பத்திரிகைகள், நாளிதழ்களை வரவழைத்து இரவு முழுவதும் அமர்ந்து உரைகளை தயாரிப்பார். அவர் முழு உரையை தயாரிக்காவிட்டாலும், அடுத்த நாள் மக்களவையில் பேச வேண்டியவற்றை முழுமையாக முடிவு செய்துவிடுவார்."

அருமையாக உரையாற்றும் திறன் கொண்ட வாஜ்பாய், ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று செங்கோட்டையில் உரையாற்றும்போது மட்டும் இயல்பாக உரையாற்றாமல், ஏன் எழுதி வைத்து படிக்கிறார்? என்ற கேள்விக்கு சக்தி சின்ஹா என்ன சொல்கிறார்?

செங்கோட்டை உரையில் கவனக்குறைவாக எதையும் பேசிவிடக்கூடாது என்ற அக்கறையே அதற்கு காரணம் என்கிறார் சக்தி. செங்கோட்டையை மிகவும் புனிதமான இடமாக நினைத்தார் வாஜ்பாய். "பிறர் எழுதிக்கொடுத்த உரையை அவர் படிக்கமாட்டார். அதிகாரிகள் கொடுக்கும் தகவல்களை மிகவும் கவனத்துடன் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்தி உரையை அவரே தயாரிப்பார்".

அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு நெருக்கமான லால்கிருஷ்ண அத்வானி ஒருமுறை பிபிசியிடம் பேசியபோது கூறியதை வாஜ்பாயின் பேச்சாற்றலுக்கு உதாரணமாகச் சொல்லலாம். 'அடல்ஜி உரையாற்றும்போது, அவரைப்போல பேசமுடியவில்லை என்று நான் மிகவும் தாழ்வு மனப்பான்மையில் உழல்வேன்'.

தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளியே பேசாத சங்கோஜி

அத்வானி மேலும் கூறுகிறார், "பாரதிய ஜனசங்கத்தின் தேசியத் தலைவராக நான்கு ஆண்டுகள் இருந்தபிறகு என்னை தலைமை ஏற்கச்சொன்னார் வாஜ்பாய். அதற்கு மறுத்து நான் சொன்ன பதில் என்ன தெரியுமா? 'ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திடையே உங்களைப் போல் என்னால் ஈர்க்கும் வகையில் பேசமுடியாது'".

" 'நீ நடாளுமன்றத்தில் நன்றாகத்தானே பேசுகிறாய் என்று அவர் சொன்னார். அங்கு பேசுவதற்கும் திரளான கூட்டத்தில் பேசுவதற்கும் வேறுபாடு இருக்கிறது என்று சொல்லி நான் மறுத்துவிட்டாலும், பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது. ஆனால் வாஜ்பாய் போல பேசமுடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை என்னிடம் எப்போதுமே இருந்தது."

இதில் சுவராஸ்யமான விடயம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் அருமையாக உரையாற்றும் வாஜ்பாய், தனிப்பட்ட முறையில் அதிகம் பேசாதவர், வெட்கப்படக்கூடியவர்.

"நான்கு அல்லது ஐந்து பேர் அவரைச் சுற்றி இருந்தால்கூட அவர் அதிகமாக பேசமாட்டார். ஆனால், மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்டு, சிந்தித்து கவனமாக எதிர்வினையாற்றுவார். நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மட்டுமே மனம்விட்டு பேசுவார். ஆனால் யாரைப் பற்றியும் புறம் பேசமாட்டார்" என்கிறார் சக்தி சின்ஹா.

நவாஸ் ஷெரீஃப் வாஜ்பாயிடம் என்ன சொன்னார்?

1978இல் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, பாகிஸ்தான் சென்ற வாஜ்பாய், அங்கு போஜ்ஜில் பேசப்படும் உள்ளூர் மொழி உருதுவில் உரையாற்றினார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆஹா சாஹி சென்னையில் பிறந்தவர், அவருக்கு உள்ளூர் வழக்கில் புழக்கத்தில் இருந்த உருது மொழி தெரியாததால், வாஜ்பாய் பேசியது அவருக்கு புரியவில்லை.

மற்றொரு சம்பவத்தை நினைவுகூர்கிறார் சக்தி சின்ஹா. "பிரதமர் வாஜ்பாய், நவாஜ் ஷெரீஃப்பை நியூயார்க்கில் சந்தித்தபோது இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் ஐ.நா பொதுசபையில் ஷெரீஃப் பேச வேண்டியிருந்தது. நேரமாகிவிட்டது, கிளம்பவேண்டும் என்று நவாஸ் ஷெரீஃபுக்கு துண்டுசீட்டு அனுப்பப்பட்டது. அதை வாஜ்பாயிடம் காட்டிய ஷெரீஃப் உத்தரவு தருகிறீர்களா என்று கேட்க சிரித்துக்கொண்டே உத்தரவு கொடுத்தார் வாஜ்பாய்.

எளிமை மற்றும் நேசமான தன்மை கொண்டவர் என்று புகழப்படுபவர் வாஜ்பாய். 47 ஆண்டுகளாக அடல் பிஹாரி வாஜ்பாய் உடன் இருந்த ஷிவ் குமார், அடல் பிஹாரி வாஜ்பாய் நன்றாக சமைப்பார் என்று சொல்லி வியப்பில் ஆழ்த்துகிறார்.

வாஜ்பாயை காக்க வைத்தார்…

வாஜ்பாய்க்கு கோபம் வருமா என்று கேட்டதற்கு அதுகுறித்து ஒரு சுவையான நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார் ஷிவ் குமார். "எண் 1, ஃப்ரோஷா சாலை வீட்டில் வாஜ்பாய் வசித்தபோது நானும் அங்கேயே தங்கியிருந்தேன். பெங்களூருவில் இருந்து தில்லி வரும் அவரை அழைத்துவர விமானநிலையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது".

"நேரமிருக்கிறது, ரீகல் திரையரங்கில் ஆங்கிலத் திரைப்படம் பார்த்துவிட்டு செல்லலாம்" என்று ஜனசங்கத்தின் ஜே.பி மாதுர் சொன்னார். அந்த நாட்களில் பெங்களூரு விமானங்கள் தாமதமாக வருவது வழக்கம். எனவே, நான் அவருடன் திரைப்படத்திற்கு சென்றுவிட்டேன்."

ஆனால் நினைத்ததற்கு மாறாக திரைப்படம் நீண்டதாக இருந்ததாக கூறும் ஷிவ்குமார், "அன்று பெங்களூரு விமானம் உரிய நேரத்திற்கு வந்துவிட்டது. விமானநிலையத்திற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. வீட்டின் சாவியோ என்னிடம் இருக்கிறது, என்ன செய்வதென்று புரியாமல் எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு பயந்துக்கொண்டே வீட்டிற்கு வந்தேன்".

"வீட்டிற்கு வந்தால், வீட்டில் இருந்த புல்வெளியில் தனது சூட்கேசுடன் அமர்ந்திருந்தார் வாஜ்பாய். தாமதத்திற்கு உண்மையான காரணத்தை பயந்து நடுங்கிக்கொண்டே சொன்னேன்" என்று இப்போது இயல்பாக சொல்கிறார் ஷிவ்குக்மார்.

வாஜ்பாயின் எதிர்வினை என்ன தெரியுமா என்று கேட்கும் அவர், "என்னையும் திரைப்படத்திற்கு கூட்டிக் கொண்டு போயிருக்கலாம் அல்லவா?" என்பதே அவர் பதில். "சரி, நாளைக்கு நாம் இருவரும் வேறொரு படத்துக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார். என்னுடைய தவறுக்கு திட்டாமல், சிரித்துக்கொண்டே சென்று விட்டார் வாஜ்பாய்."

எமர்ஜென்சியின்போது...

உணவுப்பிரியரான வாஜ்பாய், சமைப்பதிலும் வல்லவர். இனிப்புகள் உண்பதில் மிகவும் விருப்பம் கொண்ட வாஜ்பாய், எமர்ஜென்சி காலத்தில் பெங்களூரு சிறையில் இருந்தபோது, உடனிருந்த அத்வானி, ஷ்யாம்நந்தன் மிஷ்ரா, மது தண்டவதே என பலருக்கு கைப்பட சமைத்து கொடுப்பார்.

"வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை அவரைப் பார்ப்பதற்காக பலர் வருவார்கள். வருபவர்களுக்கு ரசகுல்லா, சமோசா போன்ற உணவுகள் வழங்கப்படும்" என்கிறார் சக்தி சின்ஹா.

"வாஜ்பாய்க்கு யாரும் ரசகுல்லாவோ, சமோசாவோ கொடுக்கக்கூடாது என்று பரிமாறுபவர்களுக்கு உத்தரவிட்டிருந்தோம். முதலில் சைவ உணவுப் பிரியராக இருந்த அவர், பிறகு அசைவ உணவுக்கு மாறிவிட்டார். சீன உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார்".

"நம்மைப் போன்ற சாதாரண மனிதராகவே இருந்தார் வாஜ்பாய். என்னுடைய கருத்துப்படி, அவர் புனிதருமல்ல, பாவியும் அல்ல, அன்பான இதயம் கொண்ட இயல்பான மனிதர்."

ஷேர்ஷா சூரிக்கு பிறகு...

சூர்யகாந்த் த்ரிபாடி நிராலா, ஹரிவம்ஷ்ராய் பச்சன், ஷிவ்மங்கல் சிங் சுமன், ஃபைஸ் அகம்மத் ஃபைஸ் போன்ற ஹிந்தி மொழி கவிஞர்களின் கவிதைகளுக்கு ரசிகர் கவிஞர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

பாரம்பரிய இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வாஜ்பாய், பீம்சேன் ஜோஷி, அமஜ்த் அலி கான், குமார் கந்தர்வ் போன்ற பாடகர்களின் இசையை கேட்பதற்கான எந்தவொரு சந்தர்பத்தையும் தவறவிடமாட்டார்.

வாஜ்பாய் வெளியுறவு துறையில் அதிக பரிச்சயமானவராக இருந்தபோதிலும், பிரதமராக பணியாற்றிய காலத்தில் பொருளாதார துறைக்கு சிறப்பான பங்களித்தார் என்கிறார் கிங்ஷுக் நாக்.

தொலைபேசி மற்றும் சாலை கட்டமைப்புத் துறையில் வாஜ்பாயின் பங்களிப்பு என்றென்றும் மறக்கமுடியாதது. இன்று நாட்டில் நாம் பயன்படுத்தும் நெடுஞ்சாலைகளின் பின்னால் வாஜ்பாயின் பங்களிப்பு மகத்தானது. ஷேர்ஷா சூரிக்கு பிறகு இந்தியாவில் அதிக அளவிலான சாலைகள் வாஜ்பாய் காலகட்டத்தில் கட்டமைக்கப்பட்டது."

மோதியின் ராஜினாமா தயார்?

தன்னுடைய பதவிக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் விரும்பத்தகாத ஒன்று குஜராத் கலவரம் என்று வாஜ்பாய் கருதியதாக ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ் துலத் எழுதிய, 'The vajpayee years' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் கலவரம் பற்றி எந்தவிதத்திலும் வாஜ்பாய் சமாதானமாகவில்லை என்பதை கிங்ஷுக் நாக் ஒப்புக்கொள்கிறார். "இந்த விவகாரம் தொடர்பாக அப்போதைய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோதி பதவி விலகவேண்டும் என்று அவர் கருதினார்".

"அப்போது குஜராத் ஆளுநராக இருந்த சுந்தர் சிங் பண்டாரிக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொன்ன தகவல் இது. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதியின் பதவி விலகல் கடிதம் தயாராகிவிட்டது. ஆனால், கோவா தேசிய மாநாட்டிற்கு முன்பே, மோதி பற்றிய கருத்தை மாற்றுவதில் கட்சியின் மூத்தத் தலைவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள். மோதியின் ராஜினாமா கடிதத்திற்கான தேவையும் எழவில்லை"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: