வட கொரிய கோட்டையில் சவால் விட்டு நுழைந்த குஜராத் இளைஞர்
- எழுதியவர், தீபல்குமார் ஷா
- பதவி, பிபிசி
உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட, அணு ஆயுதத்தை பலமுறை பரிசோதித்து தொடர்ந்து போர் அச்சுறுத்தலை வெளியிட்டு வரும் ஒரு நாட்டிற்கு நீங்கள் பயணம் செய்ய விரும்புகிறீர்களா?

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
சில நாட்களுக்கு முன்னர் வடகொரியா சென்ற ஜிகார் பராசரா, தலைநகர் பியோங்யாங்கை தனது கேமராவில் படம்பிடித்தார்.
சுற்றுலாவில் பராசராவுக்கு இவ்வளவு விருப்பம் ஏற்பட்டது எப்படி? பல நாடுகளை சுற்றிப் பார்த்துள்ள அவருக்கு வடகொரிய பயணம் எப்படி இருந்தது? தெரிந்துக்கொள்வோம்.

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
"முதலில் நான் தென் கொரியாவிற்கு சென்றேன், அங்கிருந்த என் நண்பர், தென் கொரியா நன்றாக இருக்கிறது, ஆனால் வடகொரியா அப்படி இருக்காது என்று சொன்னார். அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வடகொரியாவிற்கு சென்றேன். வடகொரியா குதூகலம் ஏற்படுத்தும் நாடு" என்று சொல்கிறார் பராசரா.
வடகொரிய விமான நிலையத்திற்கு சென்றடைந்ததும் வேறு உலகில் இருப்பதைப்போல் உணர்ந்தேன். கிம் ஜோங் மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதுடன் அவர்களின் குரலையும் ஒடுக்குகிறார் என்பதையும் உணர்ந்தேன்.
கிம் ஜோங் வடகொரியாவை ஒரு "தனிமைப்படுத்தப்பட்ட" நாடாக மாற்றிவிட்டார். அங்கே செல்வது மிகவும் சவால் நிறைந்தது. ஏனெனில் வடகொரியாவிற்கு செல்வதற்கான விசாவைப் பெறுவது மிகவும் கடினமான செயல்.

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
சீன நிறுவனம் ஒன்றின் மூலம் வடகொரியாவுக்கு சென்றேன்.
வடகொரியாவில் இணையம் அல்லது மொபைல் பயன்படுத்த முடியாது. ஒருவிதத்தில் உலகத்துடனான உங்கள் தொடர்பு துண்டிக்கப்படும்.
வடகொரிய மக்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றி குறிப்பிட்ட ஜிகார், "வடகொரிய சாலைகளில் அரசு வாகனங்கள் மட்டுமே காணப்படுகின்றன, ஏனெனில் ஒவ்வொரு குடிமகனும் பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உண்டு".

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
யாரும் சொந்தமாக வாகனங்கள் வைத்துக் கொள்ளமுடியாது. வீடு வாங்க வேண்டுமானால் அதற்கு முதலில் அரசின் அனுமதியை வாங்கவேண்டும்.
அங்குள்ள கடைகளில் பெரும்பாலானவை அரசிற்கு சொந்தமானது, மக்கள் மிதிவண்டிகளையே பயன்படுத்துகின்றனர்.
வடகொரியாவில் புகைப்படம் எடுப்பது எளிது என்றாலும், கிம் ஜோங் மற்றும் பிற தலைவர்களின் சிலை அல்லது புகைப்படத்தை பார்த்தால் தலைவணங்கி வணக்கம் செலுத்தவேண்டும்.
உலகின் பிற நாடுகளுடன் அந்நாட்டு மக்களுக்கு தொடர்பு இல்லை, பொதுவாக வடகொரிய மக்கள் வெளிநாட்டிற்கு சொல்லமுடியாது, வெளிநாட்டினர் இங்கு வருவதும் சுலபமானதில்லை. ஆனால் சிலர் ஆபத்தை எதிர்கொண்டு இங்கு வரும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
வடகொரிய மக்களுக்கு இந்தியாவைப் பற்றி என்ன தெரியும்?
வடகொரிய மக்களுக்கு இந்தியாவைப் பற்றி என்ன தெரியும் என்று ஜிகரிடம் பிபிசி நிருபர் கேட்டார்.
வடகொரிய மக்கள் அமைதியானவர்கள், சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். மக்கள் கடைவீதிகளில் பொருட்களை வாங்குவதை பார்க்கலாம். அவர்கள் வெளிநாட்டினரிடம் அதிகமாக பேசுவதில்லை.
இருந்தபோதிலும், கடைவீதியில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த என்னிடம் ஒரு பெண் பேசினார். எந்த நாட்டை சேர்ந்தவன் என்று விசாரித்தார்.
இந்தியாவை சேர்ந்தவன் என்ற பதிலை கேட்டதும், 'வாஹ்' என்று அவர் சொன்னார்.
"இந்தியாவைப் பற்றி தெரியுமா?" என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், "தெரியும், ஆண்டுதோறும் நடைபெறும் திரைப்பட விழாவில் இந்திய படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்ன அந்த பெண்மணி, தனக்கு பிடித்த கலைஞர்கள் சிலரின் பெயரையும் குறிப்பிட்டார்".
"வடகொரியாவிற்கு செல்பவர்கள் உள்ளூர் மக்களுக்கு கிடைக்கும் வசதிகளைப் பற்றி அவர்களிடம் பேசும் சந்தர்பம் கிடைத்தால், அவர்கள் சொல்வதை கூர்ந்து கவனிக்கவேண்டும்".

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
வடகொரியாவில் தண்ணீரும் மின்சாரமும் இலவசம்
திருமணமானதும் தம்பதிகள், நாட்டுத் தலைவர்களின் உருவச்சிலைகளின் முன் தலைவணங்கி ஆசீர்வாதம் பெறவேண்டும்.
இதைத்தவிர, நீங்கள் ரகசிய கேமராவில் ஏதாவது படம்பிடித்தால், சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரிடும். மிகச் சிறிய ஒரு தவறும் உங்களுக்கு மாபெரும் பிரச்சனையாக மாறலாம்.
வடகொரியாவில் எல்லா சேவைகளும் இலவசம். அங்கு தண்ணீர், மின்சாரம் என அனைத்தும் இலவசம். அதுமட்டுமல்ல, மின்சாரம், தண்ணீருக்காக நீங்கள் பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. பார்க்கும் இடமெல்லாம் சுத்தமாக காணப்படுகிறது.

பட மூலாதாரம், JIGAR BARASAR/BBC
வேதனையளித்த அனுபவம்
68 நாடுகளுக்கு பயணித்துள்ள பராசராவ், பணப்பிரச்சனை, சைவ உணவு, மொழி பிரச்சனை, நிற பாகுபாடு என பலவிதமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்.
தனது ஒரு வேதனைமிக்க அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார் அவர். "எதியோப்பியவிற்கு பயணம் சென்றிருந்தபோது, என்னிடம் வந்த 10-12 நபர்கள் போதைப்பொருள் ஒழிப்பு குழுவினர் என்று கூறினார்கள்".
"ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற அவர்கள், என் உடலை பரிசோதிக்கப் போவதாகவும், கழிவறைக்கு சென்று மலம் கழிக்கவேண்டும் என்றும் சொன்னார்கள், ஏன் என்று கேட்டதற்கு மல பரிசோதனை செய்யவேண்டும் என்றார்கள்".

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
என் மலத்தை முகர்ந்து பார்த்து ஆய்வு செய்தார்கள்
"எனக்கு அந்த நேரத்தில் மலம் கழிக்க முடிந்தது என்பதே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. அவர்கள் என் மலத்தை முகர்ந்து பார்த்து ஆய்வு செய்தார்கள், அது வித்தியாசமானாகவும், வேதனையளிப்பாகவும் இருந்த அனுபவம்" என்கிறார் பராசராவ்.
இரண்டு மணி நேரம் கழித்து என்னை போகச் சொல்லிவிட்டார்கள். ஆனால் என்னிடம் பணமே இல்லை. டேவிட் என்பவர் எனக்கு உதவி செய்தார்.
ஒருமுறை இந்தியா வந்திருந்த டேவிட், தற்செயலாக குஜராத்தின் ஜாம்நகருக்கும் வந்தார். அவருக்கு ஊர் சுற்றி காண்பித்தேன்.

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
கசப்பான அனுபவம்
இன்னுமொரு கசப்பான அனுபவத்தையும் சொல்கிறேன். ஒரு பயணத்திற்காக கிளம்பிக்கொண்டிருந்தேன். பயணத்திற்கு முதல் நாள் மும்பையில் என்னுடைய பொருட்கள் அனைத்தும் தொலைந்துவிட்டன.
உலகம் சுற்றும் என் விருப்பத்திற்கு முதலில் ஆதரவு கிடைக்கவில்லை. பெற்றோரும், மற்றவர்களும் எதிர்மறையான கருத்துகளையே தெரிவித்தார்கள். சுற்றுலாவுக்கான பணத்தை ஏற்பாடு செய்வதும் மிகப் பெரிய சவால்தான்.

பட மூலாதாரம், JIGAR BARASARA/BBC
"இந்தோனீசியாவுக்கான எனது முதல் பயண அனுபவமே என்னை உலகம் சுற்றும் ஆர்வலனாக மாற்றியது. அந்த அனுபவத்தை தொடர விரும்புகிறேன்," என்றார் அவர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













