ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய பெண்ணின் மனு தள்ளுபடி

பட மூலாதாரம், Getty Images
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என தன்னை உரிமை கோரிய அம்ருதா என்பவர் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 5-ம் தேதி வரவுள்ளது. ஆனால், அவரைச் சுற்றியுள்ளன சர்ச்சைகள் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், அவர் என் தாய்தான் என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனை வேண்டும் என கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தான் பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்டதாகவும், ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கள் ஏற்படக்கூடாது என்பதால் இந்த உண்மையைக் கூறவில்லை என்றும் அம்ருதா மனுவில் கூறியிருந்தார்.
மேலும் தனக்கு அரசியல் அழுத்தங்கள் இருந்ததால், கீழ் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நேரடியாக விசாரிக்க முடியாது என கூறிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












