You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கண்டுபிடிப்பு மூலம் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முயலும் சாமானியர்
- எழுதியவர், கரோலின் ரைஸ்
- பதவி, பிபிசி உலகச் சேவை
"பிரச்சினைகளை தீர்க்க விரும்புகிறேன்," என்கிறார் உத்தப் பராலி.
"மக்களின் வாழ்க்கையை இன்னமும் வசதியானதாகவோ அல்லது சற்று சுதந்திரமாகவோ மாற்ற விரும்புகிறேன்."
பராலி புதிய பொருட்களை தொடர்ந்து கண்டுபிடிக்க ஊக்கமளித்தது அவரின் இந்த விருப்பமே. தனது குடும்பத்தின் பெருமளவிலான கடன் சுமையை திரும்பச் செலுத்தத் தனது கண்டுபிடிப்புகளை விற்பனை செய்தார் பராலி. தற்போது கண்டுபிடிப்பே அவரது வாழ்வின் பேரார்வமாகிவிட்டது.
140க்கும் மேற்பட்ட பொருட்களை கண்டுபிடித்துள்ள பராலியின் சில கண்டுபிடிப்புகள் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளன, வணிக ரீதியாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
மக்களுக்கு உதவவேண்டும் என்பதே தனது முதன்மையான நோக்கம் என்கிறார் அவர். ஏற்கனவே விவசாயத்துறைக்கான கண்டுபிடிப்புகளுக்காக இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவர் பராலி. தற்போது அவரது புதிய கண்டுபிடிப்புகள் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுகின்றன.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஆதரவு குறைவாக இருப்பதால் உடல் குறைபாடுகள் கொண்டவர்களுக்கு புதிய தீர்வுகளை வழங்க விரும்புவதாக அவர் கூறுகிறார்.
15 வயதான ராஜ் ரெஹ்மான் உடல் குறைபாடுகளுடன் பிறந்தவர், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்.
எளிய பொருட்களான வெல்க்ரோ, ஸ்பூன் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட கருவியை ராஜ் ரஹ்மானின் கையின் முன்பகுதியில் பொருத்தியிருக்கிறார் பராலி. இதனால் எழுதுவதும், சாப்பிடுவதும் ராஜூவுக்கு சுலபமாகிவிட்டது. ராஜ் வசதியாக நடப்பதற்காக பராலி காலணி ஒன்றை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்.
"பொதுவாக என்னைப் பற்றி அதிக கவலை கொண்டிருந்த நான், தற்போது மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறேன். இப்போது பள்ளிக்குச் செல்ல ரயில்வே கிராசிங்கை கடப்பது பற்றி கவலையில்லை. சிரமமின்றி சுலபமாக நடக்கிறேன் என்று அவர் கூறுகிறார்.
"என்னை நானே கவனித்துக் கொள்ள முடியும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்."
மனிதனின் மதிநுட்பம்
ஆரம்பத்தில், மக்கள் தன்னை "தகுதியற்றவர்" என்று நினைத்ததாக சொல்லும் பராலி, "தன்னை ஒரு தரமான கண்டுபிடிப்பாளராக" நிரூபிக்க 18 ஆண்டுகள் ஆனது என்கிறார்.
பெரும்பாலான அவரது கண்டுபிடிப்புகள் மிக குறைந்த செலவு கொண்டவை என்பதோடு உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை. இதுபோன்ற புதுமையான கண்டுபிடிப்புகள் "ஜுகாட்" என்று அழைக்கப்படுகிறது. "அறிவுபூர்வமான மேம்பாடு" என்ற பொருள் கொண்ட ஹிந்தி மொழி வார்த்தை இது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் 'ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூலை சேர்ந்த ஜெய்தீப் பிரபு ஜுகாத் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
கண்பிடிப்புகளில் ஈடுபட மக்களுக்கு ஊக்கமளிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது ஜூகாத் என்று அவர் கருதுகிறார். "நமது உள்ளார்ந்த மனித அறிவைவிட வேறு எதுவும் அதிகமாக தேவையில்லை என்பதே அதற்கு காரணம். சமூகத்தில் உங்களை சுற்றியுள்ள சிக்கல்களை நீங்கள் கண்டறியத் தேவையான அணுகுமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிறகு இருக்கும் வளத்தைக் கொண்டு சிக்கல்களை தீர்க்கலாம்" என்று அவர் கூறுகிறார்.
கண்டுபிடிப்புகளை விற்பனை செய்வது மற்றும் நிறுவனங்களுக்கும், அரசிற்கும் தொழில்நுட்ப தீர்வுகளை வடிவமைப்பதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார் பராலி.
ஆனால் பிறரும் பணம் சம்பாதித்து, தங்களுடைய நிதி நிலைமையை மேம்படுத்திக்கொள்வதற்காக உதவுவதிலும் பராலி ஆர்வமாக இருக்கிறார். சில மையங்களை உருவாக்கியுள்ள பராலி, அங்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக தனது இயந்திரங்களையும் வைத்திருக்கிறார்.
மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பராலி வடிவமைத்த அரிசி அரைக்கும் இயந்திரத்தை அங்கிருக்கும் உள்ளூர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயந்திரங்களின் மூலம் அரைக்கப்பட்ட மாவைக் கொண்டு கேக்குகளும், திண்பண்டங்களும், உணவு பொருட்களும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
குறுக்குவழி இல்லை
இந்தியாவில் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 27% மட்டுமே பொருளாதார ரீதியாக செயல்படுவதாக உலக வங்கி கூறுகிறது.
"எங்கள் வாழ்வாதாரத்திற்கான வருமானம் ஈட்ட தேவையான எந்த வசதிகளும், வேலைவாய்ப்புகளும் கிராமங்களில் இல்லை" என்கிறார் இந்த மையத்திற்கு வரும் பெண்களில் ஒருவரான போர்பிதா தத்தா.
"எங்களுடைய, எங்கள் குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றியமைத்து, தன்னிறைவு பெற தேவையான பணம் சம்பாதிக்க இங்கிருக்கும் கண்டுபிடிப்புகளை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்."
கிராமப்புற ஆண்களும் பராலியின் அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்கின்றனர். 200க்கும் மேற்பட்ட சிமெண்ட்-செங்கல் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கி விற்பனை செய்திருக்கிறார் பராலி.
ஒவ்வொன்றையும் இயக்க ஐந்து பேர் தேவை என்பதால், ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று அவர் மதிப்பிடுகிறார்.
பராலியின் பொறியியல் பின்னணி அவருக்கு உதவியது என்பது உண்மை என்றாலும், கண்டுபிடிப்புகளின் அடிப்படைகளை யாரும் கற்றுத்தரமுடியாது என்று அவர் கருதுகிறார்: "ஓய்வற்ற மனம் கொண்ட, உலகில் உள்ள பொருட்களில் வசதிக் குறைவை உணரும் எந்தவொரு நபரும் ஒரு கண்டுபிடிப்பாளரே!"
"கண்டுபிடிப்பு என்பது உங்களின் உள்ளே இருந்து வருவது, யாரும் உங்களை ஒரு கண்டுபிடிப்பாளராக்க முடியாது. நீங்களாகவே அதை உணர வேண்டும்," என்று அவர் கூறுகிறார்
பராலி தனது மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப இயந்திரங்களை வடிவமைத்து பிறகு அவற்றை வெற்றிகரமாக வியாபாரம் செய்துவந்தார். ஆனால் தற்போது, தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் இயந்திரங்களை வடிவமைத்து தருமாறு மக்கள் அவரிடம் கோருகின்றனர். தனது முயற்சிகளையும் குறைக்கும் நோக்கம் அவருக்கு இல்லை.
கண்டுபிடிப்புக்கான அவரது உற்சாகம் தொடர்கிறது: "நான் சவாலை அனுபவிக்கிறேன், எப்பொழுதும் எதாவது புதிதாக செய்ய விரும்புகிறேன். புதிதாக ஏதாவது செய்யும் முதல் நபராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்."
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்