You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு சூட்கேஸில் இருக்கும் சூரிய சக்தியில் உயிர்களை காப்பாற்றும் திறன் இருப்பது எப்படி?
- எழுதியவர், மாத்யூ வீலர்,
- பதவி, கண்டுபிடிப்பாளர், நேபாளம்
இன்னும் சில நாட்களில் இரண்டாவது குழந்தையை பிரசவிப்பார் 24 வயதான ஹரி சுனார்.
அச்சுறுத்தும் இடி, அடைமழைக்கு இடையே, வழக்கமான கர்ப்பகால பரிசோதனைக்காக தொலைதூர கிராமமான பாண்டவ்கானியில் அமைந்திருக்கும் உள்ளூர் பிரசவ மையத்திற்கு தனது வீட்டிலிருந்து நடந்து சென்றார். அந்த மையத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடும்.
மின்வெட்டு இரண்டு வாரங்கள் வரைகூட நீடிக்கலாம் என்பதால் பிரசவ மையத்தில் அசாதாரண பிரச்சினைகள் ஏற்படுகிறது.
ஆனால் இப்போது அந்த மையத்திற்கு சுயமான மின்னாற்றல் கிடைத்துவிட்டது. பிரசவ மையத்தில் ஒளி நிரந்தரமாக கிடைக்கிறது, அவர் சிரிக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் அந்த இளம் தாய், "பிரசவ மையத்தில் சோலார் விளக்கு இருப்பதே காரணம்" என்கிறார்.
வெளிச்சம் தரும் மஞ்சள் நிற சூட்கேஸ் சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு சோலார் சூட்கேஸ்
இறப்பு விகிதம் குறைந்தது
கூரையில் உள்ள சோலார் பேனலுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய மின் அமைப்பு சாதனம், வெளிச்சத்தையும், வெப்பத்தையும் வழங்குவதோடு, பேட்டரி சார்ஜர் மற்றும் ஒரு பேபி மானிட்டரையும் கொண்டுள்ளது.
உள்ளூர் தாதி ஹிமாஷிரிஷுக்கு சோலார் சூட்கேஸ் ஒரு உயிர் பாதுகாப்பு சாதனம்.தனது சுகாதார மையத்தின் மின்சார பிரச்சினைகளுக்கு சோலார் மூலம் தீர்வு கண்டிருக்கிறார்.
2014 இல் பாண்டவ்கானியில் ஒன்-ஹார்ட் வோர்ல்ட்வைட் என்ற அறக்கட்டளை சோலார் சூட்கேசுக்கு உதவி செய்து நிறுவியது. அதன் பிறகு அங்கு பிரசவத்தில் தாயோ, சேயோ இறக்கவில்லை.
"பிரசவத்திற்காக சுகாதார மையத்திற்கு வரும் கர்பிணித் தாய்மார்கள் இருட்டிற்குப் பயப்படுவார்கள்," என்று ஹிமா கூறுகிறார்.
"குழந்தைகளை இழந்துவிடுவோமா என்ற பயம் இப்போது அவர்களுக்கு இல்லை. பிரசவத்தின்போது, சோலார் வெளிச்சம் பயன்படுத்தப்படுவதால் அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்
கலிபோர்னியா கனவு
கலிஃபோர்னியாவை சேர்ந்த, வீ கேர் சோலார் நிறுவனத்தின், தாய்மை மற்றும் மகப்பேறியல் மருத்துவர் டாக்டர் லாரா ஸ்டாசெல்லின் சிந்தனையில் உதித்த யோசனை சோலார் சூட்கேஸ்.
2008ஆம் ஆண்டு நைஜீரியாவில் மின்சாரமோ நிலையான வெளிச்சமோ இல்லாதபோது நடந்த பிரசவங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதோடு, உயிரிழப்புகளும் நேரிட்டதை அவர் கண்டார்.
டாக்டர் ஸ்டச்செல் தனது கணவர், சோலார் துறை பொறியாளர் ஹால் அரோன்சன்னுடன் இணைந்து சூட்கேஸ் அளவிலான, கிரிட் இணைப்பில்லாத சோலார் மின் அமைப்பை உருவாக்கினார்.
இந்த முன்மாதிரி நைஜீரியாவில் வெற்றிபெற்றது. பிரசவ காலத்தில் தாய் சேய் இறப்பு விகிதம் அதிகமாக உள்ள பிற நாடுகளின் மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களுக்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டுவர அவர்கள் முடிவு செய்தனர்.
பூகம்ப சவால்
2015 இல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் அதன் பல மருத்துவமனைகளை அழித்தது. எஞ்சிய மருத்துவமனைகளில் நம்பகமான மின்சாரம் இல்லாமல் போனது.
16 கிலோ (35எல்.பி.எஸ்) எடையுள்ள சோலார் சூட்கேஸ்கள் கடுமையான நிலப்பரப்புகளிலும் பயன்படுத்துவதற்கு சிறந்தவை.
பூகம்பத்திற்கு பின் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ மற்றும் பிரசவக் கூடாரங்களுக்கு அவர்கள் உடனடியாக மின்சாரம் வழங்கினார்கள்.
ஆனால், இயற்கை பேரழிவுகள் இல்லாத காலத்திலும் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியாத நிலையில் நேபாளம் இருக்கிறது.
"கிராமப்புறங்களில் உள்ள பல மகப்பேறு மையங்கள் அல்லது சிறு கிளினிக்குகளில் மின்சாரமே இல்லை."
சோலார் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜ் குமார் தாபாவின் கருத்துப்படி, 33% கிராமப்புற பகுதிகளில் நம்பகமான மின்சாரம் இல்லை.
சூரிய ஒளி, காற்று அல்லது நீரை பயன்படுத்தி சிறு அளவிலான மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசு திட்டங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் தொலைதூர பகுதிகளில் இதற்கான அமைப்புகளை நிறுவவுவதும் பராமரிப்பதும் கடினமாக இருப்பதால் லாபமீட்ட முடிவதில்லை.
"எனவே, இதுபோன்ற அமைப்பின் செயல்பாட்டில் பயனர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்வரை, சோலார் எரிசக்தித்துறையில் செய்யவேண்டிய பணிகள் அதிகமாகவுள்ளது குறிப்பாக அவை அறநல அடிப்படையில் வழங்கப்படவேண்டும்."
2013 இல் பாண்டவ்கானியில் பிரசவ மையம் கட்டப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான குழந்தைகள் வீட்டிலேயே பிறந்தனர், சில நேரங்களில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அல்லது மொத்தமாக இருளில்.
சிக்கலான நேரங்களில், மலைபாங்கான மண் மற்றும் பாறைகள் கொண்ட 65 கிலோ மீட்டர் பாதையை கடந்து, இன்னமும் 65 கி.மீ தொலைவிலுள்ள பாக்லங் நகருக்கு செல்லவேண்டும்.
"பிரசவத்தின்போது சில குழந்தைகளின் நிலை மாறியிருக்கும், அவர்களுக்கு உதவி செய்ய தேவையான உபகரணங்கள் எங்களிடம் இல்லை," என்று நினைவுகூறுகிறார் ஹிமா. "ரத்தப்போக்கினால் தாய்கள் இறப்பது இயல்பானதாக இருந்தது."
உலகின் தொலைதூரப் பகுதியிலுள்ள இந்த இடத்தில், இப்போது ஹிமாவும் அவரது ஊழியர்களும் தங்கள் மொபைல் போன்களை கிட்டின் மற்றொரு முக்கியப் பகுதியைக் கொண்டு சார்ஜ் செய்யமுடியும்.
"சில சமயங்களில் 15 நாட்கள்கூட மின்சாரம் இல்லாத நிலை நீடிக்கும்" என்று ஹிமா விளக்குகிறார். "எங்களுடைய மொபைல் போன்களை சார்ஜ் போடமுடியாததால், தொடர்பில் இருந்து முழுமையாக துண்டிக்கப்படுவோம்."
குறைந்தபட்சம் ஒரு முறையாவது மையத்தில் பிரசவித்த 175 பேரில் ஒருவர் திருமதி சுனார்.இரண்டாவது குழந்தையை பிரசவிக்கும்போதும், முதல் மகள் பிறந்தபோது நேர்ந்த அனுபவமே ஏற்படும் என அவர் நினைத்தார்.
முதல் குழந்தையின் பிரசவத்திற்கு வந்தபோது ... நான் சுகாதார மையத்திற்கு வந்ததும் மின்சாரம் போய்விட்டது. ஆனால் சோலார் சூட்கேஸ் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார் சுகாதார பணியாளர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்