You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''இந்துக்களை உறுத்தவேண்டும் என்பது என் நோக்கமல்ல’’: கமல் ஹாசன்
மக்கள் கருத்துக்களையும், பிரச்சனைகளையும் தெரிவிப்பதற்காக 'மையம் விசில்' 'MAIAMWHISTLE' என்ற பிரத்யேக செயலியை தனது பிறந்த நாளான நவம்பர் 7 அன்று நடிகர் கமல் ஹாசன் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு,
செயலியை அறிமுகம் செய்து வைத்தபிறகு பேசிய கமல், ''தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார். இது ஒரு செயலி மட்டுமல்ல ஒரு பொது அரங்கம் என கமல் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறிய கமல், தீயவை நடக்கும்போது குரல் கொடுக்க 'மையம் விசில்' செயலி பயன்படும் என்றார்.
''நாளை நான் அரசியலுக்கு வந்து தவறு செய்தால், இந்த 'விசில்' மூலம் என்னைத் திருத்தலாம்'' என்றார்.
மேலும், மக்கள் தங்களது பிரச்சனைகள் பற்றி பேச #theditheerpomvaa, , #maiamwhistle, #virtuouscycles என்ற ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம் செய்தார்.
செயலியின் சோதனை தற்போது நடந்து வருவதாகக் கூறிய அவர், ஜனவரி மாதம் செயலி பயன்பாட்டுக்கு வரும் என கூறினார்.
கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும், அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பொறுமையாக இருப்பதாகவும் அறிஞர்கள் பலருடன் ஆய்வு செய்து தயார்படுத்திக் கொண்டிருப்பதாவும் கமல் கூறினார்.
கட்சியின் பெயரை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுவதை குறிப்பிட்டுப் பேசிய கமல்,''கர்ப்பமாக இருப்பதாகக் கூறியவுடன் குழந்தையின் பெயரை கேட்காதீர்கள். குழந்தை ஆணா, பெண்ணா என்பதை பார்த்து பெயர் வைத்துக்கொள்ளலாம்'' என்றார்.
''நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது'' என கமல் கூறினார்
கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய அவர், மற்றபடி கட்சி தொடங்குவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டதாக கூறினார்.
இந்துத்துவாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததை பற்றிப் பேசிய அவர்,'' உண்மையைத்தான் பேசினேன். தீவிரவாதம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. வன்முறை எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்