குஜராத் தேர்தல்: பாஜகவை அச்சுறுத்துகிறதா காங்கிரஸ் ?

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/Getty Images
- எழுதியவர், ஸூபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
சில சிறப்பு செய்திகளை எழுதுவதற்காக, நான் ஏப்ரல் மாதத்தில், குஜராத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தேன்.
டிசம்பர் மாதம், அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், அந்த தேர்தல் வெகுதூரத்தில் இருப்பதாகவே தெரிந்தது.
இருந்தபோதும், பாஜக தலைவர் அமித் ஷா, அகமதாபாத்தில் தனது கட்சி ஊழியர்களை கொண்ட பெரிய பேரணிகளை நடத்தினார்.
கட்சியின் பல மாவட்ட மற்றும் தாலுக்கா தலைவர்களும், இந்த தேர்தலில், ஊருக்குள் இறங்கி, சக கட்சி பணியாளர்களை ஊக்குவித்து பணியாற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியோடு திரும்பிச் சென்றனர்.
அதில் சிலர், தற்போதே தேர்தலுக்கு தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
அதே வேளையில், அக்கட்சியின் எதிராளியான காங்கிரஸ், நிலையற்ற தன்மையுடன் இருந்தது போல தெரிந்தது. தற்போதுள்ள சூழலுக்கு நேர்மாறாக, ஓர் அமைதியான நிலை, காங்கிரஸ் அணியில் இருந்ததை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
நான் சந்தித்த சில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது என்றே பரிந்துரைத்தனர்.
ஆனால், பாஜகவினரோ, தேர்தலுக்கான நேரம் தற்போது வந்துள்ளது, விரைவாக நாம் நமது தொகுதிகளில் ஓர் இடத்தை அமைக்க உள்ளோம் என்பதை போன்ற ஓர் உணர்வை எனக்கு அளித்தனர்.
குஜராத் மாநிலத்தின் மொத்த சட்டமன்ற தொகுதிகள் 182. ஆட்சி அமைப்பதற்கு தேவையான அதிர்ஷ்ட எண் 92.
மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாக இது இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை என்றாலும், இந்த தேர்தலில் அந்த அதிர்ஷ்ட எண்ணை காங்கிரஸை விட, பாஜக தான் பெறும் என்ற ஒருவித உணர்வு மட்டும் அங்கு உள்ளது.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN
தேர்தலுக்கான பிரசாரத்தை ஏப்ரல் மாதமே துவங்கியது பாஜக. இது அவர்களுக்கு நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
குஜராத் மாநிலத்தை பொருத்தவரையில், தனிக்கட்சியாக 1995 முதலும், ஜனதா கட்சியுடன் இணைந்து 1990 முதலில் இருந்தும் பாஜக ஆட்சியில் உள்ளது.
காந்திநகரில் இருந்து அதை இடம்பெயர வைக்க, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளான, இளம் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, ஓ.பி.சி சமூகத்தின் தலைவர் அல்பேஷ் தாக்கூர் ஆகியோரின் கூட்டு சக்தி தேவைப்படும்.
நரேந்திர மோதி, இந்த தேர்தலுக்கான போட்டியாளராக இல்லாமல் இருந்தாலும், பாஜகவின் துருப்பு சீட்டு அவரே. குஜராத்தில் பிரபல அரசியல்வாதியாக அவர் தொடர்ந்து இருந்து வருகிறார்.
ஒரு தேசிய ஊடகம் நடத்திய வாக்கெடுப்பில், அம்மாநிலத்தில் அவரின் பிரபலத்திற்கான அளவு என்பது 66 சதவிகிதம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
பா.ஜ.கவின் இலக்கு என்பது 150 இடங்களை பிடிப்பதே. தேர்தலுக்கு வெகு முன்னரே அதற்கான ஆயத்தப்பணிகளை துவக்கினாலும், அந்த இலக்கு என்பது மிக உயர்ந்த எண்ணாகவே உள்ளது.
2012ஆம் ஆண்டு தேர்தலில் வென்றது போல 116 இடங்களையே பாஜக வென்றாலும், தற்போதுள்ள அரசியல் சூழலுக்கு அது மிகவும் திடமான ஒன்றாக தெரியாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஆனால், மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பாரதிய ஜனதா கட்சி 116 இடங்களுக்கு குறைவான தொகுதிகளில் பெற்று வெற்றிபெற்றாலும், அது வீழ்ச்சியாகவே பார்க்கப்படும்.
பா.ஜ.கவினரின் தனிப்பட்ட பெருமை மட்டும், தற்போது பணயத்தில் இல்லை, இந்த தேர்தலின் முடிவு என்பது, மோதியின் பெரிய சீர்திருத்தங்களான, பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டியின் தீர்ப்பாகவும் பார்க்கப்படும்.
தேர்தலுக்கு பிறகும் மத்தியில் பா.ஜ.கவின் ஆட்சி தொடரும் என்றாலும், அது அந்த அளவிற்கு மிளிராது. நிச்சயமாக, பல சவால்களை அது எதிர்கொள்ளும்.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/AFP/Getty Images
பா.ஜ.கவின் பெரிய சவால் என்பது அதன் கட்சிக்குள்ளேயும், அதன் அரசினுள்ளே இருந்துமே வரும்.
பெரும்பாலும், தேர்தல் நேரங்களில், `குஜராத் ஒரு பொருளாதார வளர்ச்சியின் மாதிரி` என்றே அக்கட்சியினரால், காண்பிக்கப்பட முயலப்பட்டது. அதுவே, நரேந்திர மோதி என்ற முதல்வரின் வெற்றிக்கதையாக இருந்தது.
தனது பின்தொடர்பவர்களால், மோதி, `வளர்ச்சியின் நாயகன்` என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
மக்களுக்கு பணமதிப்பிழத்தல் மற்றும் ஜி.எஸ்.டி மீது குறைந்த ஈர்ப்பு உள்ளதை உணர்ந்து, அவரகள் மாதிரி குஜராத் என்ற விஷயத்தை அவ்வளவாக கூறுவதில்லை.அவர்கள் உள்கட்டமைப்பு, வளர்ச்சி என எதைப்பற்றியும் பேசுவது இல்லை.
மோதியினுடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களால் பலரும் மகிழ்ச்சியாக இல்லை. குறிப்பாக அவரின் பாரம்பரிய ஆதரவாளர்களான வர்த்தகர்களும், பெரும் வணிகர்களும்.
அதற்கு பதிலாக, சமீபத்தில் குஜராத்திற்கு சென்ற மோடி, தனது கையுறைகளை கழட்டி வைக்கும் வகையில், குஜராத் சமூகத்தினரிடம் பேசியதோடு, குஜராத்தின் பெருமையை காக்க, பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறு கேட்டுக்கொண்டார்.
அவர், தனிப்பட்ட மனிதர்களிடம் வாக்களிக்குமாறு கேட்பதைவிட, ஒவ்வொரு சமூகத்தினரையும் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டது போலவே தெரிந்தது.
உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் என்பது இதற்கு முன்பு அவருக்கு சரியாக பலன் கொடுத்தது. இந்த முறையும் அது சரியாக இருக்கலாம்.
ஆனால், அதற்கு அமித் ஷாவின் கணித மேலோட்டங்களும், மோதிக்கு குஜராத் வாக்காளர்களிடம் உள்ள தனிப்பட்ட தொடர்பும் தேவைப்படும்.

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/Getty Images
இரண்டாவது சவாலாக காங்கிரஸ் கட்சி இருக்கும். சமீபத்தில் குஜராத் சென்றிருந்த, அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.
அரசியல் ஆக்கிரமிப்பு மற்றும் மென்மையான ஹிந்துத்துவா மூலமாக, பா.ஜ.கவை எதிர்க்க அவர் முயன்று வருகிறார். மாநில அரசின் மோசமான நடவடிக்கைகள் என்று அவர் கூறும் விஷயங்களை எல்லாம் வைத்து அவர் அரசை சாடுகிறார்.
குஜராத் பயணத்தின் போது, அவர் கோயில்களுக்கு செல்வதையும் பிரார்த்தனைகளில் பங்கெடுப்பதையும் பார்க்க முடிந்தது. அரசின் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவற்றின் நிலை குறித்தும் அவர் கேள்விகள் எழுப்புகிறார்.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய பிரச்சனைகளின் தாக்கத்தால் உள்ள கஷ்டங்கள் குறித்து அவரும் மக்களோடு இணைந்து பரிதாபப்பட முயலுகிறார்.
காங்கிரஸ் விரைவில் தடுமாறும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில், காங்கிரஸ் ஏற்கனவே தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறது.
ராகுல் காந்தியை தவிர்த்து, அந்த மாநிலத்தில் மக்களை ஈர்க்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் யாருமில்லை. கட்சியின் ஒற்றுமையும் கூட மிகவும் நலிந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
மறுஎழுச்சி காலத்தில் உள்ள காங்கிரஸை வேறுமாதிரி பார்க்கிறது பாஜக. ஆனால் அதன் தலைவர்கள், ஊடகங்களில் பாஜக குறித்து பெரிதுபடுத்தி கூறப்படுபவையே இவை என்றும் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், MARK SCHIEFELBEIN/AFP/Getty Images
பட்டிதர் சமூகம் பாஜகவிற்கு அளித்து வரும் ஆதரவில் சறுக்கல் வரும் சூழலை கொண்டுவரக்கூடிய, ஹர்திக் பட்டேலின் போராட்டங்களும், பாஜகவின் இன்னொரு சவாலாக இருக்கும்.
இதனை கையாள பாஜக மிகக்கடினமாக முயன்று வருகிறது.
ஹர்திக் பட்டேலின் முக்கிய குழுவை உடைத்து, தங்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரை அதில் சேர்க்கக்கூடிய அளவிலான பணிகளை அவர்கள் இதுவரை செய்துவிட்டனர்.
அவர்களின் கணக்குப்படி, ஹர்திக் பட்டேல்லை அக்குழுவில் இருந்து பிரித்தால், அவரின் ஆதிக்கம் என்பது கட்வா பட்டேல் சமூகத்துடன் சுருங்கிவிடும். அந்த சமூகம், மிகவும் குறுகிய தொகுதிகளையே பெற்றுத்தரும்.
இதுவரை அத்தகைய சூழல் எழவில்லை என்றாலும் கூட, ஒருவேளை, ஹர்திக் பட்டேல் காங்கிரஸிற்கு ஆதரவளிக்க நினைத்தாலும், அது தங்களை அவ்வளவாக பாதிக்காது என்று அவர்கள் நம்புகின்றனர்.
தற்போதுள்ள நிலைக்கும், டிசம்பர் தேர்தலுக்கும் இடையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், ஒருவர் இந்த தேர்தலை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், தேர்தலில் பாஜக தோற்பது என்பது சாத்தியமற்ற ஒன்று என்றே நம்பத்தோன்றுகிறது.
இதற்கு முன்பு அவர்கள் பெற்ற 48 சதவிகித வாக்கு என்பது குறைந்து, அவர்கள் ஒரு கசப்பான வெற்றியை பெறலாம்.
உண்மை என்னவென்றால், தற்போதுள்ள நிலையில், காங்கிரஸ் வெற்றி பெறலாம் என்று யாராலும் கூறமுடிவில்லை, இந்த நேரம் வரை.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













