பொருளாதாரத்துக்கு உத்வேகம் தருமா மோடியின் சாலை வித்தை?
- எழுதியவர், விவேக் கவுல்
- பதவி, பொருளியல் ஆய்வாளர்
தொய்வடைந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிப்பதற்காக ரூ.5.35 லட்சம் கோடி மதிப்பில் மிக நீண்ட சாலை அமைப்பதற்கு இந்திய அரசு திட்டமிடுகிறது. இந்த திட்டம் பிரச்சினை இல்லாததைப் போலத் தெரிகிறது. ஆனால், உண்மையில் இதில் பிரச்சினை ஏதுமில்லையா என்று ஆராய்கிறார் பொருளாதார ஆய்வாளர் விவேக் கவுல்.

பட மூலாதாரம், Getty Images
சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது சில அரசியல்வாதிகளும், சில நாடுகளும் புகழ் பெற்ற பிரிட்டிஷ் பொருளாதார வல்லுநர் ஜான் மேனார்டு கீன்சின் கோட்பாட்டை நோக்கிச் செல்வார்கள்.
பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிப்பதற்கு, அரசாங்கங்கள் கடன் வாங்கவும், பொதுப் பணிப் பணிகளில் முதலீடு செய்யவும் தயாராக இருக்கவேண்டும் என்பது கீன்சின் கொள்கை.
இந்தியாவில் கடந்த காலாண்டு கால வளர்ச்சி விகிதம்தான் கடந்த மூன்றாண்டு காலத்திலேயே மிக மந்தமானதாகும். கடந்த ஆறு காலாண்டு காலமாகவே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந் நிலையில், கீன்சின் கோட்பாட்டை பின்பற்றுவதைப் போல, மிக நீண்ட நெடுஞ்சாலைத் திட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது இந்திய அரசு.
வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானையும் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தையும் இணைக்கும் வகையில் மொத்தம் 83,677 கி.மீ. சாலைகள் அடுத்த ஐந்தாண்டு காலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 34,800 கி.மீ. நீள நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு மட்டுமே பெரும் பங்கு தொகை செலவிடப்படும். கடந்த இரு தசாப்தங்களாக இருக்கும் அரசுத் திட்டங்களுக்கு புதுமுலாம் பூசி, கொஞ்சம் மேம்படுத்துகிற திட்டங்களே இவை என்கிறார் பொருளாதார வல்லுநர் மிஹிர் ஸ்வரூப் ஷர்மா.
பழைய திட்டங்களை புதிய திட்டங்கள் போலக் காட்டுற போக்கு நரேந்திர மோடி அரசிடம் இருப்பதால் இது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. எனவே அதைவிட்டுவிட்டு இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பதில் கவனம் செலுத்தலாம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பிற ஆணையங்கள், அரசுத் துறைகளுக்கு அதிகாரங்கள் பிரித்தளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

பட மூலாதாரம், EPA
இந்தியாவின் சாலை அமைப்பு உலகின் மிக நீண்ட சாலை அமைப்புகளில் ஒன்று. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலைகள், ஊரகச் சாலைகள் ஆகியவற்றை சேர்த்து இந்தியாவில் மொத்தம் 54 லட்சம் கி.மீ. சாலைகள் உள்ளன. இவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் 2 சதவீதம் மட்டுமே.
ஒவ்வொரு மாதமும் வேலை தேடும் பட்டாளத்தில் புதிதாகச் சேரும் 10 லட்சம் இந்தியர்களில் கணிசமானவர்களுக்கு இத்திட்டம் உதவி செய்யவேண்டும். அரசாங்கம் சொல்கிறபடி பார்த்தால் இத்திட்டம் 140 மில்லியன் வேலை நாள்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் தொழிலாளர் பட்டாளத்தின் பெரும்பகுதியினர் திறன் பயிற்சி பெறாதவர்கள், அல்லது அரைகுறையாகத் திறன் பயிற்சி பெற்றவர்கள். எனவே, சாலை அமைக்கும் திட்டங்கள் இவர்களுக்கு வேலை வழங்கும்.
மத்திய அரசின் சாலை நிதி, நெடுஞ்சாலை சுங்க வசூல், பொதுத்துறை-தனியார்த் துறை கூட்டு முயற்சிகள், நிதிச் சந்தை மூலம் கடன் பெறுதல் ஆகிய வழிமுறைகளில் இத்திட்டத்துக்கு நிதி திரட்ட அரசு திட்டமிடுகிறது.
வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல்
ஏட்டளவில் இது குறை ஏதும் இல்லாத திட்டம்போலத் தெரிகிறது.
அரசு சாலை அமைக்கிறது. அதற்காக மக்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு ஊதியம் அளிக்கும். இந்த ஊதியப் பணம் வணிகத்தையும் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும்.
இதெல்லாம் அவ்வளவு எளிமையாக நடந்தால் மட்டுமே.
ஐந்தாண்டுகளில் 83,677 கி.மீ சாலை அமைக்கவேண்டுமெனில் திட்டம் ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்தில் செல்லவேண்டும். சராசரியாக ஆண்டுக்கு 16,735.4 கி.மீ. நீளத்துக்கு சாலை அமைக்கவேண்டும்.
இது சாத்தியமா?
அரசு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 2014-15ல் 4,410 கி.மீ. சாலைகளும், 2015-16ல் 6,061 கி.மீ. சாலைகளும் 2016-17ம் ஆண்டில் டிசம்பர்1016 வரையிலான காலத்தில் 4,699 கி.மீ. சாலைகளும் அமைக்கப்பட்டன.
எனவே, இத்திட்டத்தை நிறைவேற்ற சாலைகள் அமைக்கும் வேகத்தை அரசு மிக அதிகளவில் அதிகரிக்கவேண்டும்.
இது தவிர, புதிய நிலம் கையகப்படுத்தும் விதிகளுக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவிப்பதால், சாலைகள் அமைக்க நிலம் கையகப்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
கையகப்படுத்தும் நிலத்துக்கு வழங்கப்படும் கிரயத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால், நில உரிமையாளர்கள் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு தங்கள் நிலங்களை அளிக்க வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று இந்திய ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ஆனால் அமைச்சர் கூறுவதைப் போல இது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை.

பட மூலாதாரம், Empics
டெல்லியையும் மும்பையையும் இணைக்கும் தொழிற்பாதைத் திட்டத்தை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளால் நிலம் கையகப்படுத்த முடியாத சிக்கலில் இப்பாதையின் பெரும்பகுதி சிக்கிக் கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை உந்தித்தள்ள சாலைகள் அமைப்பது பழைய யோசனை. உண்மையில் கீன்ஸ் இதைப்பற்றி எழுதுவதற்கு முன்பே, ஹிட்லர் காலத்து ஜெர்மனியிலும், இத்தாலியிலும், ஜப்பானிலும் இந்த யோசனை செயல்படுத்தப்பட்டது.
இந்தியச் சூழலில் இது எந்த அளவுக்கு எடுபடும்? அது எந்த அளவுக்கு சிறப்பாக அரசாங்கத்தால் சாலைத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதைப் பொறுத்தது. ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், சிறப்பாகச் செல்படுத்தும் நாடாக இந்தியா அறியப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












