30 பெண்களிடம் வேண்டுமென்றே எச்ஐவி பரப்பிய நபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை

வாலெண்டினோ டலுடோ

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, வாலெண்டினோ டலுடோ 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்

கொடிய பாலியல் நோயை உருவாக்கக்கூடிய எச்ஐவி வைரஸை 30 பெண்களிடம் வேண்டுமென்றே பரப்பியதற்காக இத்தாலியை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு பரிசோதித்தபோது தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதை தெரிந்துகொண்ட பின்னரும் குறைந்தது 53 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் வாலெண்டினோ டலுடோ உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.

'ஹார்ட் ஸ்டைல்' என்ற புனைப்பெயரை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் டேட்டிங் செய்வதற்கு உதவும் இணையதளங்களில் உலாவந்து பெண்களை தொடர்பு கொண்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு விசாரணையின்போது, 33 வயதுடைய கணக்காளர் வாலெண்டினோவிற்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும், சிந்தனையற்ற நடவடிக்கை என்றும் டலுடோவின் வழக்கறிஞர்கள் இந்த விசாரணையில் வாதிட்டனர்.

எனினும், உடலுறவின்போது, ஆணுறை அணிய டலுடோவிடம் வலியுறுத்தப்பட்டபோது, தனக்கு ஒவ்வாமை அல்லது தான் எச் ஐ வி பரிசோதனை மேற்கொண்டுவிட்டதாக கூறியுள்ளார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவருடைய செயல்களின் விளைவாக, வாலெண்டினோவால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களை தவிர்த்து மேலும் நான்கு பேர் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :