தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்: பிரித்த அரசு மருத்துவர்கள்

பட மூலாதாரம், AIIMS
ஒடிஷாவைச் சேர்ந்த தலை ஓட்டிப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை டெல்லியில் உள்ள மருத்துவர்கள், வியாழன்று, அறுவை சிகிச்சை மூலம் பிரித்துள்ளனர்.
தற்போது இரண்டு வயதாகும் ஜெகா மற்றும் காளியா ஆகியோர் 16 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரிக்கப்பட்டதாகவும், தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 30 மருத்துவர்களைக் கொண்ட குழு, இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளது.
அவர்களின் ரத்த நாளங்கள் மற்றும் மூளைத் தசைகள் ஆகியவை ஒன்றாகப் பிணைந்திருந்தன. முப்பது லட்சம் பிறப்புகளில் ஒன்றிலேயே இவ்வாறு நடக்கும்.
இந்த அறுவை சிகிச்சை எவ்வளவு வெற்றிகரமானது என்பதை முடிவு செய்ய அடுத்த 18 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரன்தீப் குலேரியா பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் கூறினார்.

பட மூலாதாரம், AIIMS
"க்ரானியோபேகஸ்" எனப்படும் இந்த நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 50% பேர் பிறந்த 24 மணிநேரத்தில் இருப்பதற்கான வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதையும் மீறி இரண்டு ஆண்டுகள் போராட்டம் நடத்திய ஜெகாவுக்கு இதயக் கோளாறும், காளியாவுக்கு சிறுநீரகக் கோளாறும் உள்ளதாக நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஏ.கே.மகாபத்ரா கூறுகிறார்.
"ஜெகா தொடக்கத்தில் நல்ல நிலையில் இருந்தாலும் அவன் உடல் நிலை தற்போது மோசமாகி வருகிறது. காளியா நல்ல நிலையில் உள்ளான்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AIIMS
அறுவை சிகிச்சை முடிந்ததும், அவர்களின் தலையை தோல் மூலம் மூடுவதே மிகவும் சவாலாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"அவர்கள் நல்ல நிலையை அடைந்தபின் அவர்களின் மண்டை ஓட்டை சீர் செய்வதே முக்கியப் பணி," என்று ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மணீஷ் சிங்கால் கூறினார்.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 28 அன்று நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது அவர்களின் பிணைந்த ரத்த நாளங்களைப் பிரிப்பதற்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













