ஜெயலலிதா கை ரேகையை ஏற்றுக்கொண்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துமனையில் இருந்த காலகட்டத்தில் நடந்த இடைத்தேர்தல்களின்போது, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய அவரது கைரேகையை ஏற்றுக்கொண்டது குறித்து விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட சீனிவேல் மரணமடைந்ததால், அந்தத் தொகுதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதி மட்டுமல்லாமல், சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் அதே நாளில் தேர்தல் நடத்தப்பட்டது.
அந்த சமயத்தில் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்ததால் கட்சியின் சார்பில் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கும் 'பி' படிவத்தில் அவரது கையெழுத்திற்குப் பதிலாக, அவரது கை ரேகை பெறப்பட்டது.
அது ஜெயலலிதாவின் கை ரேகைதான் என்பதற்கு சென்னை அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவர் பாலாஜி என்பவர் சான்றளித்தார். இந்த மூன்று தொகுதிகளிலுமே அ.தி.மு.க. வெற்றிபெற்றது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே. போஸின் வெற்றியை எதிர்த்து, அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட சரவணன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி சாட்சியமளித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதாவின் கை ரேகையை ஏற்றுக்கொண்டது குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய செயலர் வில்பர்ட் அக்டோபர் 6-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- அழிவுப்பாதைக்கு வழி அமைத்துவிட்டார் அருண் ஜேட்லி: யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு
- சினிமா விமர்சனம்: ஸ்பைடர்
- தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் சின்னவாட்டுக்கு 5 ஆண்டுகள் சிறை
- முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை
- வட கொரியா பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
- இலங்கை: கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












