You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகலா, தினகரன் நீக்கம்: பொதுச் செயலாளர் பதவி ரத்து - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள்
அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே சசிகலாவின் நியமனம் ரத்து, அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி ரத்து என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இன்றைய அ.இ.அ.தி.மு.கவின் பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் ஆளும் அ.இ.அ.தி.மு.கவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு சுமார் 2150 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பொதுக் குழுவில் உள்ள பலரும் செயற்குழுவில் உள்ளனர்.
இதற்கு தடை விதிக்க வேண்டுமென்ற டிடிவி தினகரன் தரப்பின் கோரிக்கையை திங்கள் ழமையன்று சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவின் தற்காலிக பொது செயலாளராக நியமிக்கப்பட்ட வி.கே சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் செல்லாது என்றும் அதிமுக பொதுக்கூழு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனை கட்சியின் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கி மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய பதவிகள்: ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பதவிகளில் நீடிப்பார்கள் என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீ ர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்படுவதாகவும், பொதுச் செயலாளர் பதவிக்கான அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படுவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக, கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரவும் தீர்மானிக்கப்பட்டது.
பொதுச் செயலாளராக இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதால், அந்தப்பதவியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைந்தனர். சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகத் தொடர்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :