You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பள்ளியில் இறந்து கிடந்த சிறுவன்: கேள்விக்குள்ளாகும் மாணவர்களின் பாதுகாப்பு
ஹரியானா மாநிலம் குருகிராமில் சோனா சாலையில் அமைந்திருக்கும் 'ரேயான் இண்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமையன்று கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தான்.
போலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஏழு வயது சிறுவனை கொன்ற குற்றச்சாட்டில் பள்ளியின் பேருந்து ஓட்டுனராக பணிபுரியும் அஷோக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருகிராம் போலிசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவனை கொலை செய்வதற்கு முன்பு பாலியல்ரீதியாக துன்புறுத்தியதை அஷோக் ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், "இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது, காவல்துறையினர் குற்றவாளியை கண்டறிந்துள்ளனர், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.
சிறார் நீதிச்சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ், ரேயான் இண்டர்நேஷனல் ஸ்கூலின் நிர்வாகி மற்றும் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'போண்ட்ஸி' காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையிலும் பள்ளியின் நிர்வாகம் மற்றும் நிர்வாகியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உறவினர்கள் சீற்றம்
பாலியல்ரீதியாக சிறுவன்மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்ட தகவல் தெரிந்த்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உறவினர்கள் சீற்றமடைந்தனர்.
பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்களின் பெற்றோரும், உறவினர்களும் ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியது ஊடகங்கள் மூலம் நாடு முழுவதும் அம்பலமானது.
ஹரியானா மாநில கல்வி அமைச்சர் ராம் விலாஸ் ஷர்மா, ஊடகங்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
இந்த கொலைக்கு யார் பொறுப்பு?
பள்ளி நிர்வாகம்தான் இதற்கு பொறுப்பேற்கவேண்டும் என்று நினைக்கிறேன். சிறார் நீதி சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ், பள்ளி நிர்வாகம் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்.
இதைத்தவிர, கைது செய்யப்பட்டிருக்கும் அஷோக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றத்தை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்.
வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படுமா?
காவல்துறையினர் போதுமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இறந்த மாணவரின் பெற்றோருக்கு அதில் திருப்தி ஏற்படாவிட்டால், விசாரணையை எந்தவொரு முகமையிடம் ஒப்படைக்க ஹரியானா மாநில அரசு தயங்காது.
ஆனால், ஏழு நாட்களில் குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி, அவருக்கு எதிரான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தி அடைய வாய்ப்பே இருக்காது என்று நம்புகிறேன்.
காப்பீடு தொகையை பள்ளிகள் வசூலிக்கும் நிலையிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லையே?
மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்தும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன. பாதுகாப்பின்மை, பாலியல்ரீதியான துன்புறுத்தல், கொலை என்பது மிகப்பெரிய கொடூரச் செயல்கள், இவை மிகவும் தீவிரமாக, விரைவாக தீர்க்கப்படவேண்டியவை. இவை தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவிருக்கிறோம்.
மாணவர்களின் பெற்றோரும், உறவினர்களும் நடத்திய ஊர்வலத்தில் தடியடி நடத்தப்பட்டுள்ளதே?
இதுகுறித்த முழுமையான தகவல்கள் என்னிடம் இல்லை. பள்ளிக்கு அருகே ஒரு மது விற்பனையகம் இருக்கிறது. அதனை மூடிவிட முடிவெடுத்துள்ளோம்.
மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
பிடிஐ செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, ரேயான் பள்ளி விவகாரத்தில் பள்ளியின் நிர்வாக அதிகாரிகள் இருவர் கைது செய்யப்படுள்ளனர். மேலும், பள்ளியின் தற்காலிக தலைமையாசிரியரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ரேயான் பள்ளியில் இதே போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வசந்த்குஞ்ச் பகுதியில் அமைந்திருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் ஸ்கூலில் முதல் வகுப்பு படித்து வந்த திவ்யான்ஷ் என்ற மாணவர் செப்டிக் டாங்கில் மயக்கமான நிலையில் கண்டறியப்பட்டார்.
மருத்துமனைக்கு கொண்டு சென்ற அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தை பெரிதாக்கமால் அமைதியாக இருக்குமாறு திவ்யான்ஷின் குடும்பத்தினருக்கு அழுத்தம் அளிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் இந்த மரணம் நேரிட்டதாக போலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
டெல்லி மற்றும் என்.சி.ஆர் பள்ளிகளில் தொடரும் வன்முறை சம்பவங்கள்
அண்மைக் காலங்களில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் பள்ளிகளில் நடைபெறுவது குறித்து பெற்றோரின் கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில் பாபா ஹரிதாஸ் நகரில் ஒரு தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் நான்கு வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் நொய்டா செக்டர் 100இல் அமைந்திருக்கும் 'பாத்வேஸ்' பள்ளி மாணவர்கள் சிலர், ஸ்னேப்சாட் ஸ்டோரிக்காக, சக மாணவரை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அடிபட்ட மாணவர் யார் என்பதும் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது. பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். தனக்கு நேர்ந்த அவமானத்தால் அதிர்ந்துபோன மாணவர், மன அழுத்தத்திற்கு உள்ளானார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், காஜியாபாதில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், சக மாணவரை தாக்கியதுடன் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போபாலின் கிட்ஸி ப்ளே ஸ்கூலின் பள்ளி இயக்குனரே ஒரு மாணவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
விசாரணையில் குழந்தை குற்றம்சாட்டப்பட்டவரை சுட்டிக்காட்டி, அவர் நடந்து கொண்ட முறையை அந்தக் குழந்தை சொல்லிவிட்டது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல் பிரதேச மாநிலம் சம்ப்பாவில் இந்த ஆண்டு ஜூலை மாதம், பத்தாம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல்ரீதியான துன்புறுத்தல் செய்த செய்தி வெளியானதை அடுத்து, மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
தேர்வில் தேர்ச்சியடையவிடமாட்டேன் என்று அச்சுறுத்திய ஆசிரியர் சுமார் ஓராண்டாக மாணவியை பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்.
மக்களை சீற்றமடையச் செய்த இந்த சம்பவத்திற்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் திசைமாறி, பள்ளியும் தாக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு பெங்களூருவில் விப்க்யோர் என்ற பள்ளியில் ஆறு வயது மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதை அடுத்து பல நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சியளிக்கும் இருவரை காவல்துறை கைது செய்தது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :