You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டுக்கு ஒருவர் பலி
மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டு விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க தனி தொலைபேசி எண் ஒன்றையும் காவல்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரிக்கு அருகில் இருக்கும் மொட்டமலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் அருகிலுள்ள கல்லூரியில் இளங்கலை வணிகவியலில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
இந்த நிலையில், விக்னேஷ் தனது வீட்டில் புதன்கிழமையன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். அவரது வலது கையில் கூர்மையான பொருளால் திமிங்கிலத்தின் படம் வரையப்பட்டிருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. மேலும் அவர் வைத்திருந்த நோட்டுப் புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படம் வரையப்பட்டிருக்கிறது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், "அவர் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டைத்தான் விளையாடியிருக்கிறார். அவரது செல்பேசியில் அதற்கான 'ஆப்' (App) ஏதுமில்லை. ஆனால், அவர் ஆன்லைனில் விளையாடியிருக்கலாம். மேலும் ஒரு வழக்கத்திற்கு மாறான வாட்ஸப் குழுமத்திலும் அவர் இருந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
விக்னேஷ் சில நாட்களுக்கு முன்பாகத்தான் ஆண்ட்ராய்ட் இயங்குதளமுள்ள செல்பேசியை வாங்கியுள்ளார். "அவரது நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாகவே விசித்திரமாக இருந்ததை குடும்பத்தினர் உறுதிசெய்கின்றனர். அவர் தூக்கிலிட்டுக்கொள்ளும்போது அவரது செல்பேசி கேமரா இயக்கத்தில் இருந்தது" என்கிறார் மணிவண்ணன்.
விசாரணை துவக்க நிலையில் இருந்தாலும் விக்னேஷின் நண்பர்கள் சிலரும் இந்த ஆட்டத்தில் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுவருவதாக மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார்.
இந்த மரணம் குறித்து விசாரிக்க காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் படை ஒன்றை மாவட்ட காவல்துறை அமைத்துள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் காவல்துறை தற்போது ஏற்பாடுகளைச் செய்துவருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் யாராவது இந்த விளையாட்டில் ஈடுபடுவது குறித்துத் தெரியவந்தால், காவல்துறைக்கு தகவல் அளிக்க தனி எண் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை நகரக் காவல்துறை இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ப்ளூ வேல் கணினி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் 50 வேலைகளைச் செய்ய வேண்டும். அதிகாலை 4.20க்கு எழுவது, பேய்ப் படங்களைத் தனியாகப் பார்ப்பது, சுயமாக காயங்களை ஏற்படுத்திக்கொள்வது, திமிங்கிலத்தின் படத்தை கூர்மையான பொருளால் கையில் வரைந்துகொள்வது, உயரமான கட்டடத்தின் உச்சிக்கு ஏறுவது போன்ற பணிகள், விளையாட்டின் நிர்வாகிகளால் அளிக்கப்படும். முடிவில் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்.
உலகம் முழுவதும் இந்த விளையாட்டிற்கு 130 பேர்வரை பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
சமூகவலைதளங்களில் இருந்தும் தேடுபொறிகளில் இருந்தும் இந்த விளையாட்டிற்கான இணைப்பை நீக்கும்படி இந்திய அரசு ஏற்கனவே இணையதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
உலகில் பிரபலமான போக்கிமோன் கோ விளையாட்டு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்