You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடகொரியா அச்சுறுத்தல்: ஜப்பான் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்?
- எழுதியவர், கிறிஸ் மொரிஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலை ஜப்பான் மக்கள் எதிர்கொள்ள இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? உண்மையை சொல்வதென்றால் அதற்கு இனி நேரமே கிடையாது.
இது பற்றி ஜப்பான் அரசு கூறுகையில், "கடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியாவின் ஏவுகணை ஜப்பான் நேரப்படி காலை 5.58 மணிக்கு ஏவப்பட்டது. ஜப்பான் வான் பகுதியைக் கடந்து ஹொக்கைடோ கிழக்கு கடல் பகுதியில் அது காலை 6.12 மணியளவில் விழுந்தது.
இதையொட்டி காலை 6.02 மணிக்கு அனைத்து குடிமக்களுக்கும் ஜப்பான் அரசு அனுப்பிய குறுஞ்செய்தியில் "அனைவரும் வலுவான கட்டடம் அல்லது அடித்தள பகுதிக்குச் செல்ல வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டது.
ஜப்பான் வான் பகுதியில் அந்த ஏவுணை சரியாக காலை 6.02 முதல் 6.07 மணிவரை சென்றுள்ளதாக அரசு ஊடகமான என்ஹெச்கே தெரிவித்துள்ளது.
ஜப்பானை இலக்காக வைத்து அந்த ஏவுகணை செலுத்தப்பட்டிருந்தால், குடிமக்களுக்கு குறுஞ்செய்தி பகிரப்பட்ட அடுத்த மூன்று நொடிகளில் மிகப் பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தியிருக்கும்.
இந்த இடைப்பட்ட குறுகிய காலத்தில் பெரும்பான்மை மக்களால் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருக்க முடியாது.
தொடர்புடைய செய்திகள்
ஏவுகணை பாதுகாப்பு
எனவே, தனது தற்காப்பு நடவடிக்கைகளை ஜப்பான் மிகத் தீவிரமாக மேற்கொள்வது அவசியமாகும்.
இந்த நேரத்தில் ஜப்பான் செய்ய வேண்டியது என்ன? அதற்கு வேறு என்ன கிடைக்கும்?
தற்போதைய ஏவுகணை பாதுகாப்பு முறை இரண்டு பகுதிகளாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பான், தென் கொரியா போர்க்கப்பலில் நிறுவப்பட்டுள்ள ஏஜிஸ் பாதுகாப்பு முறை, முன்கூட்டியே ஏவுகணை வருவதையோ அல்லது ஏவுகணை ஏவப்பட்டதும் பாதி தூரத்தில் அவற்றை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக பிஏசி-3 ரக ஏவுகணை எதிர்ப்பு பேட்ரியாட், குறுகிய தூரம் சென்று தாக்கவல்லது. எதிரி பகுதியில் இருந்து ஏவப்படும் ஏவுகணை, இலக்கை அடையும் தூரத்தை நெருங்கும் வேளையில் அதை அழிக்கும் வல்லமை பேட்ரியாட்டுக்கு உண்டு.
இவை இரண்டும் தவறான ஒப்பீடு கிடையாது. ஆனால், ஏஜிஸ் பாதுகாப்பு முறையில் நிறுவப்பட்டுள்ள கப்பல்கள், சரியான இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு சரியான நேரத்தில் எதிர்த்தாக்குதலை மேற்கொள்ளவேண்டும்.
பேட்ரியாட் பாதுகாப்பு முறையில், எதிரி இலக்கை துல்லியமாக தாக்க முடியும். ஆனால், பெரிய பரப்பளவை அதனைக் கொண்டு பாதுகாக்க முடியாது.
இவற்றுக்கு மாற்றாக வேறு ஏற்பாடுகள் இருந்தாலும், அவற்றை நிறுவ கூடுதல் நேரமும் அதிக நிதிச்சுமையும் ஏற்படும்.
எனவே, நிலத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தக் கூடிய, கூடுதல் பாதுகாப்பு வழங்கக் கூடிய ஏஜிஸ் முறையில் ஜப்பான் முதலீடு செய்யக் கூடும். அல்லது, குவாமில் நிறுவியதைப் போலவும், தென் கொரியாவுக்கு அமெரிக்கா வழங்கியது போலவும் உயர் அடுக்கு பகுதி பாதுகாப்பு முறையை ஜப்பான் கவனத்தில் கொள்ளலாம்.
ஆனால், இந்த பாதுகாப்பு முறையை இதுவரை போர்க்களத்துக்கான சோதனைக்கு ஜப்பான் உட்படுத்தவில்லை.
இந்நிலையில், திடீரென கொத்துக் கொத்தாக ஏவுகணைகள் ஏவப்பட்டால் அவற்றில் இருந்து தற்போதைய பாதுகாப்பு முறைகளால் நிச்யமாக நாட்டை பாதுகாக்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
அதனால்தான் வட கொரியாவின் ஏவுகணைகளை அழிக்கும் வல்லமை படைத்த மேம்பட்ட பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவாதம் ஜப்பானில் தொடங்கியுள்ளது.
ஆனால், ஜப்பானின் அமைதியை விரும்பும் அரசியலமைப்பின்படி இது சாத்தியமாகுமா என்பது தெளிவாக இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :