You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனைவியுடன் கட்டாயப் பாலுறவு குற்றமல்ல: சுஷ்மா கணவரின் கருத்துக்கு டிவிட்டரில் எதிர்ப்பு
மனைவியுடன் கட்டாயப் பாலியல் உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று கருத்து வெளியிட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கெளஷலுக்கு டிவிட்டர் பயன்பாட்டாளர்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமணத்துக்கு பின்பு மனைவியுடன் கட்டாயப் பாலியல் உறவை கணவன் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மத்திய அரசு கூறியிருந்தது.
இதற்குப் பல்வேறு பெண்ணுரிமை அமைப்புகளும் பெண்ணியவாதிகளும் ஆட்சேபம் தெரிவித்து கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் தமது டிவிட்டர் பக்கத்தில் ஸ்வராஜ் கெளஷல், "திருமணத்துக்கு பிறகு கட்டாயப் பாலியல் என்பது எல்லாம் ஒன்றுமில்லை. நமது வீடுகள் காவல் நிலையங்களாகி விடக் கூடாது" என்று பதவிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், "இதை குற்றமாக்கினால் வீடுகளை விட, சிறைகளில்தான் ஏராளமான கணவர்கள் இருக்க நேரிடும்" என்று கூறியுள்ளார்.
அவரது கருத்துக்கு பதிலளித்த செளரப் என்ற பயன்பாட்டாளர், "திருமணத்துக்குப் பிந்தைய பாலியல் என்று ஒன்றுமில்லை. எல்லாமே கெட்ட மனநிலையை சார்ந்தது" என்று கூறியுள்ளார்.
மற்றொரு பயன்பாட்டாளரான மைலா கமீஸ், "எனது மனைவியின் விருப்பமின்றி அவரை கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
ஸ்ரேயா இலா அனாசுயா என்ற பயன்பாட்டாளர், "வீட்டில் வேறு என்னதான் இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள்? குழந்தைப்பருவ பாலியல் தொந்தரவா? குடும்ப வன்முறையா? என கேள்வி எழுப்பி கருத்து பதிவிட்டுள்ளார்.
லா வி என் ரோஸ் என்ற பயன்பாட்டாளர், "வழக்கறிஞராக இருந்து கொண்டு, ஒப்புதல் என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லை. திருமணம் என்பது தம்பதியில் ஒருவர் விரும்பும் போதெல்லாம் மற்றொருவருடன் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என்பது கிடையாது" என்று கூறியுள்ளார்.
இவ்வாறு நூற்றுக்கணக்கான டிவிட்டர் பயன்பாட்டாளர்கள், ஸ்வராஜ் கெளஷலின் கருத்துக்கு நேரடியாகப் பதிலளித்தும் அவரது கருத்தை மேற்கோள்காட்டியும் குறிப்பிட்டு பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
சுஷ்மா ஸ்வராஜின் கணவரான ஸ்வராஜ் கெளஷல், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். முன்னாள் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.
இந்தியாவில் திருமணத்துக்குப் பிந்தைய கட்டாய பாலுறவு என்பது குற்றமல்ல என்ற நிலை உள்ளது. அதே சமயம், திருமணமான ஒரு கணவர் தனது மனைவியின் விருப்பமின்றி தகாத உறவு கொண்டால் அது குற்றமாக கருதப்பட வேண்டும் எனக் கூறி பல்வேறு மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு கருத்து கூறுகையில், "திருமணத்துக்கு பின்பு மனைவியுடன் கட்டாயப் பாலியல் உறவு கொள்வதை குற்றமாகக் கருதக் கூடாது. அச்செயலை குற்றமாகக் கருதினால், அது திருமண அமைப்பு முறையையே வலுவிழக்கச் செய்வது மட்டுமின்றி கணவன்மார்களை துன்புறுத்த பயன்படும் எளிய கருவியாகி விடும்" என்று கூறியுள்ளது.
அப்படியென்றால் பாலியல் வல்லுறவுக்கும் திருமண பாலியலுக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்வி எழுகிறது.
பாலியல் வல்லுறவு என்றால் என்ன?
இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவின்படி, கீழ்கண்ட ஆறு சூழ்நிலைகளில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினால் அது பாலியல் வன்புணர்வு அல்லது கற்பழிப்பாகக் கருதப்படும்.
1. பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக உறவு கொள்வது
2. பெண்ணின் விருப்பமின்றி உறவு கொள்வது
3. பெண்ணை மிரட்டியோ அல்லது உயிரைப் பறிப்பதாகவோ அல்லது நெருக்கமான ஒருவரிடமோ தவறாக நடக்க முயன்று அவரை நிர்பந்தித்து இச்சையை தீர்த்துக் கொள்ளுதல்
4. ஒரு தனி நபரின் நலனுக்காக பாலியல் வல்லுறவுக்கு சம்பந்தப்பட்ட பெண் உடன்படுவது
5. பாலியல் வன்புணர்வுக்கு உடன்படும்போது அந்த பெண்ணின் மனநிலை சரியில்லாமல் இருப்பது அல்லது போதை வஸ்துக்கள் அளிக்கப்பட்டு தன்னைச் சுற்றி எது நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் அந்த பெண் இருப்பது
6. 16 வயதுக்கு குறைவாக இருக்கும் சிறுமி விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ பாலியலுக்கு ஆளாக்கப்படுவது.
ஹிந்து திருமணச்சட்டம் கூறுவது என்ன?
ஹிந்து திருமணச் சட்டம், கணவனும் மனைவியும் கூட்டாக வாழ்வதற்கான பொறுப்புகளை வரையறுத்துள்ளது.
பாலியல் உறவு கொள்ள மறுப்பது தவறானது என்றும் அதைக் காரணமாக வைத்து விவாகரத்து கோர முடியும் என்றும் ஹிந்து திருமண சட்டம் கூறுகிறது.
குடும்ப வன்முறை சட்டம்
இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. வீட்டுக்குள் திருமணமான பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளைத் தடுக்கும் நோக்குடன் அச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :