பதின்ம வயது பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவு; இது பாகிஸ்தான் தண்டனை

பாகிஸ்தானில் உள்ள முல்தானில், பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவு பிறப்பித்த சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வேறு ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட இரு பெண்களின் குடும்பத்தாரும் முன்பே அறிந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கூட்டாக இணைந்து விசாரணை ஒன்றை நடத்தியுள்ளனர்.

''ஜிர்கா எனப்படும் கிராம சபை ஒன்று, 16 வயது நிரம்பிய பெண்ணை தண்டிக்கும் விதமாக அவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். காரணம், அப்பெண்ணின் சகோதரர் ஒரு 12 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்'' என்று போலீஸ் அதிகாரி அல்லா பாக்ஷ் ஏ எஃப் பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், தனது 12 வயது தங்கையை உறவினர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறி கிராம சபையில் புகார் தெரிவித்ததாக அதிகாரி அல்லா பாக்ஷ் கூறுகிறார்.

புகார் கொடுத்த நபரை அழைத்த கிராம சபை, பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான நபரின் சகோதரியை பாலியல் வல்லுறவு செய்ய கிராம சபை உத்தரவிட்டது.

கிராம சபையின் உத்தரவை அந்த நபரும் நிறைவேற்றியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கிராம சபையினர் முன் வலுக்கட்டாயமாக ஆஜர்படுத்த பெண், அவரது பெற்றோர் உள்பட அனைவரது முன்னிலையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று பாகிஸ்தானில் வெளிவரும் 'டான்' என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களின் தாய்மார்களும் பின்னர் புகார்களை பதிவு செய்துள்ளனர்.

இரண்டு பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :