ஆதார்: இணைப்பு அவகாசம் டிசம்பர் 31வரை நீட்டிப்பு

newsonair

பட மூலாதாரம், AIR

மத்திய அரசு திட்டங்களின் பலன்களைப் பெற அவற்றுடன் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என நிர்ணயித்திருந்த காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

"ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு நெருங்கி வருவதால் அது இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று அவற்றை தாக்கல் செய்தவர்கள் சார்பில் வழக்கறிஞர் ஷியாம் திவான் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அப்போது மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே.வேணுகோபால், "சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் இணைப்பை வரும் பெற செப்டம்பர் 30-ஆம் தேதிவரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது" என்றார்.

narinder nanu

பட மூலாதாரம், Narinder nanu

இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "மத்திய அரசின் அறிவிப்பையடுத்து இந்த மனுக்களை உடனே விசாரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம். நவம்பர் முதல் வாரத்தில் மனுக்கள் மீதான விசாரணை பட்டியலிடுமாறு பதிவாளரை கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

முன்னதாக, ஆதார் எண் பதிவு முறைக்கு எதிராக ஏராளமானோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்களில் சிலர் ஆதார் திட்டத்தின்படி தனி நபரின் கண் கருவிழி, கைரேகை போன்ற விவரங்கள் வெளியே கசிய வாய்ப்புள்ளதால் அது தனி நபர் அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளது" என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபகள் அமர்விடம் முறையிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இதையடுத்து அந்தரங்கத்துக்கான உரிமை என்பது குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையில் உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் அமர்வு கேட்டுக் கொண்டது.

இந்த வழக்கில், அந்தரங்கத்துக்கான உரிமை என்பது "அடிப்படை உரிமையே" என்று உச்ச நீதிமன்றம் கடந்த 24-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு அடிப்படையில் ஆதார் விவகாரம் தொடர்புடைய மனுக்களை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :