நீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு முறையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் "நீட்" தேர்வு முறையில் இருந்து நடப்பு கல்வியாண்டில் மட்டும் விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தின் வரைவை மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

இந்த அவசர சட்டத்துக்கு எதிராக மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடமுறைப்படி படித்த மாணவர்கள் மற்றும் ஏற்கெனவே "நீட்" தேர்வை எழுதி வெற்றி பெறுவோம் என்று காத்திருந்த மாணவர்களில் ஒரு பிரிவினரும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது கடந்த வாரம் விசாரணை நடத்திய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு, "மாணவர்களின் நலன்கள், எதிர்காலம் பாதிக்காத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, "தமிழகத்துக்கு நடப்புக் கல்வியாண்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அரசால் ஒப்புதல் வழங்க முடியாது" என்றார்.

மேலும், "நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் நீட் முறைப்படியே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் நிலையில், தமிழகத்துக்கு மட்டும் சலுகை வழங்கினால் அது மோசமான முன்னுதாரணமாகி விடும்" என்று துஷர் மேத்தா வாதிட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வாதிட்ட தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திர நாத், "நீட் விவகாரத்தில் மத்திய அரசின் திடீர் நடவடிக்கையால் தமிழகத்தில் ஏராளமான கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

இந்த விஷயத்தில் மாநில மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசே சட்டமியற்றி தமிழகத்துக்கு விலக்கு அளித்திருக்க வேண்டும்" என்றார் ரவீந்திர நாத்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி கெஹர் பிறப்பித்த உத்தரவில், "நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.

"இது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளில் தெளிவுபடுத்திய பிறகும், ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அவசர சட்ட வரைவை இயற்றியது ஏன்?" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நாளை மதிப்பெண் பட்டியல்

"நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர்களுக்கான சேர்க்கையை வரும் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்" என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நாளை (ஆகஸ்ட்23) மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 24-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும் அதன் பிறகு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் மற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறையும் தொடங்கும்" என்றார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :