''நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்களிக்க ஒத்துழைப்பு; ஆனால்....'': நிர்மலா சீதாராமன்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு முறையான அவசர சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசை அணுகினால் இந்த ஒரு ஆண்டிற்கு (நடப்பாண்டு)நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று (ஞாயிறு ) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தை பொறுத்தவரை தனியார் மருத்துவ கல்லூரிகளிலும், நிகர் நிலை மருத்துவ கல்லூரிகளிலும் நீட் அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தமிழக அரசுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிலும்தான் பிரச்சனை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு தாற்காலிக தீர்வு குறித்து பேசிய அவர், அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் ஆகியவற்றில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணிக்கையுடன் சுட்டிக்காட்டி தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றினால் இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக இருக்கிறது என்றார்.

இந்த விவகாரத்தில் நிரந்திர விலக்கு என்பது அளிக்கப்பட முடியாது என்றும், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பிற மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளிலும் சென்று சேர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி தானும், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் பிரதமர் மோதியுடன் இதுகுறித்து வலியுறுத்தி பேசியதாகவும், தற்போது மாநில அரசு அவசர சட்டம் நிறைவேற்றினால் மத்திய அரசு ஒத்துழைக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதனிடையே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் புதிய அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் நாளை (திங்கள்கிழமை) அளிக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு டெல்லி செல்ல இருக்கிறார் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

அவசர சட்டத்தை இயற்றுங்கள்: கமல் ஹாசன்

நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தை தொடர்ந்து, சமூக ஊடகமான ட்விட்டரில் நடிகர் கமல் ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம் என்றும், மாணவர் எதிர்காலம் தயவு கூர்ந்து உடனே பேசுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :