You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இறுதி கட்டத்தில் அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி!
தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவதற்கான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, அவரால் கட்சியின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது ஆகியவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பது ஓ.பன்னீர்செல்வம் விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் ஒன்றாக செயல்படும்போது, தற்போது பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் உள்ள முன்னாள் அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு கட்சியில் எத்தகைய அங்கீகாரம் வழங்கப்படும், அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் போன்றவை குறித்து கடந்த இரு தினங்களாக எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அவரவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து இன்று பிற்பகலுக்குள் இணைப்பு தொடர்பான முக்கிய முடிவை இரு தரப்பும் வெளியிடும் என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆலோசனையின் முடிவில், இணைப்பு பற்றிய தகவலை முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் வெளியிடுவார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னையில் செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் பேசுகையில், "அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நல்ல முடிவை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மகராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையில் இன்று அவரது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு அவசரமாக சென்னைக்கு திரும்பியுள்ளார்.
இது குறித்து மும்பையில் உள்ள ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி உமேஷ் கஷிகர் கூறுகையில், "அவசர பணிகள் காரணமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்" என்றார்.
பிற செய்திகள்:
- அச்சுறுத்தலுக்கு மத்தியில் இசை நிகழ்ச்சி நடத்திய ஆப்கன் பாடகி
- கிரிக்கெட்: இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்
- ஜீவ சமாதி அடையப்போவதாக முருகன் உண்ணாவிரதம்: சிறைத்துறையின் கருத்து என்ன?
- புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ரகுராய்க்கு கேமராவை அறிமுகப்படுத்தியது யார்?
- ''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்படுகிறது'': கோலி வருத்தம்
- மோதி ஆட்சியில் நடந்த பெரும் ரயில் விபத்துகள்: 'எப்போது மத்திய அரசு விழிக்கும்?' - காங்கிரஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :