You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் கொலை குற்றவாளி முருகனின் உண்ணாவிரதம் குறித்து கருத்து கூற போலீஸ் மறுப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ஜீவசமாதி அடையப்போவதாக் கூறி கடந்த மூன்று நாட்களாக வேலூர் சிறையில்உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் நிலையில், இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கருத்துதெரிவிக்க மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக சிறைத்துறையின் கூடுதல் இயக்குநர் சைலேந்திர பாபுவிடம் கேட்டபோது, ''முருகன் ஒரு மனு அளித்துள்ளார். இறைவனை வேண்டி ஜீவசமாதி அடையப்போவதாக கூறியுள்ளார். கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்,'' என்று கூறினார்.
முன்னதாக, முருகன் தனது விருப்பப்படி மதநம்பிக்கையுடன் இருப்பதுபற்றிகேட்டபோது, ''தற்போது இதில் வேறு தகவல்களை கூறமுடியாது,'' என்று தெரிவித்தார்
26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் முருகன் தனது விருப்பத்தை மனுவாக எழுதி சிறைத்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில், முருகன் அவரது மனைவி நளினி, சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பின்னர் நால்வருக்கும் விடுதலை அளிக்கக்கோரிப் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. அந்த போராட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
தற்போது வேலூர் சிறையில் இருக்கும் முருகன், நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சமயங்களில் காவி உடையில், நீளமான தாடியுடன் தோன்றும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
முருகனின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அண்மையில் இலங்கையில் வந்த முருகனின் தாயாரை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும், அதை எதிர்த்து முருகன் வழக்கு நடத்திவருகிறார் என்றும் கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய முருகனின் சட்ட ஆலோசகர் புகழேந்தி முருகன் ஜீவசமாதி அடையவிருப்பதாக முன்னதாகவே அறிவித்திருந்தார் என்றும், கடந்த ஏழு ஆண்டுகளாக தீவிரமாக விஷ்ணு பக்தராக உள்ளார் என்றும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்:
சிறையில் பிறந்த நளினி-முருகன் தம்பதியின் மகள் ஹரித்திரா தற்போது லண்டனில் வசித்துவருகிறார்.
மருத்துவராக வேலைசெய்துவரும் ஹரித்திராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டி நளினி ஆறுமாத காலம் விடுப்புவேண்டும் என்று விண்ணப்பித்துள்ள ஒரு வார காலத்தை அடுத்து முருகன் ஜீவாசமாதி அடைய விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் புகழேந்தி தெரிவித்தார்.
''26 ஆண்டுகளுக்கு மேலாக முருகன் மற்றும் நளினி இருவரும் சிறையில் உள்ளனர். இருவரும் தங்களது மகளை கடந்த 2004ல் நேரில் சந்தித்த கடைசிமுறை. தற்போது தங்களது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். அதற்குக் குறைந்தபட்சம் ஆறு மாத காலம் பரோலில் விடுவிக்குமாறு நளினி கேட்டுள்ளார். இதற்கிடையில், முருகன் தனக்கு விடுதலை இல்லாத இந்தச் சிறை வாழ்க்கையின் துன்பத்தைப் போக்க ஜீவசமாதி அடையவேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்,'' என்று புகழேந்தி கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :