You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக அணிகள் இணைப்பு: பேரத்தின் பின்னணியில் நடப்பது என்ன?
அ.தி.மு.கவின் இரு அணிகளும் வெள்ளிக்கிழமையே இணைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தொடர்வதாக இரு தரப்பும் அறிவித்திருக்கின்றன. இணைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?
ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியில் தற்போது ஓ. பன்னீர்செல்வம் தவிர, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, பொன்னய்யன், கே. பாண்டியராஜன், செம்மலை உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர்.
மேலும், 11 சட்டமன்ற உறுப்பினர்களும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படுகிறது.
இரு அணிகளும் இணைவதற்கு ஓ. பன்னீர்செல்வம் அணி வெளிப்படையாக இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தது.
முதலாவதாக, தற்போது நியமன பொதுச் செயலாளராக இருக்கும் வி.கே. சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இரண்டாவதாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் (இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உண்ணாவிரதப் போராட்டத்தையே நடத்தியது) என்றும் கோரப்பட்டது.
தற்போதைய சூழலில், ஓ. பன்னீர்செல்வத்தின் இரு கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
வி.கே. சசிகலா சிறையில் இருக்கும் நிலையில், துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் டிடிவி தினகரனை கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுக்கிவைப்பதாக மட்டுமே எடப்பாடி தரப்பு கூறியிருக்கிறது.
மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையை கோரிய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று மட்டும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, இணைப்பிற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.கவின் வழிகாட்டும் குழுவின் தலைவராக இருப்பார் என்றும் துணை முதலமைச்சர் என்ற பொறுப்பில் சில அமைச்சகங்களும் அவருக்கு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், அவரது அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்றும் செய்திகள் உலாவின.
இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை மாலையில், இணைப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இதற்குப் பிறகுதான், ஓ. பன்னீர்செல்வம் அணிக்குள் இணைப்பு தொடர்பாக முரண்டபட்ட கருத்துக்கள் இருப்பது குறித்து வெளிப்படையாக விவாதிக்க ஆரம்பிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து அரசு விசாரணை ஆணையம் அமைக்கும் என தமிழக அரசு அறிவித்தபோது உடனடியாக அதனை ஆதரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் மஃபா பாண்டியராஜன்.
அதே நேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைதான் தேவை என்று தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் கூறினார்.
அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைய வேண்டுமென பாரதீய ஜனதா கட்சி அழுத்தம் கொடுப்பதாகச் சொல்லப்படும் நிலையில், வரும் 22ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் அமித் ஷா சென்னை வருகிறார். அதற்கு முன்பாக, இந்த இணைப்பு குறித்த முறையான அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பிற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் அணியில் யாருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்பதை அதற்கு முன்பாக முடிவுசெய்ய வேண்டும்.
அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்தபோது, ஓ. பன்னீர்செல்வம் அணியைப் பொறுத்தவரை அவரும் கே. பாண்டியராஜனும்தான் அமைச்சராக இருந்து பதவியை இழந்தனர். ஆகவே மீண்டும் அவர்கள் இருவரும் அமைச்சராவது உறுதி என நம்பப்படுகிறது. ஆனால், எந்த அமைச்சகம் யாருக்கும் என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.
உள்துறை, பொதுப் பணி போன்ற முக்கிய அமைச்சகங்களை தன்வசமே வைத்துக்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். நிதி, வீட்டுவசதி, தொழில்துறை போன்ற அமைச்சகங்களில் சிலவற்றை பன்னீர்செல்வம் அணிக்கு விட்டுக்கொடுக்கக்கூடும்.
கட்சிப் பதவிகளைப் பொறுத்தவரை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் யார் என்பது தற்போது தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருக்கும் நிலையில், அதனை இரு அணிகளும் இணைந்து விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கும்.
அதற்குப் பிறகே தேர்தல் நடத்தி புதிய பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்ய முடியும்.
அ.தி.மு.கவில் உள்ள கட்சிப் பதவிகளில் முக்கியமான 10 பதவிகளையாவது ஓ. பன்னீர்செல்வம் அணி எதிர்பார்க்கிறது.
தாங்கள் வெளிப்படையாக முன்வைத்த இரு கோரிக்கைகளுமே முழுமையாக நிறைவேறாத நிலையில், இணைப்பு என்பது தங்களுக்குக் கௌவரமானதாக இருக்க வேண்டுமென பன்னீர்செல்வம் அணி விரும்புகிறது. இதைத்தான் கே.பி. முனுசாமி, செம்மலை போன்றவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதற்கிடையில் சென்னையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் டிடிவி தினகரன், அந்தக் கூட்டத்தில் தன் பலத்தைக் காட்டத் திட்டமிட்டிருக்கிறார்.
இருபதுக்கும் குறைவான சட்டமன்ற உறுப்பினர்களே அவருக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பது போன்ற உச்சகட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபடமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :