தமிழக முதல்வரை யாரும் ராஜிநாமா செய்ய கோராதது ஏன்?: கமல்ஹாசன்

ஒரு முதல்வரின் கீழ் தவறுகளும் ஊழல்களும் நிகழ்ந்தால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்; தமிழகத்தில் பெரும் குற்றங்கள் நடந்தும் மாநில முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென எந்தக் கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன் என நடிகர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில், இது குறித்து எழுதியுள்ள கமல்ஹாசன், மேம்பட்ட தமிழகமே தனது நோக்கம் என்றும் தனது குரலை வலுப்படுத்த யார் வரப்போகிறீர்கள் என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மேலும், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பிற கட்சிகள் அனைத்தும் உதவுவதற்கான கருவிகளே என்றும் அந்தக் கருவிகள் மழுங்கிவிட்டால், பிற கருவிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஊழலிலிருந்து சுதந்திரம் பெறாதவரை நாம் அடிமைகளே என்று குறிப்பிட்டிருக்கும் கமல், புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு துணிவுள்ளவர்கள் வாரீர், வெல்வோம் என்றும் கூறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாகவே கமல்ஹாசன், தமிழக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் கடும் கருத்துகளை கமல் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசனின் தற்போதைய கருத்து குறித்து ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர் கமல் என்று கூறினார்.

ஏதாவது கட்சியில் இணைந்த பிறகோ, தானே இயக்கம் ஒன்றை ஆரம்பித்த பிறகோ அவர் இம்மாதிரி குற்றச்சாட்டுகளை சுமத்தினால் அதற்குப் பதில் சொல்ல முடியும் என்றும் விஸ்வரூபம் படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையை மனதில் வைத்தே காழ்ப்புணர்ச்சியுடன் கமல் இவ்வாறு குற்றம்சாட்டுவதாக ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார்.

பெரும்பாலான டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் "உங்களுடன் வர நாங்கள் தயார்" என்று கூறி பதிவிட்டு வருகின்றனர்.

நாட்டின் சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் வேளையில் சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசனின் டிவிட்டர் பதிவுகள், தமிழக அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்துவழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழகத்தில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகியிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :