டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை குறைத்து காட்டுவதாக இலங்கை அரசு மீது புகார்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை அரசாங்கம் மூடி மறைத்து வருவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இந்த சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அழுத்கே இதனை தெரிவித்தார்.

தற்போது டெங்கு காய்ச்சல் நாடளவில் பரவி 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 225-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், அரசாங்கம் உண்மையான புள்ளிவிவரங்களை மறுத்து வருவதாக கூறிய டாக்டர். அழுத்கே, கடந்த ஜூன் மாதம் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 5 ஆயிரத்து 259 ஆக பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி இந்த எண்ணிக்கை 498 என காணப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசு, தற்போது தாங்கள் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தியுள்ளதாக நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காகவே அரசாங்கம் உண்மையான புள்ளிவிபரங்களை மூடி மறைத்து வருவதாக டாக்டர் ஹரித்த அழுத்கே குற்றம்சாட்டினார்.

இதன் முலம் தற்போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திவிட்டதாக ஒரு தவறான தகவல் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்களின் கவனம் குறைந்து, நிலைமை மேலும் உக்கிரமடையும் ஆபத்து நிலவுவதாக டாக்டர் ஹரித்த அழுத்கே எச்சரித்திருக்கிறார்.

எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அரசாங்கம் உண்மையான புள்ளிவிவரங்களை மட்டுமே வெளிப்படுத்தி வருவதாக கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :