You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை : டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலால் மொரட்டுவ பல்கலைக்கழகம் மூடல்
இலங்கையில் டெங்கு காய்ச்சால் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் இன்று (சனிக்கிழமை) முதல் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இரு வாரத்திற்கு பல்கலைக்கழகத்தின் கல்விச்செயல்பாடுகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து மாணவர்களும் வெளியேறியுள்ளனர்.
விடுதி மாணவர்கள் மத்தியில் டெங்கு மற்றும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு கொசு பெருக்கத்திற்கு சாதகமான சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தீவிரமடைந்துள்ள டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலத்தில் (ஜனவரி - ஜுன் வரை) நாடு முழுவதும் இனம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. மரணங்களும் 215 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள முதல் ஆறு மாத கால தகவலில், 71 ஆயிரத்து 298 டெங்கு நோயாளர்கள் அறிக்கையிடப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலே கூடுதலான நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அதாவது 30 ஆயிரத்து 492 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். மொத்த நோயாளர்களில் 43 சதவீதம் என சுகாதார அமைச்சு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
நாடு தழுவியதாக கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 24 ஆயிரத்து 082 பேர் இனம் காணப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு 71 ஆயிரத்து 298 அதிகரித்துள்ள நிலையில் 66 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை சுகாதார அமைச்சு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு மொத்தமாக 97 மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்த ஆண்டு இதுவரையில் 250 மரணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலக டெங்கு ஒழிப்புக்கான செயலணியும் சுகாதார அமைச்சும் இணைந்து அரசு மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் நாடு தழுவியதாக சிறப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
''டெங்கு ஒழிப்பு மற்றும் கழிவகற்றால் முகாமைத்துவம் தொடர்பாக தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அரசாங்கத்தின் அல்லது அரசியல் கட்சிகளின் பிரச்சனையாக பார்க்காமல் அனைத்து மக்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும்." என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு காரணமாக மேல் மாகாணத்தில் அநேகமான வைத்தியசாலைகள் நிரம்பி காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்