இலங்கை: முப்படைகளிலிருந்து விலகியோடிய 4000க்கும் மேற்பட்டோர் கைது

இலங்கையில் முப்படைகளிலிருந்தும் விலகியோடியவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு அவகாச காலத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிய இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முப்படைகளையும் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதியின்றி நீண்ட கால விடுமுறையில் இருந்த வேளை வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சட்ட ரீதியாக சேவையிலிருந்து விலகிக் கொள்ளாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களில் 7 இராணுவ அதிகாரிகள் மற்றும் முப்படைகளையும் சேர்ந்த 4,074 படைவீரர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இராணுவத்தை சேர்ந்தவர்களே கூடுதலாக கைது செய்யப்பட்டுள்ளனர். 7 அதிகாரிகளும் 3,241 இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதானவர்களில் 765 கடற்படை வீரர்களும் 68 விமானப்படை வீரர்களும் அடங்குகின்றனர்.

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற இவர்கள் இராணுவ போலீஸ் மற்றும் காவல் துறை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக இராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார்.

"இந் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும். கைதானோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் " என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்

அனுமதியின்றி நீண்ட கால விடுமுறையிலிருந்து கடமைக்கு திரும்பாத முப்படைகளையும் சேர்ந்த படைவீரர்களை சட்ட ரீதியாக சேவையிலிருந்து விலகிக் கொள்ள கடந்த வருடம் பாதுகாப்பு அமைச்சினால் இருமுறை பொது மன்னிப்பு கால அவகாசம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் 34 இராணுவ அதிகாரிகள் மற்றும் முப்படைகளையும் சேர்ந்த 8 ,843 படை வீரர்கள் சேவையிலிருந்து சட்ட ரீதியாக விலகிக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :