3 எம்.எல்.ஏ.க்களை கிரண்பேடி நியமித்ததால் புதுச்சேரியில் புயல்

புதுச்சேரியின் துணை ஆளுர் தன்னிச்சையாக எம்.எல்..க்களை நியமித்து, பதவியேற்பு செய்துவைத்திருப்பதை ஏற்க முடியாது என்கிறார் முதல்வர் நாராயணசாமி. தான் சட்டப்படியே செயல்படுவதாக கூறுகிறார் துணை நிலை ஆளுனர் கிரண்பேடி. தற்போது வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது.

புதிய நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி

பட மூலாதாரம், TWITTER@KIRANBEDI

படக்குறிப்பு, புதிய நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர மூன்று பேர் நியமன உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள். மத்திய அரசு இவர்களை நியமிக்கும் என 1963-ஆம் ஆண்டின் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் தெரிவிக்கிறது.

இந்த நிலையில், தற்போது புதுச்சேரியின் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை சமீபத்தில் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஏற்கனவே முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் மோதல் நீடித்துவந்த நிலையில் இந்த விவகாரம் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை ரகசியமாகத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்துவைத்திருக்கிறார் துணை நிலை ஆளுநர். சபாநாயகர் இருக்கும்போது இவர் எப்படி பதவிப் பிரமாணம் செய்துவைக்கலாம்?" என்று கேள்வியெழுப்பினார்.

சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்கள் பா.ஜ.க. மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

"2016ஆம் ஆண்டில் 18 வேட்பாளர்களை போட்டியிடச் செய்த பா.ஜ.க. ஒரு இடத்தில்கூட டெபாசிட் வாங்கவில்லை. இப்போது பின்வழியாக ஆட்களை சட்டப்பேரவைக்குள் நுழைக்கிறது" என்கிறார் நாராயணசாமி. தன்னிச்சையாக எம்எல்ஏக்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்கிறார் முதலமைச்சர்.

நியமனம் தொடர்பாக கிரண்பேடியின் ட்விட்டர்

பட மூலாதாரம், TWITTER@KIRANBEDI

படக்குறிப்பு, நியமனம் தொடர்பாக கிரண்பேடியின் ட்விட்டர்
நியமனம் சட்டப்படிதான் நடந்ததாக கிரண்பேடி ட்விட்டர் செய்தி

பட மூலாதாரம், TWITTER@KIRANBEDI

படக்குறிப்பு, நியமனம் சட்டப்படிதான் நடந்ததாக கிரண்பேடி ட்விட்டர் செய்தி

பா.ஜ.கவின் மாநிலத் தலைவரும் தற்போது நியமன எம்எல்ஏவாகவும் இருப்பவரான சாமிநாதன் இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளுகிறார். "எங்களால் கூட்டணி இல்லாததால் வெற்றிபெற முடியவில்லை. நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமிப்பதுதான் வழக்கம்" என்றார்.

அவர் மீது கிரிமனல் வழக்குகள் இருப்பது குறித்துக் கேட்டபோது, "புதுச்சேரி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஆள்கடத்தல் வழக்குகள் போன்ற தீவிரமான வழக்குகளே உள்ளன. என் மீது உள்ள வழக்குகள் நான் போராட்டம் நடத்தியதால் போடப்பட்டவை" என்கிறார் அவர்.

இந்த விவகாரம் குறித்த தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுவரும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, நியமன சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வுசெய்து நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு எனக் கூறும் அரசியல் சாஸன விதிகளை மேற்கோள்காட்டியிருக்கிறார்.

நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தாலும், மத்திய அரசு என்பது இங்கே துணை நிலை ஆளுநர்தான். துணை நிலை ஆளுநருக்கு தனியாக அதிகாரம் கிடையாது. மாநில அரசின் அதிகாரம்தான் அவர் மூலமாக செயல்படுத்தப்படுகிறது என்கிறார் நாராயணசாமி.

`எல்லோரிடமும் புகார் செய்துவிட்டேன்'

"தில்லியில் துணை நிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரங்கள் உண்டு. புதுச்சேரியில் கிடையாது. ஆனால், துணை நிலை ஆளுநர் இப்படி தன்னிச்சையாகச் செயல்படுகிறார். பிரதமர், குடியரசுத் தலைவர் என எல்லோரிடமும் புகார் செய்துவிட்டேன். வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை" என்கிறார் நாராயணசாமி.

இந்த நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் வேறு ஒரு சிக்கலும் இருக்கிறது. அதாவது இந்த எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்ற கேள்விக்கு தற்போதுவரை தெளிவான பதில்கள் இல்லை.

கிரண்பேடி

பட மூலாதாரம், KIRAN BEDI

படக்குறிப்பு, சர்ச்சையின் மையத்தில்

1954ஆம் ஆண்டின் புதுச்சேரி யூனியன் பிரதேசச் சட்டத்தில் மூன்று எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமிக்கலாம் என்றுதான் கூறுகிறதே தவிர, அவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பது குறித்து ஏதும் தெளிவாக இல்லை.

நாராயணசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாராயணசாமி

"இந்த விவகாரத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மற்றொரு நிலைப்பாட்டையும் எடுத்துவருகின்றன" என்கிறார் அங்குள்ள மூத்த அரசியல்வாதி ஒருவர்.

1989ல் தி.மு.க. - ஜனதா தளம் இணைந்து ஆட்சியமைத்தபோது, அந்தக் கூட்டணியிடம் 16 இடங்களே இருந்தன. அதில் ஒருவர் சபாநாயகராகிவிட, பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மூன்று பேரை அவசரம் அவசரமாக நியமித்து, அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் சத்யவதி சட்டமன்றம் துவங்குவதற்கு முன்பாகவே பதவிப் பிரமாணம் செய்துவைத்த சம்பத்தை நினைவுகூறும் அவர், அதனால், ஆளுநர் நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிராணம் செய்துவைப்பது புதிதல்ல என்கிறார்.

இந்த மூவரின் பெயர்களை மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரைத்திருப்பதாக தெரியவந்தவுடனேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான லட்சுமி நாராயணன் இந்த நியமனத்திற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஆனால், இதற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூறி, வழக்கை ஜூலை 5ஆம் தேதி புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்துவிட்டதால், அவர்கள் பதவிவிலக வேண்டுமெனக் கோரி மனு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்குவந்தது. இது குறித்து புதுச்சேரி மாநில தலைமைச் செயலர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர், இணை செயலர், பதவியேற்றுக்கொண்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தற்போது உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்