மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ விசாரணை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மருத்துவ மேல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெறுவதாக அதன் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி குற்றம் சாட்டி வரும் நிலையில், அங்கு மாணவர் சேர்க்கைக்கு பொறுப்பு வகிக்கும் சென்டாக் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

பட மூலாதாரம், CM_PUDUCHERR
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்துக்கு ஏழு அதிகாரிகள் அடங்கிய சிபிஐ குழு சென்றது.
இந்த குழுவினர் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டை செய்யும் "சென்டாக்" அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடம் சில தகவல்களைக் கேட்டதாக தில்லியில் உள்ள சிபிஐ தலைமையக தகவல் அதிகாரி ஆர்.கே. கெளர் பிபிசி தமிழிடம் கூறினார்.
"சென்டாக்" செயல்பாடு தொடர்பான புகார்கள் குறித்து சில தகவல்களை பெறுவதற்காக மட்டுமே சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரி சென்றதாகவும், இந்த விவகாரத்தில் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது பற்றி முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, சென்டாக் அலுவலகத்தில் ஆவணங்கள் எல்லாம் சரியாகவே உள்ளதாகவும், இதுபற்றி தமது நிலைப்பாட்டை புதன்கிழமை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்படவில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் கலந்தாய்வு நடத்தப்பட்டபோதும் அவர் திடீரென ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு நேரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
அவரது நடவடிக்கை அரசின் அன்றாட விவகாரங்களில் தலையிடுவது போல உள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் சென்டாக் செயல்பாடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கிரண் பேடி கடந்த வாரம் பரிந்துரை செய்தார்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












