ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய “புரட்சி” மணப்பெண் வீடியோவால் பரபரப்பு
வட இந்தியாவில் மணப்பெண் ஒருவர் தனது திருமண வீடியோவில் ஷார்ட்ஸ் அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்று யூ ட்யூபில் வேகமாக பகிரப்பட்டு 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

பட மூலாதாரம், COOLBLUEZ
இதை பற்றி கேட்டதற்கு மணமகன் மட்டுமே அனைத்து மகிழ்ச்சியையும் பெற வேண்டுமா என்ன? என கேள்வி எழுப்புகிறார் மணப்பெண் அமிஷா பாரத்வாஜ்,
அந்த வீடியோவில் அவர் ஷார்ட்ஸ் அணிந்து தனது தோழிகளுடன் ஆங்கிலப்பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடுகிறார்.
"இந்த வீடியோ ஏன் இந்தளவிற்கு பகிரப்பட்டது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது ; ஏனென்றால் அது மணப்பெண் ஒருவர் தனது மணநாளில் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற இயல்பான ஒரு நிகழ்வுதான்" என கூறுகிறார் அமிஷா.
ஆனால் பலர் அவர் அணிந்திருந்த ஆடை குறித்தும், அந்த பாடல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
"எனது வீடியோ, இந்திய மணமகள் என்றால் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்; நடனமாடக் கூடாது, கண்டிப்பாக இந்த வீடியோவில் நான் அணிந்த மாதிரியான ஆடைகளை அணியக் கூடாது; என்பது போன்ற பழமைவாத சிந்தனைகளை தகர்த்தெறியும்" என அமிஷா பாரத்வாஜ் கூறுகிறார்.
"இந்திய மணப்பெண்கள் இம்மாதிரியாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என பல நாட்களாக எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது; மணப்பெண் என்றால் வெட்கப்பட வேண்டும், அவ்வப்போது சிரிக்க வேண்டும், பெற்றோர்களை விட்டு போகும்போது அழ வேண்டும். ஆனால் தற்போது நவீன இந்திய மணப்பெண்கள் தாங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என தாங்களே தீர்மானிக்கின்றனர்" என்கிறார் அமிஷா.

பட மூலாதாரம், COOLBLUEZ
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்தியாவில் திருமண வீடியோக்களைத் தயாரிப்பது ஒரு நீண்ட மற்றும் சுவாரஸ்யமற்ற ஒரு விஷயமாக இருந்தது.
ஆனால் தற்போது பாலிவுட் பாடல்களின் தாக்கத்தால் பல சுவாரஸ்யமான திருமண வீடியோக்களை தயாரித்து வருகின்றனர்.
மேலும் இம்மாதிரியாக நடனம் ஆடுவது, வீடியோவில் முதன்மையாக தோன்றுவது ஆகியவற்றை மணப்பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர்.
"இந்த வீடியோ வித்தியாசமாக வர வேண்டும் என நினைக்கவில்லை ஆனால் எனது ஆழ்மனதில் எனக்கு என்ன வேண்டுமோ அதை செய்வதற்கான துணிவு என்னிடம் இருந்தது" என கூறுகிறார் அமிஷா பாரத்வாஜ்.
தன்னம்பிக்கை கொண்ட இளைய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பதால் என்னால் இவ்வாறு செய்ய முடிந்தது. மணமகன்கள் தங்களுக்கு வேண்டியதை செய்கிறார்கள், நடனமாடுகிறார்கள், குடிக்கிறார்கள், மணமகன்கள் தாங்கள் நினைத்தபடி மகிழ்ச்சியாக இருக்கும் போது மணப்பெண்கள் மட்டும் வெட்கப்பட்டு தலைகுனிந்து இருக்க வேண்டும் என எதிர்பார்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.
காலத்திற்கு ஏற்ப மணமகள்களும் மாறிக் கொண்டு வருகிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
பலர் இந்த வீடியோவிற்கு நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளது மூலம் இந்த மாற்றத்தை பலர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது; ஆனால் சிலர், இந்த வீடியோவில் இந்திய கலாசாரத்தை கெடுப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
"என்னை யாரும் கேலி செய்யவில்லை ஏனென்றால் என் பக்கம் பேச இணையத்தில் நிறைய பேர் இருந்தனர்" என தெரிவிக்கிறார் அமிர்தா பாரத்வாஜ்.
"இயல்பு நிலை"
இந்த வீடியோவை எடுத்தவர்களான சுப்ரீத் கவுர் மற்றும் பவன் சிங் இந்திய மணப்பெண்கள் மாறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், COOLBLUEZ
பத்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் வீடியோக்களை எடுக்கும் போது மணப்பெண்கள் அழகாகவும், ஒல்லியாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அநேகமாக பலர் புதிய முயற்சிகளை சோதித்து பார்க்க விழைகின்றனர் என சிங் தெரிவிக்கிறார்.
திருமணம் என்பது அவர்கள் வாழ்வின் முக்கிய தருணம் என்றும் அதில் தாங்கள் தாங்களாகவே இருக்க வேண்டும் என்றும் பல மணப்பெண்கள் புரிந்து கொண்டுள்ளதாக கவுர் தெரிவிக்கிறார்.
மேலும் கடந்த பத்து வருடங்களில் பெண்கள் பலர் பணிபுரிய தொடங்கிவிட்டதால் அப்போதைய சூழல் தற்போது இல்லை.
அமீஷா மட்டுமல்ல இது குறித்து நீங்கள் தேடினால் பல புதுமையான திருமண வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம் என கூறுகிறார் சிங்.
அம்மாதிரியான மணப்பெண்களில் ஒருவர்தான் இஷிதா கிர்தார். பெண்கள் தங்கள் பெற்றோர்களை விட்டுச் செல்லும் போது பொதுவாக அழ வேண்டும் ஆனால் அவர் அழவில்லை.

பட மூலாதாரம், COOLBLUEZ
"திருமணம் என்பது மகிழ்ச்சியான ஒரு தருணம்; எனவே நடனமாடுவது என நான் முடிவு செய்தேன்; பிறரையும் என்னுடன் நடனமாட வைத்தேன்" என கூறுகிறார் கிர்தார்.
மணப்பெண் என்றால் இவ்வாறாகத்தான் இருக்க வேண்டும் என சிலர் நினைப்பதற்கு ஹிந்தி திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் ஒரு காரணமாகும்.
"திரைப்படங்களில் மணப்பெண்கள் வெட்கப்படுவது போன்றே காட்டுகின்றனர் எனவே அதை மக்கள் கண்மூடித்தனமாக நம்புகின்றனர்". என கிர்தார் தெரிவித்தார்.
"நீங்கள் வெட்கப்பட வேண்டுமென்றால் வெட்கப்படுங்கள் ஆனால் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்பதற்காக அதை செய்யாதீர்கள்" என மற்றொரு மணப்பெண்ணான மனன்மிதா குமார் கூறுகிறார்.
குடும்பங்களின் ஆதரவு
இம்மாதிரியான வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. சிறிய நகரங்களில் உள்ள பெண்கள், ஏன் நகரங்களில் உள்ள சில பெண்களுக்கும் கூட இம்மாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என கூறுகிறார் கவுர்.
"ஒரு முறை எனது வாடிக்கையாளர் பெண் ஒளிப்பதிவாளரை நம்ப முடியாது எனக்கூறி வீடியோவிற்கு மறுப்பு சொல்லிவிட்டார். மற்றொருவர் மணப்பெண் தனியாக வீடியோ எடுக்க ஒப்புக் கொண்டதால் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்".

பட மூலாதாரம், COOLBLUEZ
"மாற்றங்கள் வந்து விட்டது; ஆனால் மணப்பெண்கள் இயல்பாக இருக்கும் நிலை வருவதற்கு இன்னும் நீண்டகாலம் உள்ளது".என்கிறார் கவுர்.
இம்மாதிரியான வீடியோக்களை எடுப்பதற்கு மணப்பெண்களுக்கு ஆதரவளிக்கும் அவர்களின் குடும்பத்தையும் நாம் பாராட்ட வேண்டும் என்கிறார் அமீஷா.
என்னால் இம்மாதிரியான வீடியோ எடுக்க முடிந்ததற்கு காரணம் எனது கணவருக்கு இதில் ஆட்சேபணை இல்லை என்பதாலும் தான். நான் இதற்காக அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றில்லை இருப்பினும் உங்களுடைய துணை உங்கள் ரசனைகளை ஒத்திருந்தால் அது சிறப்பானது என்கிறார் அமீஷா.
இந்த வீடியோ எப்போது படம் பிடிக்கப்பட்டது என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் இந்த வீடியோ, மணப்பெண் என்றால் வெட்கப்பட்டுதான் நிற்க வேண்டும் என்று பலரிடம் நிலவும் , குறிப்பாக மணமகன்களிடம் நிலவும், கற்பிதத்தைத் தகர்க்கும் எனக் கூறுகிறார் அமீஷாவின் கணவர் ப்ரணவ் வர்மா.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












