You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வருமான வரி செலுத்த ஆதார் அட்டை எண் கட்டாயம் இல்லை: உச்சநீதிமன்றம்
இந்தியாவில் வருமான வரி செலுத்தும்போது, ஆதார் அட்டை எண்ணை அதில் இணைக்கவேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு விதித்த விதி தொடர்பான வழக்கில் அது கட்டாயம் இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை மிகுந்த இந்த விவகாரத்தில், தற்போதுவரை ஆதார் எண் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பவர்களை, ஆதார் அட்டை பெற கட்டாயப்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டாலும் தற்போது வரிசெலுத்த பயன்படும் பான் அட்டை சட்டப்படி செல்லும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மக்களிடம் தகவல்கள் திருடுபோவது குறித்த பயத்தை நீக்க அரசு முயற்சி செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
தற்போது வருமான வரி செலுத்துவதற்கு பயன்படும் பான் அட்டைக்கு பதிலாக ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என்ற திட்டத்தில் உறுதியாக அரசு இருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் போலியான பான் அட்டையை தயாரிப்பது மிகவும் சுலபம் என்று அரசு கூறுகிறது.
''எந்த பெயரை கொண்டும் எவரும் பான் அட்டை எடுக்கமுடியும். ஒரே நபர் பல பான் அட்டைகளை பெறமுடியும்- அதாவது உதாரணத்துக்கு, முகேஷ் குப்தா, முகேஷ் குமார் குப்தா மற்றும் எம் கே குப்தா என மூன்று பெயர்களில் பெறமுடியும்,'' என அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளவர்கள், அரசு மக்களின் உடல்ரீதியான தகவல்களை கட்டாயப்படுத்தி பெற முடியாது என்கிறார்கள். உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் தரவுத்தளம் என்று விவரிக்கப்படும் ஆதார் திட்டம் குறித்து செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளில், பில்லியன் கணக்கான மக்களிடம், சுமார் 90 %மக்களிடம் அவர்களின் கண் விழித்திரை, கைரேகை ஆகியவற்றை பெற்று அதை உயர் பாதுகாப்பு தரவு மையத்தில் வைத்துள்ளது.
இதற்கு பதிலாக, அரசு ஒவ்வொருவருக்கும் ஒரு 12 எண் கொண்ட ஆதார் என்ற டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஓய்வூதியங்கள், உதவித்தொகை, கிராமப்புற வேலை திட்டங்களுக்கான ஊதியங்கள், இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு சமையல் எரிபொருள் வழங்கும் திட்டம், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் திட்டம் என பல தரப்பட்ட அரசு திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை ஆதார் எண்ணை கொண்டு அரசு செயல்படுத்துகிறது.
ஊழலை எதிர்கொள்ளும் கருவியாக ஆதார் பயன்படும் ; ஏனெனில் அரசின் உதவித்தொகை அல்லது வேறு நிதியை பெறுவதற்கு ஆதாரை போலியாக உருவாக்க முடியாது என்று அரசு கூறுகிறது.
ஆனால் தற்போதுவரை, பல அரசாங்க இணையதளம் வாயிலாக, மாணவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் நலத்திட்டங்களை பெறுபவர்கள் பற்றிய விவரங்கள் பல முறை ஆதார் அட்டை விவரங்கள் கசிந்துள்ளன.
டெல்லியை சேர்ந்த மென்பொருள் சுதந்திரத்துக்கான சட்ட மையை ( Software Freedom Law centre statement) என்ற ஒரு தன்னார்வ அமைப்பு ஆதார் அட்டையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டது என்றும், அதோடு இது சம்பந்தமாக தீர்வு நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது என்றும் கூறியிருக்கிறது.
ஆதார் அட்டையில் உள்ள தகவல் பாதுகாப்பு தொடர்பாக மக்களின் கவலைகளை நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு , இந்த ஒட்டுமொத்த திட்டம் பற்றி தீர்ப்பளிக்கும் போது, திறம்பட தீர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அது கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்