You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தோனியின் ஆதார் அட்டை தகவல்களை வெளியிட்ட நிறுவனத்துக்கு 10 ஆண்டு தடை
பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஆதார் சேவை மையம் பத்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைமை நிர்வாக அதிகாரி, சம்பந்தப்பட்ட ஆதார் அடையாள அட்டை மையத்தை பத்து ஆண்டுகளுக்கு தடை செய்ததுடன், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஆதார் அடையாள அட்டையை ஊக்குவிக்கும் விதமாக, தோனியின் குடும்பத்தினரின் ஆதார் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக, அவரது மனைவி சாக்ஷி தோனி, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்திடம் எதிர்ப்பு தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், தோனியின் ஆதார் அட்டையுடன், அவர் ஆதார் இயந்திரத்தில் விரல்களை வைத்திருக்குமாறு இருக்கும் புகைப்படத்தையும் ட்வீட் செய்திருந்தார்.
அதில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார் -"சிறந்த கிரிக்கெட் வீர்ர் தோனியின் டிஜிட்டல் ஹூக் ஷாட்".
இந்த ட்விட்டருக்கு பதிலளித்த சாக்ஷி, "இனி என்ன அந்தரங்கம் இருக்கிறது? ஆதார் அட்டையில் இருக்கும் தகவல்களை பொதுச்சொத்தாக்கிவிட்டீர்கள். வருத்தமாக இருக்கிறது".
இதற்கு பதிலளித்த ரவிஷங்கர் பிரசாத், "இல்லை, இது பொதுச்சொத்து இல்லை. என்னுடைய ட்விட்டர் செய்தியால் அந்தரங்க செய்தி எதுவும் வெளியாகிவிட்டதா?" என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதே தொனியில் சற்று நேரம் இருவரிடையே உரையாடல் நடைபெற்றது. இறுதியாக சாக்ஷி எழுதினார், "சார், நாங்கள் ஆதார் விண்ணப்பத்தில் கொடுத்திருந்த தகவல்கள் வெளியாகிவிட்டது".
மற்றொரு ட்வீட்டில் சாக்ஷி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சொன்னார், "சார் நான் @CSCegov ஹேண்டிலில் வெளியான இந்த ட்வீட்டின் இந்த புகைப்படம் குறித்து பேசுகிறேன்".
அந்த புகைப்படம் பொது சேவை மையத்தின் ட்விட்டர் ஹேண்டில் @CSCegov-இல் இருந்து ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதில், ஆதார் அட்டைக்காக தோனி பூர்த்தி செய்திருந்த விண்ணப்பமும் பகிரப்பட்டிருந்தது. பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது.
@CSCegov இன் தவறை ஒப்புக் கொண்ட ரவிஷங்கர் பிரசாத், தவறை ஒப்புக்கொண்டு வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், இந்த விஷயத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. எந்தவொரு தனிப்பட்ட தகவல்களும் பகிரப்படுவது சட்டவிரோதமானது. இந்த விஷயம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சாக்ஷி, ரவிஷங்கர் பிரசாத்தின் துரித நடவடிக்கைகளுக்கும், ட்விட்டரில் பதிலளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்