You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாட்டிறைச்சித் தடை: இந்தியாவில் அரசியலாகும் உணவு
இந்தியாவின் தென் பகுதி மாநிலமான கேரளாவிலுள்ள சட்டமன்ற உறுப்பினர் விடி பால்ராம், தான் சுமார் இரண்டு தசாப்தங்களாக கடைபிடித்து வந்த சைவ உணவு சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டு இறைச்சி, மீன், முட்டைகளை சாப்பிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.
சைவ உணவுப் பழக்கத்தைக் கைவிடுவது அசாதாரணமான காரியமல்ல என்று தெரிவித்திருக்கும் விடி பால்ராம், மக்கள் தாங்கள் விரும்புவதை சாப்பிடும் உரிமையைத் தடுக்க முயலும் பாரதீய ஜனதா கட்சியால் ஆளப்படும் மத்திய அரசு கடைபிடிக்கும் இந்து தேசியவாத முயற்சிகளால் தூண்டப்பட்டே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
"1998 ஆம் ஆண்டுக்கு பின்னர், இறைச்சி, மீன், முட்டை சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். ஆனால், அந்தப் பழக்கத்தை உடைத்து, உணவு தொடர்பாக சரியான அரசியலை உறுதியாக செயல்படுத்த வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது" என்று தன்னுடைய நண்பர்கள் மற்றும் சகாக்களோடு மாட்டிறைச்சி சாப்பிட்டு காணொளி பதிவிட்டுள்ள பால்ராம் தெரிவித்துள்ளார்.
பசுக்களைக் கொல்ல தடை
இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் இந்துக்கள் பசுக்களை புனிதமானதாகக் கருதுவதால், அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி நம்புகிறது. 18 இந்திய மாநிலங்கள் இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை ஏற்கெனவே தடை செய்துள்ளன.
ஆனால், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்பட, 200 மில்லியனுக்கும் மேலான இந்தியர்களில் பலர், மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர்.
மிகவும் குறைவாகவே பயன்படும் கால்நடைகளை, ஆண் மாடுகளை இந்து விவசாயிகள் வழக்கமாக விற்பதற்கு எதிராகவோ, கொல்வதற்காக இடைத்தரகர்களிடம் கால்நடை மேய்ப்போர் விற்பதற்கோ எந்தவித எதிர்ப்பும் எழவில்லை என்று பலர் கூறுவதும் இன்னொரு புறம் இருக்கத்தான் செய்கிறது.
இந்தியாவின் கிராமப்புறங்களின் பெரும்பகுதிகளில் டிராக்டர்கள் பயன்படுத்தப்படுவதாலும், கிராமத்தினர் எப்போதாவது காளைகளை பயன்படுத்துவதாலும், மாடுகளின் அவசியம் குறைந்து வருகிறது.
ஆனால், இதற்கு மாறாக பசு சர்ச்சைக்குரிய விலங்காக உருவாகியுள்ளது.
பசுவால் சர்ச்சை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மனிதரை தாக்கிய கும்பல் ஒன்று, அவருடைய குடும்பம் மாட்டிறைச்சி சாப்பிட்டது என்ற வதந்தி பரவியதால் அவரை கொன்றது.
தண்டனை வழங்குவதற்கென்றே செயல்படும், பசு பாதுகாப்பு குழுக்களின் செயற்பாட்டளர்கள், கால்நடைகளை வண்டிகளில் ஏற்றி அனுப்புகின்ற மக்களை கொன்றுள்ளன.
மிக சமீபத்தில். இந்தியா முழுவதும் பசுக்களைக் கொல்வதை தடைசெய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சிக்கு, கருத்தியல் ஆதாரமாகக் கருதப்படும் சக்தி படைத்த ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் ( ஆர்.எஸ்.எஸ்) தலைவர் தெரிவித்திருக்கிறார்.
பசு இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்ட வேண்டும் என்றும், பசுக்களை கொல்வோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த வாரம் மூத்த நீதிபதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இவையனைத்தும், இந்தியாவின் வளர்ந்து வரும் எருமை இறைச்சி வர்த்தகத்தை அழிப்பதற்கு பங்காற்றுவதாக பலரும் கூறுகின்றனர்.
மாட்டிறைச்சிக்கு தடை : சோகத்தில் வியாபாரிகள்
கொல்வதற்கு கால்நடைகளை விற்க தடை
கால்நடை சந்தையில், கொல்வதற்காக கால்நடைகளை விற்பதைத் தடைசெய்கின்ற மத்திய அரசின் தீர்மானத்திற்கு எதிராக இந்த வார தொடக்கத்தில், பல இந்திய மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
கட்டுபாட்டில்லாத மற்றும் வரையறுக்கப்படாத வர்த்தகத்தைத் தடுக்கின்ற நோக்கத்தோடு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
ஆனால், ஆண்டுதோறும் நடைபெறும் சுமார் 4 பில்லியன் டாலர் (3.11 பில்லியன் யூரோ) மதிப்பிலான மாட்டிறைச்சி வர்த்தகம் மற்றும் மில்லியன் கணக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு இந்தத் தடை காரணமாக அமையும் என்று பலர் கூறுகின்றனர்.
190 மில்லியன் கால்நடைகள் இருக்கும் இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் மில்லியன் கணக்கான கால்நடைகள் இறந்துபோகின்றன அல்லது இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன.
நீதிமன்றத்தில் நிற்குமா?
ஏழை விவசாயிகள் தங்களுடைய கால்நடைகள் எவ்வாறு விற்பார்கள் என்பதற்கு பதிலளிக்கும் வழக்கறிஞர் கௌதம் பாடியா , இந்த புதிய விதிமுறைகள் 'மாட்டிறைச்சிக்கு மறைமுகத் தடை விதிப்பதாக பார்க்கப்படுகின்றன' என்று தெரிவிக்கிறார்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்போது, அரசு தன்னுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்துவது கடினம் என்ற அவர் நம்புகிறார்.
ஒரு மனிதர் சாப்பிடும் உரிமைக்கு எதிராக இந்த விதிமுறை அமைகிறது என்று வழக்கு தொடுத்துள்ளதற்கு ஒரு மாநில நீதிமன்றம் இந்த தடையை ஏற்கெனவே நிறுத்தி வைத்துள்ளது.
மோசமாக எழுதப்பட்டுள்ள இந்த விதிமுறைகள், அனைவருக்கும் பொருளாதார மற்றும் சமூக சுதந்திரம் அளிக்கின்ற அரசியல் சாசனத்திற்கு உணவு தெரிவுகளை பரிந்துரைப்பது பொருத்தமான செயல்பாடு தானா என்று சிந்திப்பதற்கு, குடிமக்களுக்கும், நீதிமன்றங்களும் வாய்ப்பாக அமைகின்றன என்று பாட்டியா கூறியுள்ளார்.
'உணவு விபரக்குறிப்பு'
இந்த மாட்டிறைச்சித் தடையை, ஒரு ' உணவுப் பழக்கத்தை வைத்து ஒருவரை எடைபோடுவது'' மற்றும் 'உணவுப் பாசிஸம் '' என்று விமர்சர்கள் கூறுகின்றனர்.
இது கலாசார ஏகாதிபத்திய அணுகுமுறை போல் இருப்பதாக வேறு சிலர் கூறுகின்றனர்.
இது இந்தியாவின் மதசார்பற்ற தன்மை மற்றும் அரசியல் சட்ட விழுமியங்கள் மீது நடத்தப்படும் மோசமான தாக்குதல் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்தியாவை ஒரு சைவ நாடாக மாற்ற சதியாகக் கூட இருக்கலாம், சிரிக்காதீர்கள் என்று கூறுகிறது ஒரு பத்திரிகை தலைப்புச் செய்தி.
'இந்தியாவை சைவத்திற்கு மாற்றுகின்ற சதியாக இது இருக்கலாம்' என்று சமீபத்தில் வெளியான தலைப்பு செய்தியை கேட்டு சிரித்துவிட வேண்டாம்.
மதம், சாதி, வகுப்பு, வயது மற்றும் பாலின வேறுபாடுகளால் எப்போதும் மிகவும் வேறுபட்ட உணவுப் பழக்கவழக்கம் இந்தியாவில் நிலவுவது பற்றிய ஆழமான அறிவு நரேந்திர மோதியால் ஆளப்படும் பாரதீய ஜனதா கட்சிக்கு இல்லை என்று பலரும் நம்புகின்றனர்.
பசு மற்றும் எருமை இறைச்சி என மாட்டிறைச்சி உள்பட, எப்போதையும் விட அதிகமான இறைச்சியை இந்தியவர்கள் இப்போது சாப்பிட்டு வருகின்றனர்.
தரவு இதழியல் சேவை வழங்கும் லாபநோக்கமற்ற 'இந்தியாஸ்பென்ட்' நிறுவனத்தால் பகுப்பாய்வு செய்யப்பட்ட அரச தரவுகளின்படி, நகரங்களில் 14 சதவீதமும், கிராமங்களில் 35 சதவீதமும் மாட்டிறைச்சி சாப்பிடுவது அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான நாகலாந்து மற்றும் மேகாலயாவில் மாட்டிறைச்சி மிகவும் விரும்பப்படும் இறைச்சியாகும்.
தேசிய மாதிரி ஆய்வு தரவுகளின்படி, 42 சதவீத இந்தியர்கள் தங்களை முட்டை, மீன், அல்லது இறைச்சி சாப்பிடாத சைவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.
இன்னொரு ஒப்புநோக்கு அரசு ஆய்வு, 15 வயதிற்கு மேற்பட்ட 71 சதவீத இந்தியர்கள் சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள் என்று காட்டுகிறது.
உணவு தடை விதித்த உலக நாடுகள்
பெரும்பாலும் சுகாதரம் மற்றும் சுற்றுச்சூழல் கவனங்களாலும். சுத்தம் பேணுகின்ற கவலைகளாலும் உலக நாடுகளின் அரசுகள் உணவு தடை மற்றும் தெரிவுகளை புகுத்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் மலிவான காய்கறிகள், சட்டவிரோத பெரிய சோடாக்கள், கரிம (ஆர்கானிக்) உணவை ஊக்குவித்தல், கொழுப்புக்கு வரி ஆகியவற்றுக்கு எதிராக குழுக்கள் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தியுள்ளன.
தெருக்களை சுத்தமாக பேணவும், சுகாதாரத்தின் தரத்தை உறுதி செய்யவும் பாங்காக் நகரம் தெருவோர உணவை தடைசெய்துள்ளது.
இதையே இந்தியா கடந்த காலத்தில் செய்துள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் (பிடி கத்தரிக்காய்) போன்ற காய்கறிகளின் விற்பனை இந்திய அரசால் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆபத்தான அளவு ஈயம் கலந்திருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், தொழிற்சாலை தயாரிப்பு உணவு போன்ற மேகி நூடுல்ஸூக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
பற்றாக்குறையும் தடைகளுக்கு வழிவகுத்துள்ளது. 1970-களில் பால் இனிப்புகளுக்கு டெல்லியில் போடப்பட்ட தடை, பால் வினியோகத்தில் இருந்த பற்றாக்குறை காரணமாக நியாயப்படுத்தப்பட்டது.
'பயன்படாத விலங்குகள்'
பயன்படாத மற்றும் நோய் தொற்றிய கால்நடைகளை பற்றி பேசுவதன் மூலம், கொல்வதற்கு கால்நடைகளை விற்பதற்கான தடை ஓரளவு நியாயப்படுத்தப்படுகிறது.
பொது சுகாதாரத்தை தூண்டுவதற்கான முயற்சி என்று இது தோன்றுகிறது. அப்படியானால், இதுபோன்ற வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகளையும் தடை செய்யாமல் விடுவதேன் என்கிறார் சமூகவியலாளர் அமிதா பாவிஸ்கார்.
பொது சுகாதரத்தை பேணுவதற்காக என்ற வாதம், ஒட்டுமொத்த தடையை விட, விலங்குகளுக்கு நோய்தொற்று பற்றிய கடுமையான பரிசோதனை, மேலதிக சுத்தமாக கால்நடைகள் கொல்லப்படுவது மற்றும் இறைச்சியை சரியாக பாதுகாத்து வைப்பது போன்றவற்றிக்கு வழிகோலுகிறது.
இந்த தடை ஏற்கெனவே செயல்பட தொடங்கியிருப்பது தெளிவாக தெரிகிறது.
"சிவப்பு இறைச்சி விற்பது, வெள்ளாடு இறைச்சி கூட, பாரதீய ஜனதா ஆளும் மாநிலத்தில் கூட இப்போது ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடானதுதான். கண்காணிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளாகும் ஆபத்தை யார் தான் விரும்புவார்?" என்கிறார் பாவிஸ்கார்.
தற்போதைய நிலைமையில், இறைச்சி சாப்பிடும் இந்தியர்களின் பழக்கம் கடந்த இரண்டு தசாப்தங்களாக விரைவாக மாறிவருகிறது. "அசுத்தமான பறவையான கருதப்பட்ட கோழி", இப்போது அனைவரும் விரும்பும் இறைச்சியாக கருதப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
"சிவப்பு மாநிலங்களுக்கும் (இறைச்சி சாப்பிடுபவை) வெள்ளை மாநிலங்களுக்கும் (கோழி சாப்பிடுபவை) இடையில் சர்ச்சை அதிகரிப்பதையே இதன் மூலம் நான் பார்க்கிறேன். வெள்ளை மாநிலத்திற்குள் இறைச்சி சாப்பிடுவோர், இனி மாட்டிறைச்சி கபாப் சாப்பிடும்போது, தங்களை சுற்றியுள்ள ஆபத்தை கருத்தில் கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்