நாட்டு ரக காளைகளின் அழிவுக்கு பீட்டா காரணம்: கார்த்திகேய சேனாபதி குற்றச்சாட்டு

இந்தியாவில் பீட்டா(PETA -People for the Ethical Treatment of Animals) செயல்பட தொடங்கிய பிறகு தான், நாட்டு மாடு மற்றும் காளை இனங்களின் அழிவு தொடங்கியது என்று சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேய சேனாபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும் வேளையில், நாட்டு காளை இனங்களை காப்பதற்காக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு ஆதரவு தரப்பினர் கருதுகின்றனர்.

இது குறித்த பிபிசி தமிழிடம் பேசிய கார்த்திகேய சேனாபதி, தற்போதுள்ள நாட்டு இன காளைகளை காப்பற்றவதற்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்றும் விலங்கு நலத்தில் அக்கறை கொண்டுள்ளதாக சொல்லும் பீட்டா அமைப்பு திட்டமிட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நாட்டு ரக காளை மாடுகளை கொண்டு நடத்தும் போட்டிகளை தடை செய்ய போராடியதால், பல நாட்டுக் காளை இனங்கள் காணாமல் போயுள்ளன என்றும் கூறினார்.

''இன்று நாம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் போராடவில்லை.நெடுங்காலமாக கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகாவில் நடத்தப்பட்ட கம்பாலா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலும் ரேக்ளா போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகளை பீட்டா அமைப்பின் தலையீடு காரணமாக தடைப்பட்டுள்ளன, '' என்கிறார் கார்த்திகேய சேனாபதி.

அவர் மேலும், ''இந்திய அரசு 1970களில் வெண்மைப் புரட்சியின் போது பல்வேறு வெளிநாட்டு ரக மாடுகளை அறிமுகப்படுத்தியது. அப்போது கூட நாட்டு காளை, மாடு இனங்கள் காணாமல் போகவில்லை. 1998க்கு பிறகு பீட்டா அமைப்பு பாரம்பரிய விளையாட்டுகளில் தலையிட தொடங்கிய பிறகுதான் நம் நாட்டு காளை, மாடு இனங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன, '' என்றார்.

''ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்த சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்க வழிவகை செய்வது தான் நியாயம். அந்தப் போட்டியை தடை செய்வது நியாயமல்ல,''என்றார் கார்த்திகேய சேனாபதி.

நாட்டு ரக மாடு வளர்ப்பதற்கு ஜல்லிக்கட்டு ஒரு வாய்ப்பாக அமைகிறது என்கிறார் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர். ''வெண்மை புரட்சி, விவசாயத்தில் இருந்து பெரிய எண்ணிக்கையில் மக்கள் வெளியேறியது மற்றும் நவீன இயந்திரங்களின் வருகை என பல காரணிகளை சொன்னாலும், இன்றளவும் மக்கள் கலாசார ரீதியாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளை தடை செய்தால், நாம் பாரம்பரிய ரக காளைகளை இழப்பதற்கு மற்றொரு காரணமாக அமையும்,'' என்றார் அவர்.