மாட்டிறைச்சி விவகாரம்: மாநில முதல்வர்களை அணி திரட்டும் கேரள முதல்வர் விஜயன்

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மாட்டிறைச்சி தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

கடந்த 1980-களுக்குப் பிறகு, இதுபோன்ற நடவடிக்கையை நாடு கண்டிராத நிலையில், பினராயி விஜயன், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழதியிருக்கிறார். அதில், பாரதீய ஜனதா ஆளும் முதலமைச்சர்களும் அடங்கும்.

கால்நடை விற்பனைக்கான புதிய விதிகளைக் கொண்டு வந்திருப்பதன் மூலம், மத்திய அரசு மாநில சட்டமன்றங்களின் உரிமைகளைப் பறித்திருப்பதாக விஜயன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் புதிய விதிகள், மாநில சட்டவிதிகளின் பிரிவு 15 மற்றும் 18-ன் வரம்புக்குள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இது சட்டப்படி செல்லாது. மேலும், ஒரு நபர் எந்த உணவு சாப்பிட வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட உரிமையைப் பாதிக்கிறது" என்று விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 1980-களில் பெரும்பாலான மாநிலங்கள் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், அதற்குப் பிறகு ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்காக அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஒரு முதலமைச்சர் கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை.

தமிழகத்தின் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன், கர்நாடக மாநிலத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே, ஆந்திரத்தின் என்.டி. ராமாராவ், மேற்குவங்கத்தின் ஜோதிபாசு, போன்ற முன்னாள் முதலமைச்சர்கள் மாநில உரிமைகள் தொடர்பாக குரல் கொடுப்பது வழக்கம்.

சென்னை, பெங்களூரு நகரங்களில் இதுபோன்ற மாநில முதலமைச்சர்கள் கூட்டங்கள் கூட்டப்பட்டன. இதில், தென்மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவையெல்லாம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் நடந்தவை. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருந்த காலம்.

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நரேந்திர மோதியும் அதே பலத்துடன் நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையில், பினராயி விஜயன் அந்தப் பிரச்சனையை எழுப்பியுள்ளார்.

"கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான, ஜனநாயகத்துக்கு எதிரான மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஒன்றுபட்டு எதிர்க்காவிட்டால், இந்த நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற கோட்பாட்டுகளை சிதைக்கும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு இது ஒரு துவக்கமாக அமைந்துவிடும்" என்று விஜயன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"மாநில அரசுகளின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாக விஜயன் கூறுவதில் நியாயம் இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த திட்டமிட்டபோது, இதேபோன்ற வாதத்தைத்தான் நரேந்திர மோதி முன்வைத்தார். விஜயனும் அதைத்தான் செய்கிறார்" என்கிறார் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, இந்தப் பிரச்சனை தொடர்பாக மிகக்கடுமையான எதிர்ப்புக்களுடன் ஒரு கடிதத்தை பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய விஜயன், முதல் கணையைத் தொடுத்தார். தற்போது, மாநில முதலமைச்சர்களை அணி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்